சிகாவின் வரலாறு
காலங்களாய்த் தொடரும் அர்ப்பணிப்பு மிக்க சேவை

பலம் வாய்ந்த முதலாளி வர்க்கம், தொழிலாளர்களை அடக்குமுறை செய்து ஆள முயல்வதும், அடிமைப்படுத்திட முற்படுவதும், காலம் காலமாய் உலகெங்கிலும் நிலவி வரும் ஒரு வழக்கமாகும். எப்போது முதலாளித்துவம் என்ற ஒன்று உருவானதோ, அப்போதே தொழிலாளர் போராட்டமும் இருந்து வந்திருக்கிறதுதான்.

ஆயினும் கடந்த சில நூற்றாண்டுகளாகவே, அதாவது தொழிற்புரட்சிக்குப் பின்னரே தொழிற்சங்கங்கள் ஒரு வடிவத்தையும், சீர்மையையும் பெற்று, ஒருங்கிணைந்து செயலாற்றி வருகின்றன.

முன்னேற்றம் அடைந்த மேற்கத்திய நாடுகளிலும் கூட தொழிற்சங்கங்கள் உருவாகி, பல போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் பிறகே, உரிமைகள் நிலைநாட்டப்பட்டன. அதற்குப் பின்னரே நியாயமான ஊதியம், ஊக்கத்தொகை, விடுமுறை, அடிப்படை வசதிகள், ஓய்வூதியம் போன்றன தொழிலாளர்களுக்குக் கிடைத்தன.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், பொதுவெளிக்கு சினிமா வந்த போதிலிருந்தே ஊடகத்துறையில், மனித வரலாறு அதுவரை அறிந்திராத வகையில் மிகவும் சக்திவாய்ந்த ஊடகமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. இதற்குக் காரணம், மனிதனை உணர்வு சார்ந்து நேரடியாக பாதிக்கும் ஒரு பலமான கருவியாக அது அமைந்து விட்டதுதான். இந்தியாவில், அதிலும் குறிப்பாக தென்னாட்டில், ஆளுமை மிக்க, மிகப் பெரிய அரசியல் தலைவர்களை உருவாக்கியதே சினிமாத் துறைதான்.

ஆனால், அதே நேரம் ஒரு சினிமா உருவாகவும், வெற்றிபெறவும் முக்கியக் காரணமான, திரைக்குப் பின்னிருக்கும் தொழிலாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் இன்றளவும் கண்டுகொள்ளப்படாமலேதான் இருக்கின்றனர் என்பது ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். திறமை வாய்ந்தவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைப்பதில்லை. திரைப்படம் வெளிவரும் முன்னதாகவே, அதன் வெற்றிக்குக் காரணமானவர்களை உலகம் மறந்து விடுகிறது.

மேலும், இதில் குறிப்பிடப்படவேண்டியது, இந்த தொழிலாளர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும், பெரும் போராட்டங்களையும், கஷ்டங்களையும் கடந்துதான், சினிமாத் துறையில் தங்களுக்கான இடத்தை அடைகின்றனர். தங்கள் வாழ்நாளெல்லாம் இந்தத் துறையில் பாடுபட்டு உழைத்தப் பின்னும் அதிலிருந்து ஓய்வு பெறும் பொழுது, பலரும் ஏழ்மையிலும், தனிமையிலும், தங்கள் வயோதிகக் காலத்தைக் கழிக்க நேர்கிறது.

இந்த நிலையில், பொறுப்புள்ள சில மூத்தக் கலைஞர்கள் தங்களை ஒன்றாக இணைத்துக் கொண்டு, தொழிலில் ஈடுபடும் காலத்திலும், அதற்கு பின்னும், தொழிலாளர்களின் நலம் காக்க ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள தீர்மானித்தார்கள். ஆனால், அந்தக் காலகட்டத்தில் சினிமா தொழிலைக் கைப்பற்றிக் கொண்டிருந்த சில முக்கிய நபர்களும், நிறுவனங்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில், முக்கியமான பெயர்கள் கல்கத்தாவின் நியூ தியேட்டர்ஸ், பம்பாய் டாக்கீஸ், சாகர் மூவிடோன், பம்பாயின் வாடியா சகோதரர்கள் மற்றும் பூனாவிலிருந்து பிரபாத். அக்காலத்தில், தென்னிந்தியத் தயாரிப்பாளார்கள் படம் தயாரிப்பதற்காக பம்பாய் அல்லது கல்கத்தாவிற்கு செல்ல வேண்டியிருந்தது.

இரண்டாம் உலக போர் முடிந்து, அதன்பின் நாடு விடுதலை அடைந்த பிறகு ஏராளமான தயாரிப்பாளர்கள் உருவானார்கள். வியாபாரம் பெருகி பல ஸ்டூடியோக்கள் உருவாயின.

முதலில், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் மாத ஊதிய அடிப்படையில் வேலை பார்த்துவந்தனர். அதன்பின் படத்திற்குப் படம் தனிப்பட்ட ஒப்பந்த முறை கொண்டுவரப்பட்டது. பலரும் இந்தத் துறையில் கால்வைக்க ஆரம்பித்ததும் அவர்களுக்குள் கடுமையான போட்டி ஏற்பட்டது. இதைப் பயன்படுத்திக் கொண்டு மிகக் குறைவான ஊதியத்துக்கு தயாரிப்பாளர்கள் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். இதனால் அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் பெறவில்லை. இந்தச் சூழ்நிலையில் இவர்களின் நிலைமையை சரிப்படுத்த தொழிற்சங்கங்கள் அவசியப்பட்டன. சினிமா துறையின், முன்னோடியான பம்பாயிலேயே முதல் தொழிற்சங்கமும் உருவானது.

‘சொசைட்டீஸ் ஆக்ட்’டின் கீழ், தென்னிந்திய சினிமா துறையில் முதல் முறையாக, ‘சினி டெக்னிஷியன்ஸ் அசோசியேஷன் ஆஃப் சௌத் இந்தியா’ என்ற பெயரால், காலஞ்சென்ற திரு.ராம்நாத் அவர்கள் ஒரு அமைப்பைத் துவக்கி வைத்தார். ஆரம்ப காலத்தில், கலை மற்றும் பண்பாட்டு அடையாளமாகவும், கூட்டுறவாக இயங்குவதற்காகவுமே இந்த அமைப்பு செயல்பட்டது. பிறகு 1956ல்தான், ‘சினி டெக்னிஷியன்ஸ் கில்ட் ஆஃப் சௌத் இந்தியா’ என்ற பெயரால் முதல் யூனியன் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சினிமாத் துறையின், அத்தனை உட்பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ்வைத்து, பொதுவானதாக செயல்பட்டது. இதைத் துவக்கி வைத்தவர் திரு. நிமாய் கோஷ் அவர்கள். அவர் பெங்காலிலிருந்து வந்து, சென்னையில் குடியேறி, கடைசி மூச்சு வரை இங்கேயே பணியாற்றியவர்.

14 ஆண்டுகாலமாக CTG படிப்படியாக வளர்ந்தது. அதன்பின் சினிமாவின் ஒவ்வொரு உட்பிரிவுகளுக்கும், தனித்தனியான சங்கங்களை அமைக்க வேண்டிய தேவை உருவானது. அதன் அடிப்படையில், 28-11-1972ல், சௌத் இண்டியன் சினிமாட்டோகிராபர் அசோசியேஷன் (SICA) என்ற பெயரில் 17 பேர் கொண்ட குழுவால், டிரேட் யூனியன் ஆக்ட் 1926ன் கீழ் ஒளிப்பதிவாளர்களுக்கான சங்கம் துவக்கப்பட்டது. இதன் முதல் நிர்வாகக் குழுவாக திரு. A.வின்சென்ட் – நிறுவிய தலைவர், திரு. P.N சுந்தரம், பொதுச்செயலாளர் மற்றும் திரு. S மாருதி ராவ் பொருளாளர் ஆகியோர் பதவியேற்றனர். இது எண்: 3, துரைசாமி ரோடு, சென்னை-34, என்ற முகவரியில், திரு P.N சுந்தரம் அவர்களின் இல்லத்திலிருந்து செயல்பட்டது. அவர் மிகவும் பெரிய அளவில் தொழில் செய்துகொண்டிருந்த போதும், சங்கத்துக்காகவும் அயராது உழைத்தவர்.

ஜாதி, மதம், மொழி அல்லது மாநிலம் என்கின்ற பேதம் எதுவுமின்றி, தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கன்னடம் என நான்கு மாநில உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டனர். வேலை முடிந்த பிறகு, பொறுப்பாளர்கள் இரவில் சந்தித்து சங்கத்தின் மேம்பாட்டைப் பற்றி கலந்து பேசுவார்கள். அங்கத்தினர்களிடையே ஒற்றுமையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்து, தயாரிப்பாளர்களிடமிருந்து தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தர திட்டங்களைத் தீட்டுவார்கள். மாத ஊதியமாக இருந்தாலும், ஒப்பந்தப் பணி முறையில் இருந்தாலும் அவர்களுக்கு உழைப்பிற்கேற்ற பலனையும், வசதிகளையும் வாங்கித் தருவதற்கான அனைத்து முயற்சிகளையும் SICA அசோசியேஷன் எடுத்து வந்தது.

ஆனால், அது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்கவில்லை. காரணம் ஸ்டுடியோக்களிலும், வெளிப்புற யூனிட்களிலும் வேலை பார்க்கும் ஒளிப்பதிவாளர்கள், மற்றும் உதவியாளர்கள் முழுமையாக தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தனர். மேலும் திரைப்படக் கல்லூரிகளிலிருந்து புதிதாக மாணவர்கள் வெளியேறி ஒளிப்பதிவுத் துறையில், நூற்றுக்கணக்கில் இணைந்து கொண்டிருந்தனர். இந்தச் சமயத்தில்தான், திரைப்பட உலகில் அனைத்துத் துறைகளையும் இணைத்துச் செயல்பட FEFSI எனும் கூட்டமைப்பு நிறுவப்பட்டது. Film Employees Federation of Southern India என்கின்ற அமைப்பு பதிவு செய்யப்பட்டவுடன் முதலாளிகள் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழிலாளர்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டன.

ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் சமாளித்து, சங்கம் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. சில தோல்விகளுக்கு மத்தியிலும், உறுப்பினர்களுக்கு நியாயத்தையும் சலுகைகளையும் பெற்று தரும் முயற்சியைத் தொடர்ந்தது. சங்க நடவடிக்கைகளையும் சீர்படுத்தி வந்தது. தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களைத் தீட்டி செயல்பாடுகளைத் திட்டமிடுவதற்காக, வாரத்தின் இரண்டாம் ஞாயிறு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அங்கத்தினர்களுக்காக விதிமுறைகளை வரையறுத்து, மீறுபவர்களைத் தண்டித்து சரியானக் கட்டுப்பாட்டை நிலைநாட்டி வந்தது. ஒரு தொழிலாளருக்கு ஊதியம் பாக்கி இருக்கும் போது, வேறு யாரும் அவர் வேலையை ஏற்றுக்கொண்டு முடித்துத் தர அனுமதி கிடையாது. அதே போல், தொழிலாளர்களும் தங்கள் உறுதிமொழிக்கேற்ப நடந்து கொள்ளத் தவறினால், தயாரிப்பாளர்களுக்கு முன்பணத்தைத் திருப்பித்தர கட்டளையிட்டது.

1972ல், அலுவலகம் 57, ஆற்காடு சாலை எனும் முகவரிக்கு மாற்றப்பட்டது. அதே முகவரியில் FEFSI, SICA, தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட கலை இயக்குனர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கம் போன்றனவும் ஒருங்கே செயல்பட்டு வந்தன. மற்றவர்களின் அல்லது அரசியல் கட்சிகளின் எந்தவித தலையீடு எதுவுமின்றி, இந்த அனைத்து சங்கங்களும் சுதந்திரமாக சேவை மனப்பான்மையோடு செயல்பட்டன. அந்தக் காலத்தில் உறுப்பினர்கள் தங்கள் வேலை அல்லது ஒப்பந்தம் எப்போது போகுமோ என்ற பயத்திலேயே வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். அந்த அளவுக்கு தயாரிப்பாளர்களிடையே எதிர்ப்பு உணர்ச்சி இருந்து வந்தது.

1973 ஆம் ஆண்டு தென், மேற்கு மற்றும் கிழக்கு மண்டல மாநாடு சென்னையில் நடைபெற்றது. மூன்று மண்டலங்களிலிருந்தும் உறுப்பினர்கள் வந்து, கலந்துரையாடி, விவாதித்து, பல முடிவுகளை எடுத்தார்கள். அதன் விளைவுதான் இந்திய திரைப்படத்துறையின் ஏகப் பிரதிநிதியாக அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பு நிறுவப்பட்டது.

பல்லாண்டு காலமாக முதலாளிகளின் கைகளில் அவதிப்பட்ட தொழிலாளர்களின் நிலைமை சீர்படுவதற்காக பல புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஸ்டூடியோக்களிலும், லேப்களிலும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு குறிப்பிடப்பட்ட வேலை நேரம், அதிக நேரத்துக்கான முறையான ஊதியம், விடுமுறை நாட்களில் வேலை பார்ப்பதற்கு கூடுதல் ஊதியம் மற்றும் மாற்று விடுமுறை, தொழிலாளர் சட்டத்தின்படி ஊக்கத்தொகை போன்ற பல சலுகைகள் பெறப்பட்டன. வேலையிலிருந்து தன்னிச்சையான நீக்கம் நிறுத்தப்பட்டது. காலப்போக்கில் சங்கத்தின் பொருளாதார நிலையும் முன்னேறி வந்ததால் அங்கத்தினருக்கு கடன் வசதி, மருத்துவ உதவி, வயோதிக மானியம், இறுதி மரியாதைச் செலவு போன்ற பல வசதிகள் செய்து தரப்பட்டன.
தொடர்ந்த நாட்களில் திரைத்துறையின் வளர்ச்சியால், சென்னையில் 22 ஸ்டூடியோக்கள் இயங்கிய சூழலில் சங்கத்தின் பிரச்சனைகளும் கூடிக் கொண்டே போனது. 1976ல் அகில இந்திய ஒளிப்பதிவாளர் மாநாடு நடைபெற்றது. அதில் மூன்று மண்டல சங்கங்கள் பங்கேற்று பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தார்கள். சென்னை, பெங்களூர் மற்றும் பூனா திரைப்படக் கல்லூரிகளிலிருந்து வெளிவரும் மாணவர்களோடு போட்டிப் போட்டுக்கொண்டு, புதிய தொழில்நுட்பத்தோடு வரும் புதிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக, சங்கத்தில் உறுப்பினராக இணைய விரும்புவோர் குறைந்தபட்சம் மேநிலைப் பள்ளிக்கல்வியில் தேறியிருக்க வேண்டும் என்ற விதி சேர்க்கப்பட்டது. மூத்த அங்கத்தினரின் அனுபவத்தை பகிர்ந்து பயன் பெற அவர்களை அழைத்து இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

தொழில்நுட்பம் வளர வளர, இயக்குனர்களும், ஒளிப்பதிவாளர்களும் ஸ்டூடியோகளை விட்டு வெளிப்புற காட்சிகளை அதிகப்படியாக எடுக்கத் துவக்கினார்கள். இதனால் ஸ்டூடியோக்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டன. வெளிப்புறப் படப்பிடிப்புகளை செவ்வனே நடத்த, உயர்ந்த தொழில்நுட்பம் கொண்ட சாதனங்கள் தேவைப்பட்டன. கருப்பு, வெள்ளை படச்சுருள் மெல்ல மெல்லக் காணாமல் போய், வண்ணப்படச்சுருள் முழுவதுமாக ஆக்கிரமித்தது. அவற்றுக்கேற்ற கேமராக்களை உபயோகிப்பதற்கு அங்கத்தினருக்கு விரைவாக பயிற்சி அளிக்க வேண்டியிருந்தது. அதே போல லைட்டிங் தொழில்நுட்பமும் நிறையவே மாறியிருந்தது. இவற்றுக்கெல்லாம் சங்கம் போர்க்கால நடவடிக்கை எடுத்து உறுப்பினர்கள், தங்கள் தகுதிகளை வளர்த்துக்கொண்டு நவீன சாதனங்களை பயன்படுத்த பேருதவி புரிந்தது.
1989ல் தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகிய இரு தரப்புமே வேலை நிறுத்தம் செய்த விசித்திரமான நிகழ்வு நடந்தது. சமாதானம் ஏற்படுகிற வழியாக இல்லையென்பதால், தமிழக அரசாங்கம் தலையிட்டு, தொழிற்துறை மற்றும் உள்துறை அமைச்சகங்கள் மூலமாக, இரு தரப்பினரையும் ஒன்று சேர்த்து, ஒப்பந்தப்பிரிவுகள் 12(3) மற்றும் 18(1) இவைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என நிர்பந்தப்படுத்தியது.
வேலை நிறுத்தம் இருக்கவே கூடாது, பிரச்சினைகளைப் பேச்சு வார்த்தை மூலமாகவே தீர்க்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் FEFSI உறுப்பினர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். FEFSI உறுப்பினர்களும் அதே போல் கட்டுப்பட வேண்டும்.

உண்மையான நிலை என்னவென்றால், இந்த ஒப்பந்தப் பிரிவுகள் எல்லா நேரமும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இருப்பினும், சரியான பாதையை நோக்கிச் செல்ல, இவை அனைவருக்கும் உதவுகிறது. FEFSI யும் SICAவும் இணைந்து தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சங்கத்துடன் ஒத்துழைத்து பல பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டன.

உள்துறைத் செயலாளருடன் சங்கத்தின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலின் நிலைபாட்டைக் குறித்து அறிக்கை கொடுத்து, தொழிலாளர்களுக்கான நீதியை வழங்குவதற்காக எடுத்துக்கொண்டனர். இதன்மூலம் இரு தரப்பினருக்கும் நீதி கிடைக்கச் செய்தனர். சினிமா தொழில் முழுவதுமாகப் பயன்பெற்றது. தொழிலாளர்களின் நலனுக்காக கூட்டமைப்பு தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக் கொண்டே வந்தது. திரு. ஐ.கே.குஜ்ரால், திரு. எல்.கே.அத்வானி, திரு. எச்.கே.எல்.பகத் போன்ற மத்திய அமைச்சர்களோடு பலமுறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. திருமதி. இந்திராகாந்தி பிரதமராக இருக்கும்பொழுது தயாரிப்பாளர்களுக்குச் சாதகமாக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவர முயன்றார். அந்த சட்டத்தின் அனைத்து அம்சங்களையும், தீவிரமாக ஆராய்ந்து இருதரப்பினருக்கும் பொதுவாகவும், நீதி வழங்கும் விதமாகவும் பல திருத்தங்களைச் சமர்ப்பித்தது சங்கம். இந்த முயற்சிகளால் மத்திய அரசு மூன்று சட்டங்களை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது, அதாவது, “The Cine Workers’ Welfare Cess Act 1981”, “The Cine Workers’ Welfare Fund Act 1981”, and “The Cine Workers’ and Cinema Theatre Workers (Regulation of Employment) Act 1981”. இதன் வாயிலாக 1984இல் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இவற்றை அமலாக்குவதில் பல தரப்பினரும் மெத்தனமாக இருக்கிறபடியால், முழுமையான பலன்கள் தொழிலாளர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை.

காலப் போக்கில் சங்கத்தின் பொருளாதார நிலை வளர்ந்து, தி.நகர் உஸ்மான் ரோட்டில், சங்கத்துக்காக 1981ஆம் ஆண்டு ஒரு புதிய அலுவலகம், சொந்தமாக வாங்கப்பட்டது. புதிய உறுப்பினர்களைச் சேர்த்துக்கொண்டு சங்கம் வேகமாக வளர்ந்தது. ஆனால், அண்டைய மாநில அரசுகள் படத்தயாரிப்பாளர்களுக்கு, பல சலுகைகள் வழங்கியதால் தனிப்பட்ட சங்கங்களும், அவற்றின் அங்கத்தினர்களும் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்று தயாரிப்பு நிலையங்களை அமைத்தார்கள். இதனால் சங்கத்திற்கும், உறுப்பினர்களுக்கும் பிரச்சனைகள் உருவாயின. சங்கத்தேர்தல்களில் கடும்போட்டி ஏற்பட்டு, அடிக்கடி குழு மோதல்கள் ஏற்பட்டன. சில சமயங்களில் மாநில முதலமைச்சரே தலையிட்டு பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியிருந்தது.

1997ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் SICA தனது வெள்ளிவிழாவைக் கொண்டாடியது. சங்கத்தின் சேவைகளை அவர் உயர்வாகப் பேசிப் பாராட்டினார். விழாவில் திரு.ஹேமச்சந்திரன் தொகுத்த Indian Cinematographers’ Manual எனும் கையேடு வெளியிடப்பட்டது. இவ்வளவு வளர்ச்சிக்கு இடையிலும் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து கொண்டேதான் இருக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைக்க சங்கம் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டுதானிருக்கிறது. SICA தலைவர் திரு. பி.கே.சுந்தரம் அவர்கள் கடும் முயற்சி எடுத்து, தமிழ்நாடு படைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்புக்கும், FEFSIக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கவைத்து ஒப்பந்தம் ஏற்படுத்தித் தந்தார். சினிமாத் தொழிலில் கடும் போட்டி இருக்கின்ற பொழுதும் SICA எப்போதும் நடுநிலையில் நின்று அனைவரின் நலனுக்காகவும் பாடுபட்டு வருகிறது.
இப்படியெல்லாம் பல்வேறு வளர்ச்சிகளை எட்டிய பின்னும் தொழிலாளர்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. பல்வேறு காரணங்களால், பல ஸ்டூடியோக்கள் மூடப்பட்டதால் பலருக்கும் வேலையில்லாமல் போய்விட்டது. அவர்களுக்காக சங்கம் போராடி, நஷ்ட ஈடு வாங்கி தந்தது. அவர்களுக்கு வெளிப்புற யூனிட்டுகளில் வேலை வாங்கித்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டன, பலரும் தன்னிச்சையாக இயங்கும் ஒளிப்பதிவாளர்களாக, தொழில்நுட்ப வல்லுநர்களாய் மாறி வேலை தேடிக் கொண்டார்கள்.

பலரும் இது போல, தன்னிச்சையான வாய்ப்பை (Freelancing) ஏற்படுத்திக்கொண்டபோது புதிய பிரச்சனைகள் எழும்பின. தயாரிப்பாளர்கள் சிலர், அவர்களுக்கு ஒப்பந்த நகலைத் தர மறுத்தார்கள். ஊதியமும் சரி வர கொடுப்பதில்லை. சங்கம் தலையிட்டு, ஒப்பந்த பத்திரத்தைக் கொடுக்க வலியுறுத்தினார்கள். FEFSI மூலமாக தயாரிப்பாளர்களோடு போராடி, ஊதியத்தையும் ஒழுங்காகத் தர ஏற்பாடு செய்தார்கள். அப்படிக் கொடுக்க மறுத்தால் வேலை நிறுத்தம் செய்யும் அளவிற்குப் போராடத் தயாராக இருந்தது. ஆனால் சில உறுப்பினர்கள், தொடர் வாய்ப்புகளை இழக்க நேரிடுமோ என்ற எண்ணத்தில், தயாரிப்பாளர்களுக்குப் பயந்து புகார் செய்யத் தயங்கினார்கள். இதனால், அவர்கள் பல நேரங்களில், பணத்தையும் இழக்க நேர்ந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர்களும், ஒன்று சேர்ந்து சங்கத்தை எதிர்க்கத் துவங்கினார்கள். உறுப்பினர்களில் சிலரே, தயாரிப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும் உயர்ந்து, தங்கள் முன்னாள் முதலாளிகளோடு இணைந்து செயல்படத் துவங்கினார்கள். 10-6-1981 அன்று “இந்து” பத்திரிக்கையில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டார்கள். இதில் அவர்கள் கூறியது: “FEFSI யிலிருந்து நாங்கள் விலகி விட தீர்மானித்துள்ளோம். திரைப்பட உலகின் மேம்பாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும் அதிக அளவு சிந்தித்துதான் இந்த முடிவிற்கு வந்துள்ளோம். புதிதாக SAFE எனப்படும் ஒருங்கிணைந்த தென்னிந்திய திரைப்பட தொழிலாள சங்கத்தை துவக்கியுள்ளோம்”. அதில் 2200 பேர் கையொப்பம் இட்டிருந்தார்கள். ஆனால் அதில் பலர் SIFDA வின் அங்கத்தினர்களே அல்ல. வேலை நீக்கம் செய்து விடுவதாக மிரட்டி அங்கத்தினர்களை SICA – வை விட்டு விலகி SAFE-ல் சேர வைத்தார்கள். பல போரட்டங்களும், வேலை நிறுத்தங்களும் நடந்தது. சங்கம் எடுத்த முயற்சியில், பலரும் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும் இயக்கத்திற்கு திரும்பினார்கள். திரைப்படத்துறையின் ஒற்றுமையைக் கருதி, பின்னர் SAFE யூனியனை திரு DSJ ராஜு கலைத்துவிட்டார். தயாரிப்பாளர்களால் நிறுவப்பட்ட பல சங்கங்கள் ஒவ்வொன்றாக மறைந்து விட்டன. 23 ஆண்டுகால தொடர் போராட்டத்தில் SICA மென்மேலும் சக்தி வாய்ந்த இயக்கமாகத் திகழ்கிறது.

உலகளவில், சினிமா தொழிலாளர்களின் திறமைக்கு ஈடுகொடுக்கும்படி நம்முடைய தொழிலாளர்களையும் வளர்ப்பதற்காக கூட்டமைப்பு பாடுபட்டு வருகிறது. பிறநாட்டு தூதரகங்களுடன் இணைந்து, உலக மொழிகளின் சிறந்த படங்களை வரவழைக்கப்பட்டு உறுப்பினர்களுக்காகத் திரையிடப்படுகின்றன. இதனால், உலகளவில் நிகழும் சாதனைகளையும், மாறிவரும் ரசனைகளையும், தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் அவர்களால் அறிந்துகொள்ள முடிகிறது. பல நாடுகளிலிருந்து பல்வேறு துறைகளில் நிபுணர்களை அழைத்துப் பயிலரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கறுப்பு, வெள்ளை காலத்திலிருந்து வண்ணப் படங்கள் தயாரிக்கத் தொடங்கியபோது இந்த முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன.

சினிமா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மருத்துவ வசதியும், பிள்ளைகளின் படிப்பிற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது. இந்த சேவைகளுக்காகத் தொடர்ந்து சங்கத்துக்கு நிதி தேவைப்படுகிறது, திரட்டப்படுகிறது. தயாரிப்பாளர்களிடமிருந்து 10 லட்சத்திற்கும் மேல் திரட்டப்பட்டுள்ளது. இருபது உறுப்பினர்களுக்கு ரூபாய் 40,000 மருத்துவ உதவியாகவும், சிறு கடனாக ரூபாய் 40,000 மும், குடும்ப நலனுக்கென ரூபாய் 15,000 மும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 600க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, இசை நிகழ்ச்சிகள் நடத்தியும், நூல்கள் வெளியிட்டும் சங்கம் நிதிசேர்க்க நல்முயற்சிகள் எடுத்துவருகிறது.

சமுதாயத்திற்குத் தேவையான சிறந்த பொழுதுபோக்கை திரைப்படத்துறை வழங்கி வருகிறது. அத்துறையின், ஏழை எளிய தொழிலாளர்களுக்குத் தேவையான உதவியை வழங்க சங்கத்தின் பொருளாதார பலம் உயரவேண்டியுள்ளது. அதில் பங்களிக்க தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுநல அமைப்புகளும், தனி நபர்களும் முன்வர வேண்டுமென்று இங்கே ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். அதற்கு, நாங்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.

(கட்டுரையாளர்: N.S வர்மா).
x
^