விஜயகாந்த் – புகழஞ்சலி!

Dec 28 2023

Views: 1152

ஏழைப் பங்காளனாகவும், கோபக்கார இளைஞனாகவும், ஆக்‌ஷன் படங்களிலும், புரட்சிப் படங்களிலும் நடித்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் இயற்பெயர் விஜயராஜ். மதுரை திருமங்கலத்தில் 1952-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 25-ம் தேதி அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த விஜயகாந்த், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

சிறு வயது முதல் சினிமா பார்க்கிற வாய்ப்பு அமைந்ததால், பார்த்த சினிமாக்களை நண்பர்களிடம் காட்சிவாரியாக பேசி மகிழ்வார். அதிலும் எம்.ஜி.ஆரின் ஆக்சன் படங்கள் அவரை வெகுவாக கவர்ந்தன. அந்தப் படங்களை பலமுறைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

சினிமா மீது அவருக்கு இருந்த ஆர்வம் நண்பர்கள் வடத்தை அதிகமாக்கியது. நண்பர்களோடு சேர்ந்து சினிமாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். மகன் படிக்கவில்லை என்றதும் கீரைத்துரையில் இருக்கும் தங்களின் அரிசி ஆலையை விஜயகாந்தை கவனித்துக் கொள்ள வைத்தார், அவரது தந்தை.

நண்பர்கள் கூடி பேசும் கட்டிடத்துக்கு மேலே சேனாஸ் பிலிம்ஸ் அலுவலகம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிறுவனம் அது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முகமது மர்சுக் என்பவர், விஜயகாந்துக்கும், அவரது நண்பர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். அவர் ஆட்டுக்கார அலமேலு படத்தை மதுரை ஏரியாவுக்கு வாங்கி வெளியிட்ட போது, அந்த மாவட்டம் முழுவதும் அந்தப் படம் வெளியான திரையரங்குகளுக்கு ஆடு அழைத்து சென்று விளம்பரம் செய்ய உதவியாக இருந்தார், விஜயகாந்த்.

தனது நண்பர்களின் உந்துதலின் பெயரிலும், தனக்கிருந்த ஆர்வத்தாலும் சினிமாவில் நடிப்பது என முடிவுசெய்து சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்கிடம் தனது எண்ணத்தை தெரிவித்திருக்கிறார், விஜயகாந்த்.

விஜயகாந்தை சென்னைக்கு வரவழைத்து இயக்குநர் பி. மாதவனிடம், இவர் என் தம்பி மாதிரி என்று அறிமுகப்படுத்தி, விஜயகாந்துக்கு நடிக்க வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

சுதாகர், ராதிகா நடிப்பில் இனிக்கும் இளமை படத்தை தொடங்கினார், இயக்குநர் எம்.ஏ.காஜா. அவர் தனது நெருங்கிய நண்பர் என்பதால், அவரிடம் விஜயகாந்துக்கு சிபாரிசு செய்து, அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொண்டார், சேனாஸ் பிலிம்ஸ் மர்சுக்.

விஜயகாந்தை நேரில் வரவழைத்துப் பார்த்த எம்.ஏ.காஜா, தனது இனிக்கும் இளமை படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பை விஜயகாந்துக்கு வாங்கினார்.

1979-ம் ஆண்டு எம்.ஏ.காஜாவின் இயக்கத்தில் வெளியான `இனிக்கும் இளமை’ படத்தில் நடித்து, தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய விஜயகாந்த, அதன் பிறகு அன்னக்கிளி ஆர்.செல்வராஜின் அகல்விளக்கு படத்தில் கதாநாயகனாக அறிமுகமானாலும், அவருக்கு முதல் வெற்றிகரமான படம் என்றால், அது எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை படம்தான்.

சட்டம் ஒரு இருட்டறை படத்திற்கு முதலில் பிரபுவிடம் கதை சொன்ன இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இது ஆக்சன் கதையாக இருக்கே என்று பிரபு தயங்கியதும், பிறகு நிறைய புதுமுகங்களை அழைத்துப் பார்த்தார்கள் யாரும் தேறவில்லை.

ஒரு நாள் உதவி இயக்குனர்களுடன் வாகினி ஸ்டுடியோ வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற விஜயகாந்தின் நெருப்பு கண்கள் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு பிடித்துவிட்டது. உடனே அவரை பிடிக்க சொல்லி உதவியாளரை விரட்டி இருக்கிறார். அவர்கள் விஜயகாந்தை அழைத்து வந்தார்கள்.

நாங்கள் ஒரு படம் எடுக்க இருக்கிறோம். நீங்கள் நடிக்கிறீங்களா என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கேட்க, நான் நடிக்கத்தான் டிரய்ப்பன்னிக்கிட்டு இருக்கேன். இப்போது ஒரு படத்தில் நடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று சொல்லி தனது பெயர் விஜயராஜ் என்று கூறி இருக்கிறார்.

அப்போது விஜயகாந்துக்கு விஜயராஜ் என்று பெயர். அதன் பிறகு தொடங்கியதுதான் சட்டம் ஒரு இருட்டறை படம்.

தமிழில் மிகப்பரிய வெற்றிப் படமாக அமைந்த அந்தப் படத்தை தெலுங்கு மொழியிலும் சிரஞ்சீவி நடிக்க இயக்கினர், எஸ்.ஏ.சந்திரசேகர். அந்தப் படம் இந்திக்கும் சென்று அமிதாப்பச்சன் நடிப்பில் உருவானது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சிவப்பு மல்லி’, ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’, ‘சாதிக்கொரு நீதி’, ‘பட்டணத்து ராஜாக்கள்’, ‘சாட்சி’, ‘நீதியின் மறுபக்கம்’, ‘வசந்தராகம்’ எனத் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து தமிழின் முன்னணிக் கதாநாயகனாக வலம்வந்தார்.

வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோவில் கிழக்காலே, நினைவே ஒரு சங்கீதம்’, ‘ஊமை விழிகள்’, ‘கூலிக்காரன்’ , ‘உழவன் மகன்’, ‘தெற்கத்திக் கள்ளன்’, ‘பூந்தோட்ட காவல் காரன்’, ‘செந்தூரப்பூவே’ ‘புலன் விசாரணை’, ‘சின்ன கவுண்டர்’, ‘வானத்தைப்போல’, ‘ரமணா’, ‘சொக்கத்தங்கம்’ என எண்ணற்ற படங்கள் விஜயகாந்தின் வெற்றி மகுடத்தை அலங்கரித்துள்ளன. பல நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றிப் பெற்றதில்லை. ஆனால், விஜயகாந்தின் நூறாவது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ நூறுநாள் கடந்தும் வெற்றிகரமாக ஒடி வசூலில் பெரும் சாதனைப் படைத்தது.

153-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், 1984-ல் மட்டும் ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சினிமாத்துறையில் வரலாற்றுச் சாதனை புரிந்தார்.

தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது செந்தூரப்பூவே படத்திற்காக பெற்ற விஜயகாந்த், தமிழக அரசின் எம்.ஜி.ஆர்.விருது, கலைமாமணி விருது உட்பட பல விருதுகளையும் குரவங்களையும் பெற்றிருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் என்பது நடிகர் அல்ல…. அவர் “திரைப்படக் கல்லூரி மாணவர்களின் அன்புக்குரியவர்.

#ஊமைவிழிகள் மூலமாக
“”A FILM by FILM STUDENTS””  ஆபாவணன் விதை போட, எண்ணற்ற திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பை தந்த ஒரு மகா கலைஞன் “திரைப்பட கல்லூரியின் காட்ஃபாதர் #கேப்டன்விஜயகாந்த்”

அதன் பின்னர்  அவருமே மிகப்பெரிய நடிகனாக #செந்தூரப்பூவேவாக #உழவன்மகனாக , #சின்னகவுண்டராக #புலன்விசாரணை #கேப்டன்பிரபாகரனாகவே மாறினார்.

1999-ம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் விஜயகாந்த். பல ஆண்டுகளாக அடைக்க முடியாமல் இருந்த நடிகர் சங்கக் கடனை சிங்கப்பூர், மலேசியா என தமிழர்கள் அதிகம் வாழும் வெளிநாடுகளில் நட்சத்திரக் கலை விழாக்கள் நடத்தி வட்டியும் முதலுமாக அடைத்தார். மேலும், நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவி செய்வதற்காக ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்து, பெரும் தொகையை வங்கியில் டெபாசிட் செய்தார்.

மதுரையில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே தலைநிமிர செய்த பெருமைக்குரியவர். ஏழை, எளிய மக்களின் பசி போக்கிய வள்ளல். தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர் விஜயகாந்த் 28-12-23 சென்னையில்  இயற்கை எய்தினார்.

SICA தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

Article courtesy – G. Balan senior reporter.

x
^