கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 3

Jun 09 2018

Views: 2459

அவுட்ரைட்

சரி அவுட்ரைட் என்றேனே அது என்ன என்று கேட்கிறீர்களா.? அவுட்ரைட் என்றால் நாம் ஒரு தொகைக்கு சென்னை நகருக்கான மொத்த விநியோக உரிமையையும், குறிப்பிட்ட அளவு பிரதிகளுடன் விலை பேசுவது.  அதன் பிறகு அந்த படத்தை பொறுத்த வரை சென்னை மாநகர திரையரங்குகளில் வெளியிடும் உரிமை முழுக்க, முழுக்க நமக்கே கொடுத்துவிடுவார்கள், அதன் பிறகு திரைப்பட தயாரிப்பாளருக்கும் நமக்கும் பெரிதாய் எந்தவிதமான ஒரு பெரிய உடன்பாடும் தேவையிருக்காது. அதாவது, தியேட்டர் புக் செய்து அதற்கான முன்பணம், விளம்பரம், போஸ்டர்கள் எல்லாவற்றுக்கும் சென்னை நகர உரிமையாளரையே சாரும். படத்தின் விலை, தியேட்டர் முன் பணம், விளம்பரம்,  என்று எல்லா செலவுகளையும் சேர்த்தால் நாம் வாங்கிய விலைக்கு இன்னொரு பங்கு எடுத்து வைக்க வேண்டும்.

நாங்கள் உயிரிலே கலந்தது என்கிற படத்தின் சென்னை உரிமையை வாங்கினோம் என்று சொன்னேன் அல்லவா..? ஐந்து பிரதிகளுடன் நாங்கள் வாங்கியது ஆறு லட்ச ரூபாய்க்கு, அதை தவிர நாங்கள் சென்னை நகரின் முக்கிய தியேட்டர்களில் வாடகைக்க்கு எடுத்து இன்றைய தேதியிலிருந்து நாஙகள் இத்தனை, இத்தனை காட்சிகள் படத்தை உங்கள் திரையரங்குகளில்  வெளியிடப்போகிறோம் என்று பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும். அதற்கு குறைந்தது இரண்டு வார வாடகையை முன் பணமாய் கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் படத்தின் விளம்பர போஸ்டர், ஸ்டில்ஸ்  போன்றவற்றை எங்களுக்கு அளிக்க, அதற்கான செலவுகள் எல்லாம் விநியோகஸ்தர்களே செய்ய வேண்டும்.

சென்னை மாநகரை பொறுத்த வரை திரையரங்குகளில் பெரும்பாலும் வாடகை முறைதான்  நடைமுறையில் இருந்த காலம். இம்முறையில் நாங்கள் உயிரிலே கலந்தது படத்தை சென்னை மாநகரில் வெளியிட ஆறு லட்சம் ரூபாய்க்கு வாங்கி, அதை வெளியிட விளம்பரம், திரையரங்குகளின் வாடகை, என்ற வகையில் செலவு செய்து, பதிமூணு லட்ச ரூபாய் நஷ்டம் அடைந்த கதை தனி..

 

எம்.ஜி.(Minimum Guarentee)

மினிமம் கேரண்டி என்றால் குறைந்தபட்ச உத்திரவாதம் என்று வைத்து கொள்ளலாம். அதாவது  குத்து மதிப்பாய் ஒரு படத்தை அதன் நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களை வைத்து, இதற்கு முன் அந்த நடிகர், நடிகை நடித்த படஙக்ளின் வசூல் போன்ற எல்லாவற்றையும் கணக்கிட்டு, இந்த படம் இவ்வளவு வசூல் செய்யும் என்ற அனுமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விலை பேசுவது.

நாங்கள் துள்ளுவதோ இளமை என்கிற படத்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்திய போது அவர்கள் சென்னை மாநகர உரிமைக்கு ஐந்து லட்சம் எம்.ஜி. கேட்டார்கள், நாங்களோ அவுட்ரைட்டாக கேட்டோம்.  அப்படத்தை எம்.ஜியில் எடுத்திருந்தால். படத்தின் வசூல் ஐந்து லட்சம் வரும் வரை நாம் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான பங்கு தொகையும் தர தேவையில்லை. அதே நேரம் அப்படம் ஐந்து லட்சத்தை தாண்டிவிட்டால் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களுக்கிடையே உள்ள ஒப்பந்தப்படி வசூலை பிரித்து கொள்வார்கள். ஒரு வேளை அப்படம் ஐந்து லட்சம் வசூல் வரவில்லை என்றால் தயாரிப்பாளரை எந்த விதத்திலும் பாதிக்காது. விநியோகஸ்தர்களைதான் பாதிக்கும்.

அதே படத்தின் உரிமையை எங்களுடய நண்பர் வேறொருவர் சென்னை உரிமையை எம்.ஜி என்கிற விதத்தில் வாங்கினார். படம் சுமார் பதினாறு லட்சம் வசூல் செய்தது என்றார்கள். அந்த வகையில் மீதம் உள்ள பதினோரு லட்சத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு சதவீதத்தை அவர்களுக்குள் உள்ள ஒப்பந்தப்படி விநியோகஸ்தர் பகிர்ந்து கொள்வார்கள். அப்படி பகிர்ந்து கொடுக்காத, கணக்கு மட்டுமே காட்டும் விநியோகஸ்தர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அதனால் தான் தயாரிப்பாளர்கள் படம் வெளிவருவதற்கு முன்னமே முடிந்தவரை அறுவடை செய்துவிடுவார்கள். பின்னால் அவர்களுக்கு ஏதும் தேறாது என்பதால்.

மிகப்பெரிய ஹிட் படமான உள்ளத்தை அள்ளித்தா திரைபடத்தின் தயாரிப்பாளர் சம்பாதித்ததை விட, அந்த படத்தின் விநியோகஸ்தர்கள் சம்பாதித்தது இரண்டு மடங்கு என்றால் அது மிகையாகாது. கார்த்திக், கவுண்டமணி, ரம்பா, சுந்தர்.சியின் இயக்கம், மீடியம் பட்ஜெட், காமெடி படம் என்கிற அளவிலேதான் அந்த படத்திற்கு விநியோகஸ்தர்களிடையே அபிப்ராயம் இருந்தது. அதனால் பல ஏரியாக்கள் அவுட்ரைட் முறையிலேயே விற்றால் போதும் என்று விற்றார்கள். படம் வெளியாகி முதல் இரண்டு வாரங்களுக்கு பெரிதாய் ஒன்றும் ஓடவில்லை. ஆனால் அதன் பிறகு படம் பிக்கப் ஆகி படம்  சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.  அதனால் மிகவும் லாபமடைந்தவர்கள் விநியோகஸ்தர்களே..

இதே நிலைமைதான் சேது படத்திற்கும், படம் மிகப்பெரிய ஹிட் என்றாலும் அதனால் தயாரிப்பாளருக்கு லாபம் ஒன்றும் பெரிதாய் கிடையாது.. என்ன இந்த ஒரு படம் ஹிட் தயாரிப்பினால், அடுத்த படம் தயாரித்தால் மார்கெட்டில் நல்ல விலைக்கு விற்க முடியும். அது கூட உடனடியாய் தயாரித்தால்தான். இல்லாவிட்டால் வெற்றிகள் மறக்கபடும். சினிமாவில் நாம் இருக்கிறோம் என்று காலாட்டிக் கொண்டே இல்லாவிட்டால் நிச்சயம் மறக்கப்படுவார்கள். சேது தயாரிப்பாளர் அடுத்த படம் தயாரிப்பதற்கு சில வருடங்கள் ஆனது. அவர் அடுத்து தயாரித்த படம் கும்மாளம் அது ஒரு தோல்விபடமாய் அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திலும் அவரால் பெரிய அளவிற்கு சம்பாதிக்க முடியவில்லை.. ஏனென்றால் அவர் சேதுவுக்கு பிறகு சில வருடங்கள் கழித்து தயாரித்ததினாலும்தான். அதே போல் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு உள்ள வசூல் ஒப்பந்தம் வேறு. அதை பற்றி பிறகு பார்ப்போம்.

டிஸ்ரிபியூசன்

டிஸ்ரிபியூசன் என்கிற முறையில் படத்திற்கான விலையோ.. அல்லது அவுட்ரைட்டோ, எம்.ஜியோ ஏதுமில்லாமல் படத்தின் விநியோக உரிமைக்காக மட்டும் ஒரு தொகையை முன்பணமாய் கொடுத்துவிட்டு எந்த ஏரியா வேண்டுமோ, அந்த ஏரியாவில் தியேட்டர்களில் வெளியிட்டு கொள்ளலாம். பெரும்பாலும் பெரிய நடிகர், நடிகைகள், நடிக்காத புதுமுக நடித்த திரைப்படஙக்ளுக்கோ, அல்லது சின்ன பட்ஜெட்டில் தயாரிக்கபட்ட பெரிய நிறுவனங்களின் படங்கள் இம்மாதிரியான வியாபாரம் செய்வார்கள்.

மாதவன், ரீமா சென் நடித்து கவுதமின் முதல் படமான மின்னலே என்கிற திரைப்படத்தை என்னுடய நண்பர் ஒருவர் செங்கல்பட்டு ஏரியாவுக்கு சுமார் பத்து லட்சம் முன் பணம் கொடுத்துவிட்டு விநியோக முறையில் வெளியிட்டார். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் எட்டுலிருந்து பத்து திரையரங்குகளில் வெளியிட திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து, முன்பணமோ, அல்லது எம். ஜி என்கிற குறைந்த பட்ச பணத்தையோ வாங்கி வெளியிடுவார். முன்பணமாய் வரும் பணம், அதன் பிறகு திரையரங்குகளில் வரும் வசூல் பற்றிய எல்லா கணக்கு வழக்குகளும் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தர் தெரிய படுத்தவேண்டும்.  மொத்தமாய் முதல் ஓட்டத்தில் படத்தின் வசூல் பத்து லட்சத்தை தாண்டினாலும், தாண்டாவிட்டாலும், வசூலான தொகையிலிருந்து விநியோகஸ்தருக்கு பத்திலிருந்து பதினைந்து சதவிகிதம் கமிஷன் தொகை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும், பின்பு அவர்களுடய முன் பணத்தையும் திரும்ப கொடுக்க வேண்டும்.

உதாரணமாய் ஒரு படத்திற்க்கு டிஸ்ட்ரிபியூஷன் முறையில் வெளியிடுவதற்கு, பத்து லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்திருக்கிறோம் என்று வைத்து கொள்ளுங்கள். படம் மொத்தமாய் சுமார் பதினைந்து லட்சம் வசூல் செய்திருந்தால் அதற்கு பத்து சதவிகிதம் கமிஷன் தொகையாய் சுமார் ஒன்னறை லட்சம் சேர்த்து பதினோரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயாக விநியோகஸ்தர் திரும்ப பெருவார். விநியோகஸ்தர் ஏற்கனவே முன்பணமாய் தயாரிப்பாளரிடம் பத்து லட்ச ரூபாய் கொடுத்திருப்பதால், வரும் வசூலுக்கு அவர் கணக்கு மட்டும் கொடுத்தால் போதும். படத்தின் ஓட்டத்தின் முடிவில் மொத்த தொகையான பதினைந்து லட்ச ரூபாயில் விநியோகஸ்தரின் முன் பணம் பத்து லட்சம், அவரது கமிஷன் தொகை ஒன்னறை லட்சம் ஆகியவற்றை கழித்து கொண்டு, மீத பணத்தை கொடுத்தால் போதுமானது.. அதே போல் விநியோகஸ்தர் கொடுத்த முன் பணத்திற்கும் குறைவாய் வசூல் வந்தாலும் அதாவது ஐந்து லட்சம்தான் மொத்த வசூல் என்று வைத்து கொண்டால், தயாரிபாளர் விநியோகஸ்தருக்கு படம் ஓடி முடிந்த பின், அவர் கொடுத்த பத்து லட்சம் முன் பணம், பின் அவரது கமிஷன் தொகையான ஐம்பதாயிரத்தையும் சேர்த்து பத்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும்.  அந்த முறையில் என்னுடய நண்பர் மின்னலே படத்தின் மூலம் சம்பாதித்தது சுமார்  பதினேழு லட்சம். அவர் கொடுத்த முன் தொகை சேர்த்து.. ஒரு மாதத்திற்குள்… அது தான் சினிமா..

இப்படி டிஸ்ரிபூஷனில் வெளிவந்து ஹிட்டான படங்கள் பின்னால் பெரிய விலைக்கு போனதும் உண்டு.. உதாரணமாய் திருடா, திருடி.. சிவா மனசில சக்தி போன்ற் படங்கள் மொத்தமாய் டிஸ்ரிபூஷனில் வெளியாகி.. பின்பு ஏரியா விற்கபட்டு தயாரிப்பாளர்களூக்கு லாபம் ஈட்டி கொடுத்த படங்கள் ஆகும். திருடா திருடி படத்தை என்னுடய ஒரு முடிவால் சுமார் எட்டு லட்சம் இழந்தது வேறு கதை..

ஆனால் இப்போது விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் தொகை10-15 சதவிகதத்திலிருந்து 5-10 சதவிகிதமாய் தயாரிப்பாளர்களால் குறைக்கப்பட்டுவிட்டது.. ஏன் என்றால் விநியோகஸ்தர்களின் நேர்மையின்மையே ஆகும். பெரிய விநியோகஸ்தர்களுக்கு மட்டுமே இப்போது பத்து சதவிகிதம் எல்லாம். சிறிய விநியோகஸ்தர்களுக்கு இப்போதெல்லாம் ஐந்துதான். அது எப்படி அவர்கள் தவறான கணக்கை கொடுத்து தயாரிப்பாளர்களை நோகடிக்கிறார்கள் என்பதை வரும் அத்யாயங்களில் பார்க்கலாம்.

 

……………தொடரும்

 

கேபிள் சங்கர்

எழுத்தாளர்/விமர்சகர்/திரைப்பட இயக்குநர்

 

 

 

 

x
^