P.S.நிவாஸ்- மாபெரும் ஒளிக்கலைஞன்

Feb 02 2021

Views: 2955

இந்திய சினிமாவின் மிக முக்கிய ஒளிப்பதிவாளர்களுள் P.S.நிவாஸ் தனித்துவம் வாய்தவர். நேற்று காலை கேரளாவில் இயற்க்கை எய்தினார்.

P.S.நிவாஸ்

அடையாறு திரைப்படக்கல்லூரி மாணவரான P.S.நிவாஸ் மலையாளத் திரையுலகில் மோகினி ஆட்டம் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகமானார். 1976ம் ஆண்டு வெளிவந்த இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது பெற்றார்.

நிவாஸின் ஒளிப்பதிவில்தான் தமிழ் சினிமாவின் மாபெரும் திருப்புமுனையான இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே உருவானது. படம் முழுவதும் அவுட்டோர் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

குறிப்பாக, ஆர்.ஓ (OR WO) கலர் ஃபிலிமில் சிறப்பாக ஒளியமைப்பு செய்தமைக்காக அந்நிறுவனத்தால் பாராட்டப்பட்டார்.

இப்படத்தில் குடிசைக்குள் ஊடுருவும் பகல் ஒளி, லாந்தர் விளக்கு ஒளி, அதாவது பாய்ண்ட் சோர்ஸ் (point source) லைட்டிங்கை அற்புதமாகக் கையாண்டார். போலவே, அவரது டே ஃபார் நைட் எஃபெக்ட் பற்றியும் குறிப்பிட வேண்டும்.

தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் கல்லுக்குள் ஈரம் திரைப்படம் வரை பணியாற்றினார். பின்னர் இயக்குநராகி தமிழில் திரைப்படங்களை உருவாக்கினார்.

அவர் போட்ட நீண்ட ட்ராலி ஷாட் இப்போதும் பிரமிக்க வைப்பது.
ஜூம் லென்சை தனது படங்களில் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.
அத்தகைய ஷாட்டுகளில் தனி முத்திரை பதித்தவர்.
உதாரணமாக ஒரு முகத்திற்கு ஜூம் போகும்போது மிகத்தெளிவாக நேர்கோட்டில் பயணிப்பார்.அது முகத்திற்கு நேராக இல்லாமல் சற்று விலகி மையம் கொண்டாலும் கேமராவை வெகு அழகாக நகர்த்தி அந்த முகத்தை பிரேமின் நடுவில் இடம்பெறச் செய்து அழகு படுத்துவார்.
உதாரணமாக ஜூம் போகும் போது முகத்தை விட்டு சற்று விலகி ஃப்ரேமில் காது மட்டும் இடம்பெறும் என்றாலும் கவலைப்பட மாட்டார்.
காதிலிருந்து அந்த முகம் முழுமையாக தெரியுமாறு ஜூம் முடிந்தபிறகு கேமராவை கவிதையாக நகர்த்தி முழுமையாக பிரேமிற்குள் கொண்டு வந்துவிடுவார்.

எழுத்தாளர் அஜயன் பாலா கூறுகையில் ‘

16 வயதினிலே படத்தின் ஒளிப்பதிவு மூலம் அவர் தமிழ் சினிமா காட்சியியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை துவக்கிவைத்தவர் . அப்படம் மூலம் அவர் நிகழ்த்தியது மிகப்பெரிய மடைமாற்றம் . பாரதிராஜா அவர்களின் காட்சி மொழியும் திரைக்கதையும் என்னதான் அந்த படத்தை உயரத்துக்கு இட்டுச்சென்றாலும் நிவாஸின் பங்கும் அதில் கணிசமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. 35 mm ல் பெஸ்ட் கம்போசிஷன் அந்த படம் தான் வெற்று நிலத்தை இப்படியும் அழகுற காண்பிக்க முடியும் என காரை வீட்டுக்கும் கட்டாந்தரைக்கும் எண்ணய் வழியும் தலைக்கும் வெற்று கருப்பு உடம்புக்கும் காமிரா வழி உயிர்கொடுத்தார் .
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்த சீனிவாசன் . புதுமையக தன் பெயரை நிவாஸ் என சுருக்கிக்கொண்டார் .
தொடர்ந்து இவர் இயக்கிய எனக்காகக்காத்திரு காட்சியியல் கவிதை .
தெலுங்கில் சாகர சங்கமம் என்றும் தமிழில் சலங்கை ஒலி
என்றும் புகழ்பெற்ற கே விஸ்வநாத் எடுத்த காவியத்தை இயல்பு மாறாமல் திரையில் வார்த்துக்கொடுத்தவர். அதில் ஒவ்வொரு இடமும் சூழலும் பாத்திரங்களை விட நம் ஆழ்மனதோடு அதிகம் உரையாடும் . அந்த அளவுக்கு நுணுக்கமான ஒளிப்பதிவு . மென்னுணர்வுகளின் சிம்பொனியாக அப்படம் திகழ்ந்தது என்றால் அதற்கு மூல வித்தகர் நிவாஸ் என்பது தொழில் நுட்பம் அறிந்தவர்கள் மட்டுமே அறிந்துணர முடியும்.

இயக்குனர் பாரதிராஜா அவர்கள் நிவாஸ் பற்றி ‘

என் திரைப் பயணமான16 வயதினிலே முதல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளுக்கு துணை நின்ற பெரும் படைப்பாளி, இந்திய திரை உலகின் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர்,என் நண்பன் திரு. நிவாஸ்மறைவு அதிர்ச்சியளிக்கிறது ஆழ்ந்த இரங்கல்கள்.
SICA தலைவர் பி.சி.ஸ்ரீராம் கூறுகையில் ‘ P.S.நிவாஸ் ஒளிப்பதிவு யுக்திகள் தன்னுடைய திரைப்பட கல்லூரி காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், மேலும் அப்போது திரைப்படைங்களை விரும்பும் ஏனைய மக்களிடமும் P.S.நிவாஸ் ஒளிப்பதிவு புகழ் பெற்றதாகவும் நினைவு கொள்கிறார்.

தேர்ந்தெடுத்த திரைப்படங்களின் பட்டியல்

  • 1977 16 வயதினிலே
  • 1978 கிழக்கே போகும் ரயில்
  • 1978 சிகப்பு ரோஜாக்கள்
  • 1978 இளமை ஊஞ்சல் ஆடுகிறது
  • 1979 புதிய வார்ப்புகள்
  • 1979 நிறம் மாறாத பூக்கள்
  • 1980 கல்லுக்குள் ஈரம்
  • 1981 நிழல் தேடும் நெஞ்சங்கள்
  • 1982 தனிக்காட்டு ராஜா
  • 1983 கொக்கரக்கோ
  • 1987 மை டியர் லிசா
  • 1988 செண்பகமே செண்பகமே
  • 1989 எங்க ஊரு மாப்பிள்ளை
  • 1990 ஊரு விட்டு ஊரு வந்து
  • 1994 பாஸ் மார்க்
  • 1994 செவ்வந்தி

SICA  P.S.நிவாஸ்  திரைப்பயணத்தை நினைவுக்கொள்வதோடு புகழ் அஞ்சலி செலுத்துகிறது.

சி.ஜெ.ராஜ்குமார்

ஆசிரியர்/ஒளிப்பதிவாளர்.

x
^