கிம் கி டக்: ஓவியர் ஜீவா

Dec 11 2020

Views: 2656


வாழ்க்கையின் பருவ காலங்கள்

Live each season as it passes; breathe the air, drink the drink, taste the fruit, and resign yourself to the influences of each.

HenryDavid Thoreau

கடந்த பதினைந்து வருட திரைப்பட வரலாற்றின் பக்கங்களில் நீக்கமற நிலைத்து நின்ற கொண்டிருப்பவர் யாரென்று விசாரித்தால் நம் கண் முன் வருபவர் கிம்  கி டக் என்ற கொரிய மொழி இயக்குனர். இந்த தலைமுறை திரைப்பட ரசிகர்களில் இவர் பெயர் தெரியாதவர் இருக்கவே முடியாது. எந்த திரைப்பட பயிற்சியும் இல்லாமல் ஓரு ஓவியராக இருந்து நேரடியாக இயக்குனர் ஆனவர்.
ஓவியத்துறையிலும் பயிற்சி எடுத்ததாக தெரியவில்லை. ஐரோப்பாவில் சில காலம் ஓவியராக திரிந்தது மட்டும்தான்.
இவர் படங்களின் கதாபாத்திரங்கள் அதிகம் பேசுவதில்லை. விசித்திரமான மனநிலை பெற்றவர்கள். பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்கள். பலர் பெயரற்ற மனிதர்களும் கூட, இந்த திரைப்படத்தின்
அனைத்துப் பாத்திரங்களைப்போல

Spring, Summer, Fall, Winter… and Spring இவருடைய திரைப்படங்களில் சிறப்பாக பேசப்படுபவைகளில் ஓன்று. தலைப்பு சொல்வது போல் காலங்களை தொடரும் கதைதான், ஓரு மனிதனின்
வாழ்க்கையின் சில காலநிலைகளை முன்வைத்து என்று கூட வைத்துக்கொள்ளலாம். வசந்த காலத்தில் குழந்தையாய், கோடையில் இளைஞனாய், இலையுதிர்காலத்தில் நடுவயதினனாய், மரணமும் மறுபிறப்புமான குளிர்காலமும், மீண்டும் குலுங்கிச்சிரிக்கும் வசந்தமுமாய் ஓரு வாழ்க்கை.

சுற்றிலும் மலைகள் சூழ்ந்த கானகத்தில், சலனமற்று நிற்கும் ஓரு ஏரியின் நடுவே மிதந்து நிற்கிறது ஓரு சிறிய மடாலயம். ஓரு வயதான
குருவும் மழலையான மாணவனும் மட்டும் வாழும் அங்கு செல்ல படகுச்சவாரிதான் ஓரே வழி.
இருவருக்கும் பெயர் சொல்லப்படாததால் எந்த பிராந்தியத்தையும் சுவீகரித்துக்கொள்ளும் கதைப்பாங்கு. குட்டிப்பையனுக்கு எதிலும் ஆர்வம் ஆதிகம். குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுப்புத்தி.. கூட
விளையாட யாரும் இல்லை. தனிமையில் அவனுக்கு விபரீத விளையாட்டுக்கள் பிறக்கின்றன. மீனை பிடித்து
அதனுடன் ஓரு கல்லை கட்டி நீரில் விடுகிறான். அடுத்தது சிக்கியது ஓரு தவளை. அதற்கும் இதே கதி. மூன்றாவதாக நெளிந்து நெளிந்து செல்லும் பாம்புக்கும் கல்லை கட்டினால் எப்படியிருக்கும் ….அதுவும்
நடக்கிறது. இதையெல்லாம் சலனமில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஆசிரியர் இரவில் பையன் தூங்கும்போது அவனது முதுகில் ஓரு கல்லை கட்டி விடுகிறார். அடுத்த நாள் மூன்று உயிரினங்களையும் உயிருடன் விடுவித்த பிறகே அவனுக்கு கல்லிலிருந்து விடுதலை ஏன்ற நிபந்தனையும் தொடர்கிறது. அவற்றில் ஏதேனும் ஓன்று உயிரிழந்தாலும் அந்தக்கல் அவன் வாள்நாள் முழுவதும் அவன் நெஞ்சில் தங்கிவிடுமென்று அவர்
அச்சுறுத்துகிறார். பாவம், தாளா வலியுடன் கல்லை சுமந்து கொண்டு வனத்தில் அவற்றை தேடிப்போகிறான் சிறுவன்.. மீனும் பாம்பும் இறந்து கிடக்கின்றன. தவளை மட்டும் உயிருடன் இருக்கின்றது. விடுவித்தவுடன் தடுமாறி நீந்திப்போகிறது அது. வலி சுமந்த மனதுடன் கதறி அழுகிறான் சிறுவன்.


காலம் மாறுகிறது. ஓரு கோடைக்காலத்தில் அவனை வாலிபனாகப் பார்க்கிறோம். இந்த காலகட்டத்தில் ஓரு தாயும் மகளும் குருவைப்பார்க்க வருகின்றனர். மகளுக்கு சொல்லத்தெரியாத ஓரு மனநோய். எப்போதும் களைத்து, சோர்ந்தே இருக்கிறாள். அவளை பிரார்த்தித்து குணப்படுத்த வேண்டி அங்கு விட்டுவிட்டு தாய்
செல்கிறாள். பருவ வயது கொடிதல்லவா. இளைஞனை பாடாய்ப்படுத்துகிறது. துறவுமனம் தடுமாறுகிறது. அவளை தொட்டுப்பார்க்கிறான். அவள் உதாசீனப்படுத்துகிறாள். பல சமயங்களில் சினம் கொள்கிறாள். சில சமயங்களில் அவன் குற்ற உணர்வுடன் இறைவன் சன்னதியில் கதறி அழுகிறான். இளமையும், ஆர்வமும், காமமும் பாடாய்ப்படுத்த, ஓரு நாள் அவளை அக்கரைக்கு அழைத்துச்செல்லும்போது இருவரும் இன்பம் துய்க்கும் ஓரு வாய்ப்பு மலர்கிறது.
யாருமற்ற சூழலில், பசுமையான திறந்த வெளியில், சலசலத்து ஓடும் ஆற்றின் கரையில், சுடுகின்ற பாறையின் மீது அனலாய் தகிக்கும் இரு நிர்வாண உடல்களின் ஆவேச சங்கமம் நிகழ்கிறது. கட்டவிழ்த்த காமம் …எந்தவொரு சந்தர்ப்பத்தையும் அதன் பிறகு நழுவ விடுவதில்லை. குருவுடன் படுக்கையில் படுத்திருக்கும்போதே அங்கிருந்து நழுவி அவளுடைய படுக்கைக்கு தாவும் உத்தியும் அவனுக்கு கைகூடுகிறது. அவருக்கு பல சமயங்களில் சந்தேகம் வந்தாலும் தக்க தருணத்திற்காக காத்திருக்கிறார். அவளும்
குணமாகிக்கொண்டிருப்பது தெரிகிறது. ஓரு நாள் படகிலேயே இன்பம் அனுபவிக்கின்றனர் இருவரும். களைப்பில்
படகிலேயே உறங்கியும் போகின்றனர். குருவின் கண்களில் இந்த காட்சி படுகிறது. ஓரு கயிற்றை கட்டி தன் செல்ல
சேவலை படகை நோக்கி வீசுகிறார். அது அங்கே அமர்ந்து விளிம்பைப் பற்றிக்கொள்ள, மெதுவாக தன்னை
நோக்கி இழுக்கிறார். அருகில் வந்தவுடன், படகின் ஓட்டையை அடைத்துக் கொண்டிருக்கும் ஆப்பை இழுக்கிறார்.
உள்ளே நீர் ததும்பி நிறைய ஆரம்பிக்கிறது. முயங்கிப்படுத்திருக்கும் களைத்த உடல்களின் மீது குளிர்நீர் பட்டவுடன் அலறியடித்து எழுகின்றனர் இருவரும். அவள் குணமடைந்துவிட்டாலும், அவன் பிரம்மச்சரியத்தை இழந்தது குறித்து அவருக்கு வருத்தம்தான்.
கடிந்து கொண்டு அவளை வெளியேற்றுகிறார். அதற்கு பிறகு இவனுக்கு இங்கே இருப்பதே பிடிக்கவில்லை. ஓரு இரவில் குரு வணங்கும் புத்தர் பிரதிமையை கடத்திக்கொண்டு வெளியேறுகிறான்.
ஓரு இலையுதிர்கால நாளில் குரு வெளியே சென்று பொருட்கள் வாங்கி வருகிறார். தள்ளாத வயதின் தடுமாற்றங்கள் கால ஓட்டத்தை நமக்கு குறிக்கிறது. ஓரு பழைய செய்தித்தாளை எதேச்சையாக
பார்க்கும்போது, ஆதில் மாணவனின் புகைப்படம் வந்திருக்கிறது. போலீஸ் தேடுகிறதாம்…மனைவியையே கொலை செய்த கொலைகாரன் என்ற அறிவிப்பு. தூரத்தில் யாரோ வருவது தெரிகிறது. கானகத்தில் தனியாக வந்தவன் பழைய மாணவன்தான் என்று புரிகிறது. படகை செலுத்திக்கொண்டு செல்கிறார், அவனை
வரவேற்க. அவன் முகத்திலும் கால மாற்றங்கள் தெரிகின்றன.

பழுத்த இலைகள் வண்ணம் மாறி எங்கும் விழுந்து கொண்டிருக்கும் நேரத்தில், குருவுக்கு தானும் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று புரிகிறது. படகின் மீது விறகுகளை அடுக்குகிறார். அதன் மீது அமர்ந்து கொண்டு தன் முகத்திலும் வாயிலும் கண்களிலும் தாளை ஓட்டிக்கொண்டு தனக்கு தானே நெருப்பு வைத்துக்கொள்கிறார்.
எங்கும் வாழ்க்கை உறைந்து கிடக்கும் ஓரு பனிக்காலத்தில் விடுதலையாகி வருகிறான் அவன். பசுமை மறைந்து
ஏரியே ஓரு பெரும் பனிப்பாளமாகி உறைந்து கிடக்கிறது. அருவிகளில் பாயும் நிலையிலேயே நீர் உறை சிற்பமாக காட்சியளிக்கும் வெற்றுத் தோற்றம். எங்கும் சில்லிட வைக்கும் வெறுமை. எரிந்த படகில் மீதியிருக்கும் ஆசிரியரின் சாம்பலை சேகரித்து இறுதி மரியாதை செய்கிறான். இனி தன் இடம் இதுதான்
என்று உணர்ந்து புத்த பிட்சுக்களுக்கே உரிய யோக முறைகள், போர்த்திறன் பயிற்சிகளில் முழுமையாக ஈடுபடுகிறான் அவன். இப்போதும் ஓரு புதிய வரவு…தன் மழலையுடன் அங்கு தேடி வருகிறாள் ஓருத்தி. முகம் காட்டுவதேயில்லை அவள். மடத்தின் வாயில் அருகே குழந்தையை வைத்துவிட்டு திரும்பும்போது
உறைபனி துளைக்குள் விழுந்து குளிர்நீரில் மாண்டுபோகிறாள்.

பழைய குருவுக்கு இவன் கிடைத்தது போல, இவனுக்கும் இப்போது ஓரு குழந்தை.

மீண்டும் ஓரு வசந்த காலம். குழந்தை மாணவனாகி, விளையாட்டுத்தனங்களிலும் ஈடுபடுகிறான். இவன்
மலைகளின் மீது புத்தர் சிலையுடன் ஓரு நெடும் பயணம் மேற்கொள்கிறான். தூரம் தூரமாய் நடந்த பயணம் ஓரு மலை உச்சியின் மீது இவனை தவக்கோலத்தில் இருக்கச்செய்ய எங்கோ தொலைவில் தெரிகிறது அந்த சலனமற்ற ஏரியும் மிதக்கும் மடாலயமும்.

இந்த திரைப்படத்தை பார்ப்பதே ஓரு அற்புத அனுபவம். தொடர்பற்ற காலநிலைகள் வெகு அழகாக மனிதர்களின் உள்ளப் பிரதிபலிப்புகளாக சித்தரிக்கப்படும் அழகு. நீண்ட மௌனங்கள். குறைந்த சொல்லாடல்கள். திரை முழுதும் ஆக்கிரமிக்கும் இயற்கையின் அமைதியான கணங்கள், அந்த சலனமற்ற ஏரியைப்போல அற்புத அனுபவங்களை தருகின்றன. படம் முழுவதும் நிறைந்திருக்கும் பவுத்த தத்துவ கணங்கள், கதாபாத்திரங்களின்
கண்வீச்சுகளும் உடல்பாவங்களும் ஓரு தனித்தன்மையான நிறத்தை இந்த படத்திற்கு கொடுக்கின்றன. மடம், படகு சார்ந்த விஷயங்கள் ஓரு மாந்திரீக உணர்வைத்தருவது போல அமைத்து கூடுதல் செறிவை தருகிறார் இயக்குனர். மடம் மிதக்கிறதா இல்லையா, படகை சில நேரங்களில் செலுத்துவது எது என்றெல்லாம்
புதிர்கள் மாந்திரீக யதார்த்தத்தின் விளிம்புகளை தொட்டு நிற்கின்றன. காலநிலை மாற்றங்கள் மனித மனங்களைப்போலவே சித்தரிக்கப்படுகின்றன. அனைத்து கதாபாத்திரங்களும் ஓரு கதவின் வழியே கதைகள் நுழையும் அற்புத உத்தி.
மீன், தவளை, பாம்பு, சேவல், பூனை என்று காட்சிகளில் தோன்றும் மிருகங்களும் சித்தரிக்கப்படும்
விதத்தில் கலை ஆளுமை மிளிர்கின்றது.. இத்தனைக்கும் இயக்குனர் மிருகங்களை வதைப்பவர் என்ற அவப்பெயரும்
பெற்றவர்தான். இளம் காதலர்களின் காதல்வேட்கைகள் காமத்தில் தோய்ந்த கவிதைகளாக வெளிப்படுகின்றன.
பருவநிலை மாற்றங்களுக்கேற்ப மாணவனாக தோன்றும் நடிகர்கள் மாறிக்கொண்டிருக்கின்றனர். ஓரு சிறப்பு,
முதன் முறையாக இயக்குனரும் இதில் நடிகராக, மாணவன் வேடத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

கால மாற்றங்களின் வரிசையை வாழ்க்கையின் மதிப்பீடுகளின் வைத்து பார்க்கும் இந்த திரைப்படம் இயக்குனர்
கிம்மின் மகத்தான படைப்புக்களில் சிறந்த ஓன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை.

ஓவியர் ஜீவா

தேசிய விருது பெற்ற கலைஞர்.

x
^