Cinematographer Babu a legacy !

Oct 11 2025

Views: 554

Veteran Cinematographer Babu (88) Passes Away in Chennai

Veteran cinematographer Babu, known for his mastery in in-camera effects and visual storytelling, passed away this morning in Chennai at the age of 88.

A true craftsman behind the lens, Babu was a pillar of Tamil cinema during the late 1970s and 1980s, bringing energy, vibrancy, and style to commercial filmmaking. His long-standing partnership with Director S. P. Muthuraman spanned over five decades shaping the visual identity of a golden era in Tamil cinema.

Beginning with black-and-white films and evolving through the color revolution, Babu always trusted his viewfinder  more than any gadget — and his results were pure magic.

He often described his bond with Muthuraman as “like husband and wife” — built on understanding, precision, and unspoken creative chemistry. Together, they crafted unforgettable frames, including the legendary train fight sequence in Murattu Kaalai. Without digital tools, Babu shot the scene using three cameras — one on the engine, one handheld, and one side-mounted — achieving breathtaking realism through sheer planning and courage.

His command over in-camera dissolves became legendary. During Thaai Mel Aanai (directed by Shankar Guru Raja), Babu arrived on set with a Mitchell camera, performing multiple re-exposures manually to create dissolves directly on the negative — a dying art even then. Watching him work was like attending a masterclass in film craft.

To many, Babu was not just a cinematographer but a teacher through practice, revered for his discipline and technical intuition. He could detect a fault in a camera merely by its sound. Every frame he composed respected the story, the budget, and the crew. “Film gives you control,” he would say, meticulously managing exposure and stock without wasting a single frame.

Despite his fame, Babu remained humble till the end. “I never worked in films,” he said once. “I lived with them.”

His artistry, humility, and mastery over light and camera effects will continue to inspire generations. His legacy — glowing through countless frames — remains immortal in the heart of Indian cinema.

CJ Rajkumar

SICA on remembering Babu and his  Legacy shares rare interview draft done by Eminent Writer and Film Maker Ja. Deepa

ஐம்பது வருடங்கள் நூறு படங்கள்

ஜா.தீபா 

ஐம்பது வருடங்கள்…நூறு படங்கள் இணைந்தே பணிசெய்வதென்பது இனி நடக்குமென்றால் அது மற்றுமொரு சரித்திரமாக மாறும். தமிழ் சினிமாவில் அதிகபட்ச வணிக வெற்றிகளைத் தந்த சிலரில் முக்கியமானவர் இயக்குநர் எஸ்.பி முத்துராமன். முதல் படம் தொடங்கி அவருடைய அனைத்துப் படங்களிலும் இணைந்து பணியாற்றியவர் ஒளிப்பதிவாளர் பாபு. எஸ்.பி.முத்துராமன் – பாபு கூட்டணி தமிழ்சினிமாவின் அரிய சாதனை.

ஐம்பது ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் கற்றதையும் பெற்றதையும், ‘என்னுடைய இயக்குநர்’ என்று பாபு அன்போடு அழைக்கும் எஸ்.பி.எம் பற்றியும் பகிர்ந்து கொண்டவற்றின் தொகுப்பு.

“1972 ஆம் ஆண்டு ‘கனிமுத்து பாப்பா’ படத்திற்காக நானும் இயக்குநர் எஸ்.பி.எம்மும் இணைந்தோம். படம் வெற்றி பெற்றது. அடுத்ததாக ‘பெத்த மனம் பித்து’ படம். இந்தப் படம் இன்னும் பெரிய வெற்றி. அதன் பின் எங்களது கூட்டணி நிலைத்துவிட்டது. நிற்க நேரமில்லாத ஓட்டம். எனக்கு எஸ்.பி.எம் அவர்களை அதற்கு முன்பு தெரியாது. இயக்குநர் யோகானந்த் இயக்கிய ஒரு படத்தில் சில காட்சிகளை எடுப்பதற்கு அவரது உதவியாளராக எஸ்.பி.எம் வந்திருந்தார். நான் ஒளிப்பதிவாளர் மாருதி ராவிற்கு பதிலாக ஒளிப்பதிவு செய்ய வந்திருந்தேன். அங்கே தான் நாங்கள் சந்தித்துக் கொண்டோம். அப்போதும் கூட தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் எந்த உரையாடல்களும் நிகழவில்லை. சில நாட்கள் கழித்து எஸ்.பி எம்முக்கு இயக்குவதற்கான முதல் பட வாய்ப்பு கிடைத்தபோது ஒளிப்பதிவாளராக பணியாற்றும்படி என்னை அழைத்தார். அந்தப் படம் தான் ‘கனிமுத்து பாப்பா’.

நான் இல்லாமல் எஸ்.பி.எம் ஒரு ஷாட், ஒரு ஃப்ரேம் கூட எடுத்ததில்லை என்பது எனக்குக் கிடைத்திருக்கிற மிகப்பெரிய கௌரவமும், பெருமையும். பொதுவாக சண்டைக் காட்சி எடுக்கவேண்டுமெனில் அல்லது நடனக் காட்சி போன்றவற்றிற்கு அந்தந்த மாஸ்டர்களே இயக்கிவிடுவர்கள். ஆனால் எஸ்.பி.எம் ஒரு ‘சிங்கிள் ஷாட்’ கூட தனக்குத் தெரியாமல் இடம்பெறுவதை அனுமதிக்க மாட்டார். இது தொழிலின் மேல் அவர் கொண்ட ஈடுபாடு.

நான் எப்போதும் அடித்துச் சொல்வேன், எஸ்.பி.எம் போல தமிழ் சினிமாவுக்கு அதிகபட்ச வெற்றியைத் தந்தது யாருமே இல்லை. எல்லாவிதமான புதிய முயற்சிகளையும் அவருடன் சேர்ந்து கையாண்டு பார்த்திருக்கிறேன்.

திரு.ஏ.வி மெய்யப்ப செட்டியார் காலமான பிறகு நீண்ட வருடங்களுக்கு ஏ.வி.எம் நிறுவனம் படத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்தது. அதன்பிறகு அவர்கள் மீண்டும் திரைத்துறைக்கு வந்தபோது அறிவித்த படம் ‘முரட்டுக்காளை’. ஒருவகையில் ஏ.வி.எம்மின் மறுபிறவி படம் என்று கூட சொல்லலாம். இந்தப் படத்தின் வெற்றி எங்களுக்கும், ஏ.விஎம்முக்கும் மறக்க முடியாதது. தொடர்ந்து நாங்கள் ஏவிஎம்முக்காக படங்கள் செய்து கொடுத்தோம்.

இந்தப் படத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லோருமே ரயிலில் நடைபெறும் சண்டைக்காட்சியைப் பற்றிக் குறிப்பிடுவார்கள்.

இந்த ரயில் சண்டைக் காட்சியை நாங்கள் ஒரு ‘லைப்ரரியாக’ வைத்திருக்கிறோம் என்று இன்றைய இயக்குநர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கும். படத்தில் ஒரு சண்டைக் காட்சி ரயிலில் அமைய வேண்டும் என்று எஸ்பிஎம் விரும்பினார்.

எஸ்பிஎம்மைப் பொறுத்தவரை லொகேஷனை முழுமையாக உள்வாங்காமல் அவர் படப்பிடிப்புக்குப் போகமாட்டார். எல்லாம் தயார் நிலையில் இருக்க வேண்டும் அவருக்கு. ‘செட்’டுக்குள் போன பிறகு அது இல்லை, இது இல்லை என்ற பேச்சே இருக்கக்கூடாது.

முரட்டுக்காளை படத்தின் ரயில் சண்டைக் காட்சி

விஜயாவாகினி ஸ்டுடியோவில் எத்தனைப் படங்களை எடுத்திருப்போம்!!! அதன் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்கு அத்துபிடி. ஆனாலும் கூட விஜயாவாகினிக்குள் எடுக்கப்பட்ட ஒவ்வொரு படத்திற்கு முன்பும் அங்கே சென்று லொகேஷன் பார்ப்போம். அதற்கு எஸ்பிஎம் சொல்கிற ஒரு காரணம், ‘குறிப்பிட்ட படத்திற்கான மனநிலையோடு ஒரு இடத்தைப் பார்க்க வேண்டும்’ என்பார்.

‘முரட்டுக்காளை’ ரயில் சண்டைக் காட்சிக்காக லொகேஷன் தேடினோம். செங்கோட்டை ரயில் பாதை சரியானதாக இருந்தது. அந்தத் தடத்தில் தான் குறைவான ரயில் போக்குவரத்து இருந்தது. நான்கு நாட்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிக் கொண்டோம். அதில் எட்டுமணி நேரம் மட்டுமே சண்டைக் காட்சியைப் படம்பிடித்தோம்.

இதற்கு மூன்று கேமராக்களைப் பயன்படுத்தினேன். ஒரு கேமரா ரயிலுக்கு முன்னாடி ‘ரிக்’ செய்யப்பட்டது. மற்றொன்று ரயிலின் பக்கவாட்டு பகுதியில். மற்றொன்றை என்னிடம் வைத்துக் கொண்டு முழுவதுமாக ஹான்ட் ஹெல்ட் ஆக பயன்படுத்தினேன். எந்த ‘ப்ளாக்’ எப்படி வரப்போகிறது என்பதை நானும் இயக்குநரும் பேசிக்கொள்வோம். சில ‘ரிஸ்க்’கினை எடுக்கலாமா என்று நான் கேட்டால், “உங்கள் சுதந்திரம்..எனக்கு ரிசல்ட்’ வேண்டும் என்பார்’ . அந்த சுதந்திரம் ஒரு தொழில்நுட்பக் கலைஞருக்கு மிக முக்கியம்.

ரயில் போகும் வேகத்துக்கு நம்மால் படமெடுக்க முடியாது என்பதால் ரயிலை மெதுவாக ஓட்டச் சொன்னோம். ரயில் மெதுவாக ஓடுவது பார்வையாளர்களுக்குத் தெரியக்கூடாது. பிறகு சண்டைகாட்சியின் விறுவிறுப்பு குறைந்து போகும். ரயில் மெதுவாகப் போகிறதே என்று கேமராவை மெதுவாக்கினால் நடிகர்கள் சண்டை போடுவது வேகமானதாகிவிடும். ரயில் மெதுவாகப் போகிறது என்பது தெரிந்துவிடும். பிறகு அதில் என்ன ‘த்ரில்’ இருக்கும்? அதனால் ‘ஸ்டன்ட்மேன்’களிடம் சண்டையை மெதுவாக நடத்திக் காட்டும்படி சொன்னேன். இப்போது ரயில், கேமரா, சண்டை மூன்றின் வேகமும் ஒன்றாகிவிட்டது. முழுக்கவும் கையில் வைத்து கேமராவை இயக்கியதால் அசைவு அதிகம் இருந்து விடக்கூடாது என்பதற்காக முழுக்கவும் ‘வைட் லென்ஸ்’ பயன்படுத்தினேன்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ரயிலில் பயணம் செய்யும்போது பார்த்திருப்பீர்கள். ரயிலுக்கு அருகே வருகிறவை அனைத்தும் வேகவேகமாகக் கடந்து போவது போல இருக்கும். தூரத்தில் உள்ளவை மெதுவாக கடப்பது போன்ற தோற்றம் தரும். அதனால் காட்சியின் பின்னணியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். ரஜினிகாந்த் ரயிலுக்கு வெளியே தொங்கியபடி சண்டை போடுவார். அதை படம்பிடிக்கும்போது ரயிலுக்கு அருகே செடிகள், கைப்படி சுவர்கள் போன்றவை இருக்குமாறு இடத்தைத் தேர்வு செய்திருந்தோம். இது ரயில் வேகமாகக் கடக்கிற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. எதற்காக இவ்வளவு சொல்கிறேன் என்றால் தொழில்நுட்பவசதிகள் அதிகமற்ற அந்தக் காலகட்டத்தில் இது போன்ற புதிய முயற்சிகள் எடுத்து நாங்கள் எதிர்பார்த்தது போன்ற ‘ரிசல்ட்’ கிடைக்கையில் ஏற்படுகிற கிடைக்கின்ற சந்தோஷத்தை எதனோடும் ஒப்பிட முடியாது. இன்றும் இந்தக் காட்சிகளை நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி தருகிறது.

இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கணவன், மனைவி போல என்று சொல்வார்கள். ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கவேண்டிய நம்பிக்கைகாகத் தான் அப்படி சொல்கிறார்கள். இயக்குநர் தன்னுடைய கற்பனையை காகிதத்தில் எழுதுகிறார். அதை அவர் காட்சியாகப் பார்ப்பதற்கு முன்பு ஒரு ஒளிப்பதிவாளர் தான் முதலில் பார்ப்பார். நாங்கள் பணி செய்த காலத்தில் ஒளிப்பதிவாளருக்கு மட்டும் தான் ஒரு ஷாட் எப்படி வந்திருக்கிறது என்பது தெரியும். ‘வ்யூஃபைன்டரில்’ என்னத் தெரிகிறது என்பதை ஒளிப்பதிவாளர் மட்டுமே அறிவார். ‘எனக்கு இப்படித் தேவை’ என்று இயக்குநர் சொல்லுவார். அதனை அப்படியே எடுத்துத் தருகிறோமா என்பதில் இயக்குநர் சதா சந்தேகம் கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாக வேலை செய்ய முடியும்? அதனால் ஒரு இயக்குநர் ஒளிப்பதிவாளர் மேல் அபாரமான நம்பிக்கைக் கொண்டிருக்க வேண்டும். என் மேல் அப்படியான நம்பிக்கைக் கொண்டிருந்தார் எஸ்.பி.எம்.

இயக்குனர் திரு எஸ்.பி முத்துராமன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. பாபு

ஸ்க்ரிப்ட்டில் முதலிலேயே ‘லாங் ஷாட்’, ‘மிட் ஷாட்’ என்று குறித்துக் கொள்வோம். இது ஒரு வழிகாட்டி போலத் தான். ‘செட்’டுக்குப் போனால் நிறைய மாற்றங்கள் வரும். சில சமயங்களில், “இந்த ஷாட்டை இந்த மரத்திலிருந்து அல்லது மலையிலிருந்து தொடங்கலாமா? பார்க்க அழகாக இருக்கிறதே’ என்று சொல்வேன். அதற்கு எஸ்.பி.எம் ,”வேண்டாம்..இந்தக் காட்சியில் நடிகர்களின் உணர்ச்சிகள் தான் முக்கியம். வேறேதேனும் காட்டினால் நீர்த்துப் போகும். அதனால் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.. பாடல்களில் சேர்த்துக் கொள்ளலாம்’ என்பார்.

ஒரு காட்சி எத்தகையது என்பது எல்லோரையும் விட இயக்குநருக்குத் தான் தெரியும். எஸ்.பி.எம் வேண்டாம் என்று சொல்லமாட்டார். ‘இந்தக் காட்சிக்கு வேண்டாம், பாடலில் சேர்த்துக் கொள்ளுங்கள்’ என்பார். இது எனக்கு அவரிடம் பிடித்த ஒன்று. என்னுடைய யோசனையையும் அவர் கேட்பார், அவர் நினைத்ததிலும் உறுதியாக நிற்பார். ‘நம்மை இவர் டாமினேட்’ செய்கிறார் என்று நான் நினைத்தால் அது தப்பாகிவிடும், இதனை ஒரு இயக்குநரின் ஆளுமை என்பதாகத் தான் நான் புரிந்து கொள்ள வேண்டும். இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் அவரவருக்கான எல்லைகளைத் தெரிந்து கொண்டு மற்றவருக்கும் விட்டுக் கொடுத்து போக வேண்டுமென்பதைத் தான் கணவன் மனைவி உறவு என்கிறார்கள்.

இங்கு இடைச்செருகலாய் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ஒரு படத்திற்கான முன்தயாரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை அப்போது எல்லோருமே அறிந்திருந்தோம். சிறந்த உதாரணமாய் ஒன்றைச் சொல்வேன். கலைஞர் கருணாநிதி அவர்கள் திரைக்கதையை எழுதும் முறையைப் பற்றி பலரும் சிலாகித்து சொன்னதைக் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு காட்சியின் தொடக்கத்திலும், முந்தைய காட்சி எந்த உணர்வு நிலையில் முடிந்தது என்று எழுதுவாராம். அதிலும் வண்ணவண்ண நிற பேனாக்களைக் கொண்டு. ஒரு இயக்குநருக்கு இது தேவைப்படும் என்று அவர் யோசித்திருக்கிறார் பாருங்கள்!!

ஒரு படத்தின் வெற்றி என்பது அது ஈட்டித்தருகிற பேர், பணம் இதோடு மிக முக்கியமாய் போட்ட காசுக்கு மேல் லாபம் வந்ததா என்பதிலும் இருக்கிறது. இந்தத் தெளிவு எஸ்.பி.எம் அவர்களுக்கு எப்போதுமே இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை அவர் இயக்கியிருக்கிறார், ஒரு படம் கூட பட்ஜெட் தாண்டி அவர் எடுத்ததில்லை. திட்டமிடுதல் தான் இதற்கு முக்கியக் காரணம். ஒரு வருடத்திற்கு மூன்று படங்கள் வரை கூட எடுத்திருக்கிறோம். அந்த வருடத்தில் என்னென்ன படங்கள் எடுக்கப்போகிறோம் என்பதை முன்பே தீர்மானித்துக் கொள்வோம். முன்கூட்டியே நடிகர்களிடம் தேதிகள் வாகி வைத்துக் கொள்வோம்.

ஒரு கதை இருக்கிறது. அது இந்த நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவானதும், அவருக்கான ‘பிசினஸ்’ என்ன என்பதை வைத்து பட்ஜெட் தீர்மானிக்கப்படும். சினிமாவுக்கு முக்கியமான விஷயம், இந்த பட்ஜெட்டை படம் தாங்குமா என்ற தெளிவு இருக்க வேண்டுமென்பது. அடுத்தது எதையும் செட்டில் போய்ப் பார்த்துக் கொள்வோமென்கிற பேச்சே இருக்கக்கூடாது. முன்தயாரிப்பிலேயே எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொள்ளவேண்டும். இப்படி நாங்கள் திட்டமிட்டதால் 22 நாட்களிலே கூட ஒரு படத்தை முடித்திருக்கிறோம். ‘உன்னை சொல்லிக் குற்றமில்லை’ படம் 22 நாட்களில் எடுத்தது தான்.

இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியவர் வாலி. ஸ்க்ரிப்டினை ஒருபுத்தகம் போல தந்துவிட்டார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்தது. நவீன வசதிகளுடன் ஸ்டுடியோவை நிர்வகித்து வந்தார் டி.ஆர். சுந்தரம் அவர்கள். ஸ்க்ரிப்டோடு ஸ்டுடியோக்குள் சென்றால் படத்தோடு வெளியே வரலாம். எக்ஸ்போஸ் செய்த ஃபில்மை இரவு ஒன்பது மணிக்குக் கொடுத்தால் காலையில் படம் தயாராக இருக்கும். மின்சாரம் தடைபட்டால் சத்தமில்லாத ஜெனரேட்டர் தானாக வேலை செய்யும். ஒவ்வொன்றையும் திட்டமிடுதலுடன் நிர்வகித்தவர் அவர். அதனால் தான் சொன்ன பட்ஜெட்டுக்குள், திட்டமிட்ட நாட்களுக்கு படங்கள் எடுக்கப்பட்டன.

என்னிடம் பலரும் கேட்கும் கேள்வி ‘குறிப்பிட்ட நாட்களுக்குள் படமெடுக்க வேண்டும் என்றால் அந்த அழுத்தத்தை படப்பிடிப்பில் தாங்குவது ஒளிப்பதிவாளர் தான். நீங்கள் எப்படி இத்தனைப் படங்களாக அதை சமாளித்தீர்கள்?” என்பார்கள்.

கேமேராவுடன் பழகிப் பழகி கேமரா பேசம் மொழியே எனக்குப் புரிந்து போய்விட்டது . அதிலிருந்து சிறு முனகல் கேட்டாலும் எங்கேயோ தப்பிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துவிடுவேன். இது முழுக்க என்னுடைய அனுபவத்தில் பெற்றுக் கொண்டது.

அடுத்ததாக , ஃபிலிம் என்பதில் தான் நாம் நமது கட்டுப்பாட்டைத் தொடங்குகிறோம். இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது ஒன்றிருக்கிறது. ஃபிலிம் இருந்தவரை நம்மிடையே ஒரு கட்டுப்பாடு இருந்தது. அதாவது 13000 அடியை நாங்கள் தாண்டவிடமாட்டோம். எத்தனை அடியோ அதிலிருந்து மூன்று மடங்கு என்பது தான் எங்களது பட்ஜெட் கணக்கு (உம் – 13,000X3). சில படங்களில் தெரிந்தே கூடுதலான அடிகளைப் பயன்படுத்தினோம். ‘முரட்டுக்காளை’ ரயில் சண்டைக்கு மட்டும் பத்தாயிரம் அடிக்கு எடுத்தோம். நாங்கள் உபயோகப்படுத்தியது 800 அடி தான். ஏ.வி.எம் என்பதால் தாக்குப் பிடிக்க முடிந்தது.

ஃபிலிம் அதிகமாய் செலவானால் பதட்டம் வந்துவிடும். இப்போது அந்தக் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. பிரிண்டிங் செலவு இல்லையென்பதால் எடுக்கும் காட்சியில் திட்டமிடுதல் போய்விடுகிறது. ஒருநாளில் முடிக்க வேண்டியவை அடுத்த நாளுக்கும் தள்ளிப் போகிறது. மணி நேரங்கள், நாட்கள் அதிகமாகும்போது செலவு கூடிக் கொண்டே போகும்.

சினிமா நன்றாக இருக்கவேண்டுமானால் நமக்கு பட்ஜெட் கட்டுப்பாடு தெரிந்திருக்க வேண்டும். படம் இந்த பட்ஜெட்டினைத் தாங்குமா என்பதில் தெளிவு இல்லையென்றால் நஷ்டம் தயாரிப்பளாருக்குத் தான்.

வருடத்தில் பெரும்பாலான நாட்கள் நான் படப்பிடிப்புத் தளத்தில் தான் இருந்தேன். என்னுடைய குடும்பத்திற்காக நேரம் செலவழித்ததென்பது மிகக்குறைவு. ஒரு படம் தொடங்கப்போகிறோம் என்றால் அதன் கதை விவாதத்தில் தொடங்கி படம் தியேட்டரில் வெளிவருவது வரை வேறு எந்த நினைவும் எங்களுக்கு இருக்காது. ஒளிப்பதிவாளராய் பணிசெய்ய பல இடங்களில் இருந்து வாய்ப்பு வந்தபோதிலும் ஒரு குடும்பமாய் நாங்கள் பழகிவிட்டதால் இந்த ‘யூனிட்டை’ விட்டு நான் சென்றதில்லை. எங்கள் படங்களின் ஒவ்வொரு பாடல்பதிவும் எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியும். ஒரு படத்தில் பணியாற்றினோம் என்று சொல்லமாட்டேன், அதோடு வாழ்ந்தோம் என்று தான் சொல்வேன். அந்த உணர்வு தான் என்னையும் எஸ்.பி.எம்மையும் பிரிக்காமல் வைத்திருந்தது என்பது தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகு யோசிக்கும்போதும் தோன்றுகிறது.

x
^