கேன்ஸ் திரைப்படவிழா: தினகரன் ஜெய்

May 19 2022

Views: 2017

Cannes Film Festival

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன் என்கிற நகரத்தில் நடக்கும் Festival de Cannes என்கிற திரைப்பட விழா உலகப் புகழ் பெற்றது. இங்கு சிறந்த படத்திற்காக தரப்படும் Palm d’Or (Golden Palm) என்கிற விருதை ஒரு திரைப்படம் வாங்கிவிட்டால் போதும். அதற்கு பிறகு அப்படத்தின் இயக்குனர், நடிகர் என்று அனைவரும் உலகம் முழுவதும் புகழ் பெறுவதோடு அப்படத்தின் வியாபாரம் வணிக படத்திற்கு நிகரான வியாபாரமாக மாற ஆரம்பித்து விடும்.

ஆனால் இந்த ஒரு விருதிற்காக மட்டும் யாரும் தங்கள் படத்தை இங்கு அனுப்புவதில்லை. மாறாக இங்கு தங்களுடைய படம் திரையிடப்படுவதையே ஒரு கௌரவமாக நினைக்கிறார்கள்.

இப்போது இந்த விழாவிற்கு நம்முடைய திரைப்படம் அல்லது குறும்படத்தை எப்படி அனுப்புவது என்பதைப் பார்க்கலாம்.

 

கேன் திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் பன்னிரண்டு நாட்களுக்கு நடக்கிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் உங்கள் படங்களை எப்போது அனுப்ப வேண்டும் என்கிற தேதியை அறிவிப்பார்கள். அந்த நாட்களுக்குள் உங்கள் திரைப்படம் அல்லது குறும்படத்தை அனுப்பி விடவேண்டும். அதன் பிறகு தரமான 50 திரைப்படங்களையும் 30 குறும்படங்களையும் தேர்வு செய்து கேன் நகரத்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடுவார்கள். திரையுலகை சேர்ந்த எட்டு நடுவர்கள் ஒரு சிறந்த திரைப்படத்தையும் ஒரு சிறந்த குறும்படத்தையும் தேர்வு செய்வார்கள்.

Festival-cannes.com

மேலே இருப்பதுதான் கேன் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம். இங்கு சென்று உங்கள் பெயரில் ஒரு கணக்கை துவக்கிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் மேட்டர். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் உங்கள் படத்தை அங்கு (Upload)அனுப்ப வேண்டியதுதான் உங்களுடைய வேலை.

கட்டணம்:
திரைப்படம் – 450 டாலர்
குறும்படம் – 25 டாலர்.

அகாடமி (ஆஸ்கார்) விருதுக்கும் இந்த கேன் விருதுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஒரு இந்திய திரைப்படம் அகாடமி விருதுக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் இந்திய அரசாங்கம் அந்த படத்திற்கு அனுமதி தர வேண்டும். பின்னர் இந்திய தேர்வு குழு ஒரு படத்தை தேர்வு செய்து அமெரிக்காவிற்கு அனுப்புவார்கள். அமெரிக்கவில் இரண்டாவது சுற்றுக்கு நூறு படங்களை தேர்வு செய்வார்கள். பின்னர் இறுதிப்போட்டிக்கு நான்கு படங்களை மட்டும் தேர்வு செய்வார்கள். எல்லாம் இடத்திலும் உங்களுக்கு லாபி செய்ய தெரிந்திருக்க வேண்டும். யாரையும் பகைத்துக் கொண்டு நீங்கள் விருதுக்கு அனுப்ப முடியாது. ஆனால் கேன் விருதுக்கு எந்த அரசாங்கத்திடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. யாரிடமும் லாபி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. யார் வேண்டுமானாலும் தங்கள் படத்தை அங்கு அனுப்பலாம். படத்தின் தரம் மட்டுமே முக்கியம்.

தமிழகத்தில் இருந்து பில்லா(அஜித்), கோச்சடையான், விக்ரம் (புதிய) மற்றும் சில மணிரத்னத்தின் படங்கள் அங்கு திரையிடப் பட்டிருக்கின்றன. ஆனால் அவை எதுவும் Official Entry கிடையாது. ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டினால் யார் வேண்டுமானாலும் தங்கள் படத்தை அங்கு திரையிட்டு விளம்பரம் தேடிக் கொள்ளலாம். இது விருது பிரிவில் சேராது.

அதேபோல் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக உலகில் உள்ள நிறைய திரை பிரபலங்களுக்கு சிறப்பு அழைப்பிதழ்கள் அனுப்பப்படும். அதை ஏற்றுக் கொண்டு அனைவரும் இதில் கலந்துகொள்வார்கள். இந்த வருடம் அப்படித்தான் டாம் குரூஸ், தீபிகா படுகோனே, மாதவன் போன்றவர்கள் இதில் கலந்துகொண்டு வருகிறார்கள். இப்படி கலந்துகொள்ளும் அனைத்து விருந்தினர்களையும் சிகப்பு கம்பளத்தில் நடக்க வைத்து கௌரவிக்கப்படுவார்கள்.

பார்வையாளர்கள் கட்டணம் (2018).
ஒரு நாளைக்கு : 7 டாலர்.
12 நாட்களுக்கு: 50 டாலர்.

இந்த வருடம் விழா நடைபெறும் நாட்கள்:
May 17-28.

இறுதியாக, Cannes என்கிற வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்கிற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கும்.

இதை கான், கேன்ஸ் என்று அழைப்பது தவறு.

கேன் என்பதே சரியான உச்சரிப்பு. அதாவது ஆங்கிலத்தில் Kane, Kaen போன்ற வார்த்தைகளை உச்சரிப்பது போல் இதை உச்சரிக்க வேண்டும்.

Facebook Address:
Festival de Cannes

Article by

Dinakaran Jai

x
^