கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 2

May 28 2018

Views: 2610

திரைப்படத்தை விற்பனை மூலம் மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில்  வருமானம் வருகிறது.

 

1 . டிவிடி/விசிடி உரிமை
2 . ஆடியோகேசட்/ சீடி உரிமை

3 . சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமை

4 . இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை

5 . பிறமொழி மொழிமாற்று உரிமை அல்லது ரீமேக் உரிமை.

6 . பேருந்து/ ரயில்/ விமான ஒளிபரப்பு உரிமை

7 . மெர்சென்டைஸிங் உரிமை.

 

மெர்சண்டைஸிங் உரிமை, விற்பனை என்பது போன்ற வழிகள் கூட தற்போதைய தமிழ் சினிமா உலகில் சாத்தியமாகிறது. அதாவது.. தசாவதாரம், சிவாஜி போன்ற படங்களின் பெயர் போட்ட டி-சர்ட், தொப்பி, என்பது போன்ற பொருட்கள், உடைகளை விற்பதற்கான உரிமையை விற்பது மூலம், வரும் வருமானத்தைதான் மெர்சண்டைஸிங் ரைட்ஸ் என்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் விஸ்தரிக்க படாத வியாபாரமாகவே இருக்கிறது. அதற்கு காரணம் நம் நாட்டு காப்பிரைட்டும் அதற்கான  சட்டங்களும்தான். மேற்சொன்ன விஷயங்களை எல்லாம் வரும் பகுதிகளில் விரிவாக பேசுவோம்.

ஒரு படத்தின் விலையை யார் நிர்ணயம் செய்கிறார்கள? கமல் நடித்த தசாவதாரம் திரைப்படம் சுமார் 60கோடிக்கு தயாரிக்கபட்டது என்பது எல்லோரும் அறிந்ததே. இப்படத்துக்காக கமல், இயக்குனர் ரவிகுமார், மற்ற தொழில் நுட்ப கலைஞர்களின் சம்பளம், படப்பிடிப்புக்கான செலவு, விளம்பர செலவுகள், என்று எல்லாவற்றையும் சேர்த்து தான் படத்தின் விலை நிர்ணையம் செய்யப்படுகிறது. அப்படி நிர்ணையக்க பட்ட விலையை எவ்வாறு வசூலிக்கிறார்கள்? அதற்கு பல வழிகளில் வியாபாரங்கள் செய்யப்படுகிறது.

 

  • அவுட்ரைட்
  • G
  • டிஸ்டிரிபியூசன்

என்பது போன்ற வழிகளில் வியாபாரம் செய்யப்படுகிறது.. அவுட்ரைட், எம்.ஜி, டிஸ்டிரிபியூசன் என்றால் என்ன? என்பது போன்ற விஷயங்களை பற்றி பின்னர் பேசுவோம். இப்போது முதலில் தமிழ் திரைபட வியாபார ஏரியாக்களை பற்றி பார்ப்போம்
1.சிட்டி (சென்னை)

தமிழ் சினிமாவின் ஏழு வியாபார பிரிவில் முக்கியமான ஏரியா சிட்டி எனப்படும் சென்னை மாநகரத்தில் உள்ள தியேட்டர்களில் வெளீயிட கொடுக்கும் உரிமை. அதாவது.. சென்னை என்பது இப்போதைய விரிவாக்கபட்ட சென்னை கிடையாது. பழைய சென்னை வரையறைக்குள் உள்ள ஏரியாக்களே இப்போதும் சென்னை சிட்டி ஏரியாவாக கணக்கிடப்படுகிறது.

உதாரணமாய் சென்னையில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி தியேட்டருடன் சென்னை சிட்டியின் சவுத் ஏரியா முடிவடைகிறது. அதற்கு பிறகு உள்ள கோயம்பேடு, எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம், தேவிகருமாரி, காசி, ஜோதி போன்ற தியேட்டர்கள் செங்கல்பட்டு ஏரியாவிற்கு போய்விடும். அதே போல் வட சென்னையில் பார்த்தால் திருவெற்றியூருக்கு முன் வரும் தியேட்டர்கள் சென்னை ஏரியாவில் வரும், அதன் பிறகு வரும் ஏரியாக்கள் எல்லாமே செங்கல்பட்டு ஏரியாவுக்குள் வரும். அதே போல் குரோம்பேட்டை, தாம்பரம், அடையார், திருவான்மியூர், பிரார்த்தனா, மாயாஜால் போன்ற தியேட்ட்ர்கள் செங்கல்பட்டு ஏரியாவுக்குள் வரும்.

 

  1. N.S.C (North Arcot, South Arcot, chengalpat)
    பழைய வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கலபட்டு ஏரியாக்கள்

நிறைய படங்களை மொத்தமாய் N.S.C  எனப்படும் மொத்த ஏரியாவுக்கும் வாங்கிவிட்டு, தனிதனியாய் பிரித்து விற்றுவிடுவதும் உண்டு, அதாவது செங்கல்பட்டு தனியாகவும், வட ஆற்காடு, தென் ஆற்காடு ஆகியவற்றை தனியாகவும் விற்பது. தற்போதைய செங்கல்பட்டு ஏரியா விரிவாக்கப்பட்ட சென்னையின் பல முக்கிய பகுதிகள் அடங்கியிருப்பதால் செங்கல்பட்டு ஏரியாவை தனியாகவே பெரிய விலைக்கு விற்கிறார்கள். நாங்கள் விஜயகாந்த் நடித்த “எங்கள் அண்ணா” என்கிற திரைப்படத்தை சுமார் 65 லட்ச ரூபாய்க்கு செங்கல்பட்டு ஏரியாவை மட்டும் வாங்கினோம்.

  1. கோவை.

கோவை ஏரியா என்பது தற்போதைய நிலையில் தமிழ்நாட்டிலேயே பெரிய ஏரியாவாக கருதப்படுகிறது. அங்கு முன்பு ரிலீஸ் சென்டர்கள் எல்லாம் கோவை பெல்ட் பகுதிகள் வரை மட்டுமே இருந்த்து. ஆனால் இப்போதோ கோவை மாநாகரம் தவிர சுற்றுப்பட்டு சுமார் 35 சிறு நகரஙகளில் கூட ரிலீஸ் சென்டர் ஆகிவிட்ட நிலையில் இது சாத்தியமாகியது.

4. சேலம்

சேலம் ஏரியாவுக்குள் சேலம், தருமபுரி மாவட்டங்கள் அடங்கிவிடும். தமிழ் சினிமாவின் வசூலுக்கு சேலம் மாவட்டம் ஒரு முக்கிய ஏரியாவாக கவனிக்கப்படுகிறது. பெரும்பாலான ப்ளோட்டிங் பாப்புலேஷன் மக்கள் இந்த ஏரியாவில் அதிகம் ஆதலால்.

 

  1. M.R (மதுரை ராமநாதபுரம் மாவட்டம்)

பெருமபாலான படங்களின் தலையெழுத்தை நிர்ணையிக்கும் ஏரியா.. மதுரையில் ஒரு படத்துக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தால் தமிழ் நாடெங்கும் அதே வரவேற்ப்பு இருக்கும் என்பது நிதர்சன உண்மை. மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டஙக்ளில் சினிமா வெறி கொண்ட ரசிகர்கள் அதிகம். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்திலிருந்தே சினிமா மீது ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் உள்ளவர்களின் ஊர். அதனால்தான் வெற்றி படத்தை நிர்ணையக்கும் ஊராய் இருக்கிறது.

 

  1. T.T. (திருச்சி- தஞ்சாவூர்)

    இது தஞ்சாவூர் மற்றும் திருச்சியை சுற்றி உள்ள மாவட்டங்களை கவர் செய்யும் ஏரியா. தமிழ் சினிமாவின் வெற்றியை உறுதிபடுத்தும் ஊர்களில் திருச்சியும் ஒன்று.

 

  1. T.K (திருநெல்வேலி, கன்யாகுமரி).

இது திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களை குறிக்கும் ஏரியா இது.
இப்படி தமிழ்நாட்டுக்குள் ஏழு ஏரியாக்களில் வியாபாரம் செய்யப்படும் தமிழ் சினிமா, தற்போது ஒன்பது ஏரியாவாகவும் விற்கப்படுகிறது. அதாவது வட ஆற்காடு தனியாகவும், தென் ஆற்காடு தனியாகவும், செங்கல்பட்டு தனியாகவும் பிரித்து விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தற்போது வட நாட்டு முக்கிய நகரஙகளான மும்பை, டெல்லி போன்ற ஊர்களுக்கும் வியாபாரம் செய்யப்பட்டு வெளியிடபடுகிறது. இதற்கான விலை தனி.

எந்தந்த முறையில் தமிழ் சினிமாவின் வியாபாரம் செய்யபடுகிறது? எம்.ஜி, அவுட்ரைட், டிஸ்ரிபூயூசன், என்பது என்ன? என்பதை நாம் பார்ப்போம்.

திரைப்பட விநியோகம்

படம் தயாரானவுடன் ப்ரிவியூ எனப்படும் வியாபார காட்சிகள் திரையிட தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்வார்கள், அதற்கு திரையுலகில் உள்ள முக்கிய விநியோகஸ்தர்கள் எல்லாரையும் அழைத்து தங்களது திரைப்படத்தை காண்பிப்பார்கள். படத்தை பார்க்கும் விநியோகஸ்தர்கள், அல்லது அவர்களது மீடியேட்டர்கள் எனப்படும் இடைநிலை தரகர்கள், படத்தின் விலையை அதில் நடித்த நடிகர், நடிகைகளை வைத்தோ, அல்லது இயக்குனர், மற்றும் டெக்னீஷியன்களின்  தரத்தை வைத்தோ, அல்லது இதற்கு முன்னால் அந்த நடிகரின், இயக்குனரின் படம் ஓடியதை வைத்தோ.. ஏரியா வியாபாரம் பேசுவார்கள். பெரும்பாலும் இவர்கள் செய்யும்  முடிவுகள் முக்கால் வாசி நேரம் தவறாகவே போயிருக்கிறது.

பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு பெரிய போட்டா போட்டி இருப்பதுண்டு, இவர்கள் நடித்த படங்களை வியாபார காட்சிகள் கூட போடாமலேயே வியாபாரம் நடந்துவிடும். ஏனென்றால் அவர்களின் படங்களுக்கு பெரிய ஒப்பனிங் இருக்கும், முதல் வாரத்திலேயே மிகப் பெரிய வசூலை பார்த்துவிடலாம் என்பதால்தான் அது. படத்தை பார்க்காமலேயே பெரிய இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என்று ஸ்பெகுலேஷனிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அம்மாதிரியான பெரிய படங்கள் வந்த சுவடு தெரியாமல் முதல் வாரத்திலேயே பெட்டிக்குள் போன கதைகளும் உண்டு.
சூர்யாவும், ஜோதிகாவும் அவர்களின் காதல் கிசுகிசு பிரபலமாய் இருந்த நேரம், அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் ‘உயிரிலே கலந்தது” மிகுந்த எதிர்பார்ப்பு அந்த படத்திற்கு இருந்தது, நானும் என் நண்பர்களும், ஏற்கனவே சேதுவை கண்ணுக்கு தெரிந்து கைவிட்டதால், இப்படத்தின் கதையை முன்பே கேட்டிருந்ததால், நிச்சயம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில், இப்படத்தின் சென்னை நகர உரிமையை கேட்டோம். சென்னை நகர உரிமையை அவுட்ரைட் எனப்படும் முறையில் விலை பேசினோம். ஆறு லட்ச ரூபாய்க்கு ஐந்து பிரதிகளுடன் வியாபாரம் படிந்தது. ஆனால் அந்த படத்தை சென்னை நகரில் வெளியிடுவதற்க்குள் நாங்கள் பட்ட பாடு எங்களுக்குதான் தெரியும்.. அதைபற்றி பின்னால் சொல்கிறேன். இப்போது விநியோக முறைகளை பற்றி பேசுவோம்.

 ……………தொடரும்

 

 

கேபிள் சங்கர்

எழுத்தாளர்/விமர்சகர்/திரைப்பட இயக்குநர்

x
^