Writer’s Bend: Tamil article!

Jun 22 2023

Views: 647

கதைகள், சினிமா எல்லாம் கற்பனை தானே!
அப்படியானால் எழுத்தாளர் என்னவேண்டுமானாலும் எழுதலாம் தானே? கதையை எப்படி வேண்டுமானாலும் வளைக்கலாம் தானே? எங்கிருந்து இந்த ரயிட்டர்ஸ் பெண்ட் வந்தது?

கதைகளும், கதாப்பாத்திரங்களும், சூழ்நிலைகளும் கற்பனையாகவே இருந்தாலும் காரணம், காரியம் என்பது நிலையாக இருக்கவேண்டும். ஒரு காரியம் நடக்கிறதென்றால் காரணம் சரியாக இருக்கவேண்டும். அதை கற்பனை என்று சொல்லி தவறான கதையோட்டத்தை சரிப்படுத்த கூடாது. கதை நடக்கும் காலம் (ஆண்டு), காலகட்டம் (தேதி, கிழமை, நாள் போன்றவை) தெளிவாக இருக்கவேண்டும். நான் லீனியர் என்று சொல்லப்படுகிற முன்னுக்கு பின்னாக சொல்லக்கூடிய கதைகளுக்கு இது மிகவும் அவசியம். எந்த காட்சி கடந்த காலத்தை பற்றி பேசுகிறது, அந்த கடந்த காலத்தின் ஆண்டு, தேதி போன்றவை காட்சியில் பதிவு செய்தல் தான், எதிர்காலத்தில் நடக்கும் காட்சியுடன் பார்வையாளர்களால் ஒன்றி பார்க்க முடியும்.

கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி, இலக்கை நிர்ணயித்து, பாதையை கடினமாக்குபவரும் எழுத்தாளர் தான். அந்த சவால்களில் எப்படி அந்த கதாபாத்திரம் ஜெயித்தது, அதிலிருந்து என்ன பாடத்தை கற்றுக்கொண்டது என்று எழுதுவதும் அதே எழுத்தாளர் தான். இந்த இரண்டு விஷயங்களும் இயற்கையாக எழுதவேண்டுமே தவிர செயற்கையாக எழுத கூடாது. வேண்டுமென்றே காட்சிகளை உருவாக்கி கதாப்பாத்திரங்களுக்கு சவால்களோ, தீர்வுகளோ தரக்கூடாது. மனதில் படத்தையெல்லாம் எழுதினால் கதையின் மேல் பார்வையாளர்களுக்கு நம்பகத்தன்மை போய்விடும்.

கதாப்பாத்திரம் என்பது அந்த எழுத்தாளர் அல்ல. கதையில் வரும் எல்லா கதாப்பாத்திரங்களும் எழுத்தாளரின் மன நிலையை, அரசியல் நிலைப்பாட்டை, வாழ்க்கையின் தத்துவங்களை பிரதிபலுக்க கூடாது. ஒவ்வொரு கதாப்பாத்திரங்களும் குணாதிசயங்களில் வேறு வேறாக இருந்தால் தான் பார்வையாளர்களுக்கு பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். அந்த அந்த கதாப்பாத்திரங்களின் சூழ்நிலையை பொறுத்தே வசனங்கள் இருக்கவேண்டும்.

காலம், காலகட்டம், இயற்கையான கதையோட்டம், அந்த அந்த கதாப்பாத்திரங்களுக்கு ஏற்ற வசனம் இல்லாமல் போனால் ரயிட்டர்ஸ் பெண்ட் தோன்றும்.

ரயிட்டர்ஸ் பெண்ட் மூலமாக எதை எல்லாம் கதையில் வளைக்கக்கூடாது?

ரயிட்டர்ஸ் பெண்ட் என்பது இருமுனை கூர் கத்தி போன்றது. ரசனையான காட்சியாக இருந்தாலோ அல்லது மக்களுக்கு பிடித்த நடிகர்கள் நடித்திருந்தாலோ அவர்கள் கதை எழுத்தாளர்களுக்கு ஏற்ப வளைக்கப்படுவதை மக்கள் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதுவே தொய்வுள்ள கட்சியாக இருந்தால் மக்கள் அதை ஊத்தி பெரிதாக்கி வேடிக்கையாக்கிவிடுவார்கள். எதை எங்கே பயன்படுத்த வேண்டும், கூடாது என்பது திரைப்படத்தின் எழுத்தாளருக்கும் இயக்குனருக்கும் தெரிந்திருக்க வேண்டும். குறிப்பாக கதையின் முக்கிய புள்ளியிலும், கால நேரங்களிலும் இவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.

Article by

– Sai Vijendhiran

x
^