Nov 15 2017

Views: 1741

 

‘சென்னைக்கு மக்மல்பஃப் வந்திருக்கிறார்’ என்று நண்பரிடமிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது. ஈரானிய சினிமாவிலும் சர்வதேச சினிமாவிலும் மக்மல்ப்ஃப் (Mohsen Makhmalbaf) என்பது எத்தனை முக்கியமான பெயர். அவர் சென்னை வந்திருப்பது தெரிந்ததும் உற்சாகமானேன். விசாரித்ததில் அவர் பிரசாத் லேப்பிற்கு தனது அடுத்த படம் பிரதியெடுத்தல் சம்பந்தமாக வந்திருக்கிறார் என்று தெரிந்தது. அன்று மதியமே அங்கு போனபோது ஒரு அம்பாஸிடர் கார் வந்து இறங்க அதிலிருந்து மக்மல்பபஃப் இறங்கினார். அவருடன் ஒரு பெண்ணும் இறங்கினார். இணையத்தில் அவரது படத்தைப் பார்த்திருக்கிறேன்.நேரில் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. வெள்ளை நிறத்தில் எளிய கதர் ஆடையில் காற்சட்டையும் மேலாடையும் அணிந்திருந்தார். எளிய விவசாயிபோல உறுதியான உடலமைப்புடன் இருந்தார். அவரைச்சந்தித்து நான் வைத்திருந்த எனது உலக சினிமா புத்தகத்தைக் கொடுத்து புத்தகத்தில் அவரது படம் cyclist குறித்து எழுதி இருப்பதைச்சொன்னேன். ஆச்சரியத்துடன் வாங்கிப்பார்த்தார். அவரது சைக்கிளிஸ்ட் படம் இருந்த பக்கம் வந்ததும் புன்னகை மலர என்னைப் பார்த்து மகிழ்ச்சியுடன் தலையசைத்தார். பிறகு அவர் புத்தகத்தை திருப்பிக்கொண்டே வந்தபோது உள்ளே அவரது மனைவியான மெர்ஷியா மெஷ்கினியின் ‘The Day I Became A Woman’ என்ற படமும் இருக்க அதை அவர் இன்னும் ஆச்சரியத்துடன் அருகிலிருந்த பெண்ணிடம் ஆர்வமாகக் காட்டினார். அந்தப்பெண்ணுக்கும் புன்னகை மலர அவரும் என்னைப்பார்த்து தலையசைக்க, மக்மல்பஃப் ‘இது மெர்ஷியா'(Marzieh Makhmalbaf)என்று அறிமுகப்படுத்தினார். மெர்ஷியா The Day I Became A Woman,Stray Dogs முதலிய படங்களை எடுத்தவர். மக்மல்பஃப்பிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர் அவரது மனைவி என்ற விபரங்களை நான் முன்பே அறிந்திருந்தேன். இருவரும் உலக சினிமா நூலைக் கையில் வைத்துக் கொண்டு ஆர்வமாகத் திருப்பித்திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தனர். தெரியாத மொழியில் அவர்கள் இருவரின் படமும் ஒரே நூலில் இருப்பதும் அவர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கலாம். அவர்கள் பிரதியெடுக்க வந்திருந்த ‘The Man Who Came With The Snow’ என்கிற படத்தின் பிரதி தயாராக இருக்க என்னையும் படம் பார்க்க திரையரங்கினுள் அழைத்தார். மக்மல்பஃப்பின் ஆங்கிலம் நிதானமாகத் தெளிவாக இருந்தது. இந்தப்படத்தில் இணை இயக்குனராகவும் இருந்த மெஷ்கினி மொழி தெரியாத தன்மை முகத்திலிருக்க அவ்வப்போது புன்னகைத்துக் கொண்டே இருந்தார்.

 

 

திரையரங்கில் படம் துவங்கியது. எனது இருக்கைக்கு முன் இருக்கையில் மக்மல்பஃப் அமர்ந்திருந்தார். நான் பின்னால் இருக்க அடிக்கடி பின்னால் திரும்பி தனது படத்தின் பகுதிகள் குறித்த விளக்கங்களை எனக்கு சொல்லிக்கொண்டிருந்தார். படத்தில் சப் டைட்டில் இல்லை. படம் முடிந்ததும் நான் ஒளிப்பதிவாளன் என்பதால் படத்தின் வண்ணம் மற்றும் தரம் குறித்துக் கேட்டார். படம் தைல வண்ண ஓவியம் போல அழகாக இருந்தது. மொழியும் கதையும் புரியவில்லை என்றாலும் காட்சியும் ஒளியமைப்பும் நேர்த்தியாக இருந்தது. படம் முடிந்ததும் வெளியில் சிலனிமிடம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு இருவரும் தங்கள் பணி நிமித்தமாக விடைபெற்றுக் கிளம்பினார்கள். அப்போது நான் திரும்பவும் அவர்களை சந்திக்க விரும்புவதைத் சொல்ல ‘நாளை அறைக்கு வாருங்கள்’ என்று அதே புன்னகையுடன் சொல்லிவிட்டு இருவரும் சாலிகிராமத்திலிருந்து நடந்தே வடபழனி நோக்கி நடந்து போனார்கள். இத்தனை புகழ்மிக்க சர்வதேசப்பட இயக்குனர் இவ்வளவு சாதரணமாக எளிமையாக அன்புடன் இருப்பதும்,அருணாச்சலம் சாலையில் நடந்தே செல்வதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

 

மறு நாள் காலை பத்துமணிக்கு வடபழனியில் கமலா திரையரங்கை ஒட்டிய சந்தில் வளைந்து சாலையோரமாக இருந்த அந்த எளிய விருந்தினர் விடுதியின் கதவைத் தட்டினேன். உடன் நண்பர் விஸ்வாமித்திரன்,அருள் எழிலன் இருந்தார்கள். கதவு திறக்க நேற்றுப்பார்த்த அதே வெள்ளைக் கதராடையில் மக்மல்ப்ஃப் கதவைத்திறந்தார். அந்த அறையில் இருந்த இருக்கையில் அமரச்சொன்னார். சில நிமிடங்களில் மெர்ஷியா அறைக்குள் இருந்து புன்னகையுடன் வந்து உலர்ந்த பழங்களையும் ஸ்டிக்கர் ஒட்டிய ஆரஞ்சுப் பழங்களையும் கொண்டுவந்து வைத்தார். மக்மல்பஃப் அவரையும் அங்கேயே அமரச்சொன்னார். நானும் விஸ்வாமித்திரனும் அவருடன் பேசத் துவங்கினோம். ஆரஞ்சுப்பழங்களை உரித்து எங்களுக்குத் தந்து கொண்டே நாங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இடையில் மெர்ஷியா எழுந்துபோய் பழச்சாறு கொண்டுவந்தார். ஒருஒருமணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த சந்திப்பு மிகுந்த நம்பிக்கையும் உற்சாகத்தையும் அளிப்பதாக இருந்தது. எழிலன் தமிழில் கேட்க நான் மொழிபெயர்ப்பாளராக மக்மல்ப்ஃப்பிடம் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஏன் இங்கு படவேலைகளுக்காக வந்தீர்கள் என்று கேட்டபோது தானும் தனது மனைவியும் ஈரானிலிருந்து நாடுகடத்தப்பட்டிருப்பதால் கஜகஸ்தான் போய் படம் எடுத்திருப்பதாகச்சொன்னார். இயல்பாக அவர் தனது வாழ்க்கை மற்றும் தந்து சினிமா குறித்துப் பேசத்துவங்கினார்.

 

 

‘பலால் ஹபாஷி’ என்ற தலைமறைவு இயக்கத்தில் பதினேழு வயதில் இணைந்தபோது போலீஸார் அவரைச் சுட்டுப் பிடித்ததையும் நான்கரை ஆண்டுகாலம் சிறையில் இருந்ததையும் அப்போது கிடைத்த வாசிப்பு அநுபவம் தன்னை உருவாக்கியதையும் சொன்னார். அந்தப் பருவத்தில்தான் சினிமா எனது ஆசையாக வளர்ந்தது. இஸ்லாத்தில் சினிமா ஹராம் என்பதால் எனது பாட்டி அதை சாத்தான் என்று சொன்னார். சினிமாவுக்குப்போனால் நீ உருப்பட மாட்டாய். நரகத்துக்குத்தான் போவாய் என்றும் அவர் சபித்தார். இருபத்து நாலு வயது வரை சினிமாவே பார்க்காத நான் இவ்வாறுதான் இயக்குனரானேன் என்றார்.

மக்மல்பஃப் தனது முதல் மனைவியை இழந்தவர் என்ற விபரத்தை நான் இணயத்தில் படித்திருந்தேன். சமீரா,ஹனா என இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் வளர்த்துக்கொண்டு படமும் இயக்கிக் கொண்டிருந்த வேளையில் மெர்ஷியா மெஷ்கினி உதவி இயக்குனராக வருகிறார். இருவரும் பின்னால் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவரது மகள் சமீரா,ஹனா இருவரும் இயக்குனர்கள். மனைவி மெர்ஷியாவும் இயக்குனர் இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் சுவாரஸ்யமாக இருந்தது. எட்டுவயது இருக்கையில் நான் படமெடுக்கும் இடத்திற்கு சமீரா வருவாள். அந்தச் சூழலில் எனது கால்கலைச்சுற்றி வந்துகொண்டிருப்பாள். ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த அவள்,அப்பா எனக்கு பள்ளிக்குப்போக பிடிக்கவில்லை என்றாள். ஈரானின் பாடத்திட்டங்களின் மேல் எனக்கும் உடன்பாடில்லை எனவே நானும் அன்றே அவளைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு என்னுடனே வைத்துக்கொண்டேன். நான் படம் எடுக்கும்போது அருகிலேயே இருந்தாள், கவனித்தாள். அவளுக்கு சினிமா பிடித்திருந்ததால் அதனை நான் கற்றுக் கொடுத்தேன். பதினேழு வயதில் ஒரு படத்துக்கு ஒளிப்பதிவு செய்தாள். 19 வயதில் ஆப்பிள் படத்தை இயக்கினாள். மக்மல்பஃப் திரைப்பபடக்கல்லூரி வைத்திருந்தார். தனது படங்களை அவரே தயாரித்தார். தனது மகளுக்கும் மனைவிக்கும் திரைக்கதையை எழுதிக்கொடுத்தார். இதெல்லாம் எனக்கு ஆர்வமாக இருக்க அவர் வைத்திருந்த திரைப்பபடக்கல்லூரியில் என்ன கற்றுக்கொடுத்தார் அதன் பாடத்திட்டம் என்ன..? என்று கேட்டேன்.

 

 

அதற்கு அவர் புன்னகையுடன், பாடத்திட்டம் என்று எதுவும் கிடையாது. மேலும் கல்லூரி என்பதே சமீராவுக்கும் ஹனாவுக்கும் மெர்ஷியாவுக்குமாக உருவானதுதான். இப்போது இங்கிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் பாடத்திட்டம் என்று என்ன வைத்திருக்கிறார்கள்? உலகின் சிறந்த படங்களைப்பார்க்கச் சொல்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சிட்டிசன் கேன்’ என்றால் அந்தப் படத்தைப் போட்டு அதை எப்படி எடுத்தார்கள் அதன் நுட்பங்கள் என்ன என்று கற்றுத் தருகிறார்கள். அது ஆர்சன் வெல்ஸின் சினிமா அதன் நுட்பம் என்பது அவர் சார்ந்த கலாச்சாரம், அரசியல், அவர் வளர்ந்த விதம் எல்லாம் சார்ந்திருக்கிறது. அது அதை நாம் தெரிந்துகொள்ளலாம் ஆனால் பின்பற்றவேண்டுமென்பது அவசியமில்லை. இப்போதிருக்கிற திரைப்படக் கல்லூரிகள் போல பணம் சம்பாதிப்பதும் ஒரு நுட்பமாக மட்டும் கற்றுக்கொடுப்பதும் ஒரு அரசுப்பணியாளரை உருவாக்குவதுபோல உருவாக்குவதும் எனது வேலையல்ல. பிறகு எப்படித்தான் கற்றுக்கொடுப்பீர்கள் என்று கேட்டேன். “முதலில் சைக்கிள் ஓட்டப் பழகவேண்டும். தினமும் சைக்கிள் ஓட்டும் பயிற்சி. ஐம்பது கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டவேண்டும். பிறகு நீச்சல் அடிக்கும் பயிற்சி. இரண்டு மணி நேரம் நீச்சல் அடிக்கவேண்டும். இதெல்லாம் எதற்கு என்று நீங்கள் கேட்கலாம். ஒரு சினிமா படைப்பாளிக்கு முதலில் உடல் உறுதியாக இருக்கவேண்டும். உடல் உறுதி இருந்தால் அது ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கையை மனபலத்தைக் கொடுக்கும். எதையும் எதிர்கொள்கிற துணிச்சல் கொடுக்கும். ஏனெனில் எங்கள் நாட்டில் படம் எடுப்பது பொழுதுபோக்கு அல்ல. அது ஒருவகையான போர்முறை. நான் ‘கந்தகார்’ எடுக்கும்போது நாங்கள் படம் எடுத்த இடத்திலிருந்து பத்துமீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. கேமராவிலிருந்து தொழில் நுட்ப சாதனங்கள் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். ஓடினோம். அந்த உடல் உறுதி ஒரு திரைப்படப் படைப்பாளிக்கு அவசியம். எனவே எந்த நாடாக இருந்தாலும் படம் எடுக்கிறவர் உறுதியாக இருக்கவேண்டும். ஏனெனில் உங்கள் பலம் பலவீனம் இரண்டும் உங்கள் படைப்பில் வெளிப்படும்..இல்லையா..” என்று சிரித்தார். முதலில் உடல் உறுதியாகவேண்டும். அதிலிருந்தது மனம் உறுதியாகும். எங்கள் திரைப்படக் கல்லூரியில் இலக்கியம் படிக்கவேண்டும். ஒரு கவிஞரின் கவிதையை எடுத்துக்கொண்டு ஒருவாரம் முழுக்க அவரது கவிதைகளை மட்டுமே படிப்போம். வாசிக்கச்சொல்வோம். அது பற்றிக் கலந்துபேசுவோம்.விவாதிப்போம்.ஒருவாரம் முழுக்க ஒரு கவிஞரின் கவிதை. பிறகு படம் பார்ப்போம். ஓவியங்கள் பார்ப்போம்.ஒருவாரம் முழுக்க ஒரே படம். ஒரே இயக்குனரின் படம். திரும்பத் திரும்ப பார்ப்போம். விவாதிப்போம். ‘இதுதான் எனது பாடத்திட்டம்’என்று சிரித்தார். இந்தச் சூழலில் வளர்கிற சமீரா ஒரு நாள் தொலைகாட்சி செய்தி பார்க்கிறார். ஒரு அப்பா தனது மகள்கள் இருவரையும் பலவருடங்கள் வெளிஉலகமே தெரியாமல் அடைத்துவைத்திருக்கிறார் என்ற செய்தி அவரைப் பாதிக்கிறது. இதைப்படமாக எடுக்கலாமா என்று கேட்கிறார். எடு என்கிறேன். அவரே கேமராவை எடுத்துக்கொண்டு அந்த இடத்தை தேடிக் கண்டுபிடித்து பதினோரு நாளில் ஆப்பிள் படத்தை எடுக்கிறார். இதுதான். இப்படித் தன்னை சுற்றி நடக்கிற விஷயங்களைக் கவனிக்கிறவர்களாக சமூகம் மீது பொறுப்புணர்வு மிக்கவர்களாக அதனைத்திரைப்படமாக மாற்ற முடிகிறவர்களாக எனது பயிற்சி அவர்களை உருவாக்குகிறது எனக்குத் தெரிந்த அரசியலை எனக்குத்தெரிந்த சினிமாவை நான் கற்றுக்கொடுக்கிறேன். “இதுதான் நீங்கள் கேட்கிற பாடத்திட்டம்..” என்றார்.

 

ஏன் நாடு கடத்தப்பட்டீர்கள் என்று கேட்டோம். அதற்கும் ஒரு புன்னகை. நான் ‘Gabbeh’ என்றொரு படம் எடுத்தேன். அந்தப்படம் ஈரானை இழிவுபடுத்துகிறது என்று தடை செய்தார்கள். நான் எப்படிப் படம் எடுப்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கம் அதைத் தீர்மானிக்கமுடியாது. மஜித்மஜிதி ‘சில்ரன் ஆப் ஹெவன்’ எடுத்தார். அது ஹாலிவுட்டில் ஆஸ்காருக்கு ஈரான் அரசாங்கம் சார்பில் பரிந்துரைக்கப்படுகிறது. மஜிதி என் மாணவர்தான் என்றாலும் அரசாங்கத்துக்குப் பணிந்துபோவதால், அவர்களது விதிகளுக்கு ஒத்துப்போவதால், அவருக்கு ஏராளமான நிதி உதவி கிடைக்கிறது. என்னை மாதிரி ‘அமீர் நாதேரி’ இருக்கிறார். வறுமையான சூழலில் வெளி நாட்டில் வசிக்கிறார். ஈரானில் நான்கு கட்ட தணிக்கை முறை இருக்கிறது. கதை திரைக்கதைக்கு தணிக்கை குழுவிடம், கலாச்சார அமைச்சரிடம் ஒப்புதல் பெறவேண்டும். நடிகர் தொழில் நுட்பக்கலைஞர் யார் யார் என்று அவர்கள் பெயரில் ஏதும் பிரச்சனை இல்லையென்று தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். இதையெல்லாம் கடந்து தான் நாங்கள் ஈரானுக்காகப் படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம். ஈரான் புரட்சிக்குப் பிறகு பழமைவாதிகள் திரைப்படத்தைக் கையில் எடுத்தார்கள். பெண்கள் கூந்தலைக் காட்டக் கூடாது. நான் எடுக்கிற எல்லாப்படங்களும் ஈரானைக் காட்டிக்கொடுப்பதாக அரசாங்கம் என்மேல் குற்றம் சாட்டுகிறது. அவர்கள் எதையெல்லாம் தடை செய்தார்களோ அந்தப் படங்கள் தான் எனக்கு சர்வேச விருதுகளைப் பெற்றுத்தந்தன. எனவே நான் நாடுகடத்தப்பட்டேன். எனது படங்கள் அரசியல் ரீதியானவை என்று அரசு நினைக்கிறது. அது உண்மையாக இருக்கும்போது நான் என்ன செய்யமுடியும்? இந்த உலகத்தில் எந்த மூலையில் இடம் கிடைத்தாலும் என்குடும்பத்தோடு வசிப்பேன். அங்கிருக்கிற மக்களைப்பற்றிப் படம் எடுப்பேன். நாடு கடத்தப் பட்டதற்காக ஒருபோதும் நானும் எனது குடும்பமும் படம் எடுப்பதை விடமாட்டோம்.

 

x
^