Dec 02 2017

Views: 592

அசோக் மேத்தா

1981 இல் ‘36 செளரிங்கி லேன்’ எனும் படம் வெளிவந்த போது நான் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். அந்தப் படத்தை பார்த்த யாவரும் அதன் இயக்கத்தையும், நடிப்பையும் குறித்து சிலாகித்துப் பாராட்டினார்கள். ஆனால் ஒளிப்பதிவு மாணவர்களான நாங்கள் அந்தப் படத்தின் சர்வதேச அளவிலான மென்மையான காட்சிகளைக் குறித்து வியந்திருந்தோம். அதைப் படம் பிடித்தது ஒரு புதிய ஒளிப்பதிவாளர் என்று நாங்கள் அறிய வந்தபோது அவர் யார், எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து கொள்ள விரும்பினோம். ஒரு வேளை, வெளிநாட்டில் பயின்றிருப்பாரோ? என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், திரு. அசோக் மேத்தா எந்த வெளிநாட்டிலும் பயிலவில்லை, பம்பாய் திரையுலகில் பயின்றவர்தான் என்றறிந்த போது ஆச்சரியப்பட்டோம்.

ஸ்டெடிகேம் கேமராவோடு சுஷ்மான் படத்தில் நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த மேதையைச் சந்தித்தேன். ஒரு கருப்பு பாலியெஸ்டர் துணியைக் கொண்டு, அந்த இடத்தை அவர் சூரிய ஒளியிலிருந்து மறைத்துவிட்டு, HMI விளக்குகளை வைத்து ஒளியை திசை திருப்பினார். மேலும் அவற்றைச்சுற்றி கருப்புத் துணியைப்போர்த்தினார். தன் சக ஊழியர்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று தெரிந்திருந்தும், அவரே மேலே ஏறி, ஆணி அடித்து, விளக்குகளை தொங்க வைத்து, ஒரு மென்மையான ஒளியை ஏற்படுத்தினார். அவரது துணை ஊழியர் இன்னும் வராத நிலையில், நான் இறங்கி, அவருக்கு உதவி செய்தேன். ஆனால் மிகவும் அண்டர் எக்ஸ்போஸ் செய்வதாகவே என் மனதில் உணர்ந்தேன். ஆனால், அவருக்கோ எந்த சந்தேகமும் இல்லை. ஹைதராபாத் பிரசாத் ஸ்டுடியோவில் சென்று படத்தை பார்த்த போது அதன் அழகை கண்டு வியந்து போனேன்.

இதைக் குறித்து அவரிடம் விசாரித்த போது அவர் என்னிடம் கூறினார், “ஒளியை எக்ஸ்போஸ் செய்யும் போது உனக்கு தைரியம் வேண்டும். நீ எதைப்பார்க்க விரும்புகிறாயோ, அதை நீ எக்ஸ்போஸ் செய்ய தயங்கக் கூடாது”. அன்று, அவர் என் கண்களைத் திறந்து வைத்தார். திரைப்படக் கல்லூரியில் மூன்று ஆண்டுகளாகக் கற்று கொள்ளாததை நான் இங்கு இரண்டு வாரங்களில் கற்று கொண்டேன். அவர் இயந்திரங்களுக்கோ, இருட்டின் அமைப்புக்கோ தன்னை அடிமை ஆக்கிக் கொண்டவர் அல்ல. திரையில் காணும் காட்சியைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர். கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கு நேர் மாறாக அவர் செயல்பட்டார். காட்சியை பற்றி மட்டுமே சிந்திப்பார்.

வெளிப்புறக் காட்சிகளுக்கு செல்லும் போது அவர் ஒரு செர்ஜியொ லியோன் கௌபாயாக மாறி விடுவார். ஒரு இளம் மணப்பெண் தன் ஊரை விட்டு படகில் செல்லும் காட்சி, மங்கலானதொரு கற்பழிப்புக்காட்சி, உள்ளரங்குகளில் நிகழும் கொண்டாட்டம், பயிர்வெளிகள் நிறைந்த சம்பல் பள்ளத்தாக்குப் பகுதில் நடக்கும் கொடூரம், இவற்றை எல்லாம் எடுக்கும் பொழுது, மேற்கத்தியப் படங்களுக்கிணையான ஒளியமைப்பு, சுற்றுப்புறச் சூழலின் அழகியலைக் காட்சிப்படுத்தி பிரமிப்பூட்டினார். அது அவரால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. ‘பண்டிட்குயின்’ படத்தில் நவீன படப்பிடிப்புத் தொழில்நுட்பம் மிகவும் அழகாக வெளிப்பட்டது. சமீபத்தில், அத்தனைச் சிறப்பாக படம்பிடிக்கப்பட்ட படம் வேறொன்றில்லை என்பதுதான் என் கருத்து.

அசோக் மேத்தா எந்த பள்ளிக்கும் சென்றவர் அல்லர். ஆனாலும் என்னைப் போன்ற புதிய தலைமுறை ஒளிப்பதிவாளர்களின் முன்னோடியாக விளங்குகிறார். அவர் எங்களுக்கு கற்றுத் தந்தது – படத்தின் புகழுக்கு காரணமாய் இருக்கும் நீங்கள், ஒரு நல்ல தலைவராக விளங்க வேண்டும், லைட் பாய்ஸுடன் பழக வேண்டும், படப்பிடிப்பில் உங்கள் வியர்வையையும், ரத்தத்தையும் பாய்ச்ச வேண்டும் – ஏனென்றால் ஒரு படத்தை எடுப்பது ஒரு வாழ்நாளின் வாய்ப்பு, என்றாவது ஒரு நாள் நாமும் ஒரு ஒளிப்பதிவாளராக ஆவோம் என்று ஒரு ஒரத்தில் உட்கார்ந்து கொண்டு, சிறு கேமரா ஊழியனாக பணிபுரிந்த போது, அவரே இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்தவர்.

தன்னிகரில்லா ஒரு தலைச்சிறந்த ஒளிப்பதிவாளரான அசோக் மேத்தாவை வாழ்த்தி வணங்குவோம்.

-கட்டுரையாளர்: ராஜீவ் மேனன்

x
^