Apr 02 2023
ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைந்த போது இயக்குனர் மகேந்திரன் சாரை சந்தித்து விகடனுக்காக எழுதிய பதிவு!
(ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மறைவின் போது இயக்குநர் மகேந்திரன் கூறியவை )
”நான் சினிமா உலகத்துக்கு வர ஆசைப்பட்டவன் இல்லை; சினிமாவை நேசித்தவனும் இல்லை; சினிமா மீது வெறுப்பு கொண்டிருந்தவன். அந்த வெறுப்புதான் என்னை சில சினிமாக்களை இயக்கத் தூண்டியது. ஆனால், ஒரு கட்டத்தில் நான் சினிமாவை நேசிக்கத் தொடங்கியதற்குக் காரணம், ஒளிப்பதிவாளர் அசோக்குமார். என் சினிமாக்களுக்கு அவர்தான் உருவமும் உணர்வும் கொடுத்தார். அசோக்குமார் இல்லாமல் ‘சாசனம்’ படத்தை எடுக்க நேர்ந்தது. அப்போதுதான் அவர் இல்லாமல் என் படைப்புகள் முழுமைபெறுவது இல்லை என்பதை உணர்ந்தேன். நான் அசோக்குமாருடன் ஒன்பது படங்கள் பணிபுரிந்திருக்கிறேன். அதில் ‘உதிரிப்பூக்கள்’, ‘பூட்டாதப் பூட்டுக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘மெட்டி’, ‘நண்டு’ போன்ற படங்களை இன்றும் பலர் வியக்கிறார்கள். அந்தப் புகழ்ச்சிகள் அனைத்தும் அசோக்குமாருக்கு உரியது.”
”எனது படங்களை நான் விருது பரிசீலனைக்கு அனுப்பியது இல்லை. அசோக்குமாருக்கு ஒளிப்பதிவுக்கான தேசிய விருது கிடைத்த ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தையும் நான் அனுப்பவில்லை. தேவி ஃபிலிம்ஸின் உரிமையாளர்கள்தான், அந்தப் படத்தை தேசிய விருது பரிசீலனைக்கு அனுப்பினார்கள். சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிப்பதிவு, சிறந்த மாநில மொழி படம் என அது மூன்று விருதுகளை வென்றது. பிறகு அந்தப் படத்துக்கு மாநில அரசின் விருதுகளும் கிடைத்தன. இன்று யோசித்தால், என் எல்லா படங்களையும் விருது பரிசீலனைக்கு அனுப்பி, அசோக்குமாருக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது!”
”இருட்டு, எண்ணங்களைக் கூர் ஆக்கும்; இருளும் குறைந்த ஒளியும்கொண்ட கறுப்பு வெள்ளை வண்ணம், இதயத்துக்கு நெருக்கம் தரும். உலகின் ஆகச் சிறந்த இயக்குநர்கள் இன்னும் கறுப்பு வெள்ளையில் படம் எடுக்க விரும்புவது அதனால்தான். வண்ண வண்ண நிறங்களில் படம் பார்க்கும்போது கவனச்சிதறல் இருக்கும். அது கறுப்பு வெள்ளையில் இருக்காது. ‘உதிரிப்பூக்கள்’ படத்தை கலர் படமாக எடுத்தால் நுட்பமான உணர்வுகள் சிதைந்துவிடுமே என நான் பயந்தேன். ஆனால், கலரிலும் அதன் ஆன்மாவை அப்படியே கொடுத்தவர் அசோக்குமார். அப்போதெல்லாம் மானிட்டர் கிடையாது. எடுத்தது எப்படி இருக்கும் எனத் தெரிந்துகொள்ள முடியாது. ‘உதிரிப்பூக்கள்’ படம் தொடங்கியபோது விஜயனும் அஸ்வினியும் வருகிற ஒருசில ஷாட்களில் என்னென்ன நிறங்கள் இருக்க வேண்டும் என அசோக்குமாரிடம் ஸ்கெட்ச்சை வைத்துக் கீறிக் காட்டுவேன். ஒருமுறை அதைப் பார்த்துவிட்டு, நான் எதிர்பார்த்ததைவிடவும் ஒளியை மிக இயல்பாகவும் அழகாகவும் காட்சிகளில் கொண்டுவந்திருப்பார்.
எனக்கு பாடல்கள் எடுக்கப் பிடிக்காது. அதுவும் டூயட் எடுப்பதைக் கொடுமையாக நினைப்பவன். ஆனால், ‘ஆடியோ ரைட்ஸ்’ என்பது தனி வியாபாரமாக இருந்ததால், பாடல்களை காட்சிகளைப்போல எடுப்பதாக தீர்மானித்தோம். ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தின் ‘பருவமே புதிய பாடல் பாடு’ பாட்டுக்கு சுஹாசினி, மோகன் இருவரையும் பெங்களூரு கப்பன் பார்க்கில் வைத்து படம் பிடிக்கலாம் என முடிவெடுத்தோம். எங்களுக்கு அதிகாலை பெங்களூரு எப்படியிருக்கும் என்பதே தெரியாது. காலை 4:30 மணிக்கு கப்பன் பார்க் சென்றால், என் அருகில் நின்றிருந்த அசோக்குமார்கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு பனி மூட்டம். ஆனாலும் அதிகாலை 5:30 மணிக்கு விளக்குகள் எதுவும் இல்லாமல், அசோக்குமார் அந்தப் பனிசூழ் காலையிலேயே பாடலைப் படம் ஆக்கினார். சென்னைக்கு நெகட்டிவ் அனுப்பி ரிசல்ட் பார்த்தபோது, மிகச் சிறப்பாக இருந்தது. பனி படர்ந்த அந்த அதிகாலையை ஒளிப்பதிவு செய்த அசோக்குமாரின் அசாத்தியமான திறமையும், அவருடைய நம்பிக்கையும்தான் அந்தப் படத்துக்கு தேசிய விருதைப் பெற்றுத்தந்தது!”
” ‘மெட்டி’ படம் இரு சகோதரிகளின் கதையைப் பேசிய படம். அந்தப் படம் ஸ்வீடன் இயக்குநர் இங்மெர் பெர்க்மென்னின் படங்களைப் போல இருப்பதாக சிலர் பாராட்டினார்கள். அதை அபத்தமான பாராட்டாகவே நான் நினைத்தேன். திரைப்பட ரசனை பற்றிய அறியாமையில் பேசுகிறார்கள் என நினைத்தேன். எனது வியட்நாம் ரசிகர் ஒருவரும் தொலைபேசியில் ‘மெட்டி’ படம் இங்மெர் பெர்க்மென்னின் ‘க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் தரத்தில் இருப்பதாகச் சொன்னார். ‘இவர் என்ன இப்படிச் சொல்கிறாரே?’ என அந்தப் படத்தைப் பார்த்தேன். அதுவும் ‘மெட்டி’யும் இரு சகோதரிகளின் கதைகளைப் பேசியது என்பதைத் தவிர, ஏணி வைத்தாலும் எட்டாத உயரத்தில் இருந்தது இங்மெர் பெர்க்மென்னின் படம். ‘இரண்டு படங்களையும் எப்படி ஒப்பிடலாம்? மோசமான ரசனை கொண்டவர் நீங்கள்…’ என்று நான் வியட்நாம் நண்பரைத் திட்டினேன். ஆனால், பிறகு யோசித்தால், ‘க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’, ‘மெட்டி’… இரண்டு படங்களின் ஒளிப்பதிவுத் தரமும் ஒன்றுபோலவே இருந்ததை உணர்ந்தேன். ‘க்ரைஸ் அண்டு விஸ்பர்ஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஸ்வென் நீக்விஸ்ட் உருவாக்கிய அதே தரத்தை, அபாரமான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத இந்தியாவில் கொண்டுவந்திருந்தார் அசோக்குமார். அதுதான் அவரது பலம்!”
”சில வருடங்களாகவே அசோக்குமார் எங்கே இருக்கிறார் என யாரைக் கேட்டும் தெரியாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு அவரது மகன் தொலைபேசியில் அழைத்து அதிர்ச்சியைக் கொடுத்தார். திண்டிவனம் அருகே உள்ள ஒரு மருத்துவமனைக்குச் சென்றால், அங்கே அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசத்துடன் படுத்திருந்தார் அசோக்குமார். அடையாளமே தெரியாமல் உருக்குலைந்துபோயிருந்தார். ‘சார், நீங்க அவரைக் கூப்பிடுங்க; பேசுங்க. உங்களுக்கு பதில் சொல்ல முடியலைன்னாலும், நீங்க வந்திருக்கீங்கனு புரிஞ்சுப்பார்’ என்றார் அசோக்குமாரின் மகன். அருகில் சென்று அவரது தலையை வருடியபடி, ‘அசோக்… அசோக்… மகேந்திரன் வந்திருக்கேன். கொஞ்சம் கண்ணைத் திறங்களேன் ப்ளீஸ்…’ என்றேன். அது, அவரது நினைவை எட்டவே இல்லை! ஒன்பது படங்களில் என்னோடு பரஸ்பரம் உரையாடி பழகிய அசோக்குமார், என் வார்த்தைகளையோ உணர்வுகளையோ புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அசோக்குமார் கடைசியாக ஹைதராபாத்தில் குடியேறி சிகிச்சைக்காக சென்னை வந்திருந்தார்.
என் வாழ்வில் உறவினர்கள், நண்பர்கள் என எத்தனையோ பேரை இழந்திருக்கிறேன். ஆனால், அசோக்குமாரின் இறப்புதான் முதன்முறையாக எனக்கு தனிமையை உணர்த்துகிறது.
”தன் பலம் என்னவெனத் தெரியாமல் வாழ்ந்து மறையும் யானையைப்போல, காவியங்களைப் படைத்து மறைந்த அசல் கலைஞன் அசோக்குமார்!”
இதில் இன்னோர் அதிர்ச்சி… நாம் அசோக்குமாரை மட்டும் தொலைக்கவில்லை. அவருடையை படைப்புகளையும் தொலைத்துக்கொண்டிருக்கிறோம். சினிமாவுக்கான நவீன ஆவணக் காப்பகத்தை நாம் உருவாக்க வேண்டும். அதுதான் அசோக்குமாருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி. ஏனென்றால், இந்தியாவின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான அசோக்குமாரைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் வரும் ஒரு மாணவன், எதைப் பார்த்து அசோக்குமாரின் ஒளிப்பதிவைக் கற்றுக்கொள்வான்? ஏனென்றால், 100 படங்களுக்கு மேல் ஒரு சமூகத்தின் வரலாற்றை கலையழகுடன் பதிந்திருக்கும் அசோக்குமாரைப் பற்றி எந்தப் பதிவும் இங்கே இல்லை; அவரது படைப்புகளைப் பாதுகாக்கவும் இல்லை.
படைப்பாளிகளைத் தொலைக்கலாம்; படைப்புகளையுமா?!”
– அருள் எழிலன், ஆனந்த விகடன், (30-10-2014)
எடுத்துக் கொடுத்த தம்பிசோழனுக்கு நன்றி
SICA also thanks R.R.Srinivasan