கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 4

Jul 10 2018

Views: 2434

சுய வெளீயீடு.
சில சமயம் மேலே சொன்ன எந்த முறையிலும் சில படங்கள் விற்பனையாகாமல் போகக்கூடிய வாய்ப்பு அதிகம் இருக்கிறது.. அது பெரும்பாலும் புது முகங்கள் நடித்த, சிறு முதலீட்டு  படங்களுக்கும், ஏற்கனவே ஒரு படம் நடித்து வெற்றி பெறாத நடிகர்கள் நடித்த படத்திற்கும் தான் இம்மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும்.. அப்போது வேறு வழி கிடையாது..  ஒன்று விநியோக துறையில் உள்ளவர்கள் யாராவது ஒரு பெரிய விநியோகஸ்தர்களை அணுகி வெளியிட வேண்டும்.. இல்லையென்றால் இதற்கான மீடியேட்டர்களையும், நேரடியாய் தியேட்டர்களையும், அணுகி அந்த தயாரிப்பாளரே நேரடியாய் வெளியிடுவார்.

இது படம் தயாரிப்பதை விட கஷ்டமான விஷயம். ஏற்கனவே பெரிய அனுபவமில்லாமல் தயாரிப்பில் அவஸ்தைபட்டிருக்கும் அவர், மீண்டும் கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல இந்த துறையில் இறங்க வேண்டும். பெரும்பாலும் தயாரிப்பாளர்களே நேரடியாய் வெளியிடும் பட்சத்தில் மீடியேட்டர்கள் பெரிதாய் காசு அடித்துவிடுவார்கள்.

அதைவிட கொடுமை என்னவென்றால் தியேட்டரில் வசூல் கணக்கை பார்பதற்காக, விநியோகஸ்தர்கள் தங்கள் சார்பாக ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு  ஆளை போட்டிருப்பார்கள், அவர்தான் விநியோகஸ்தர்களுக்கான சரியான டிக்கெட் விற்பனையை பற்றிச் சொல்வார்கள். சில சமயம் தியேட்டர் மேனேஜர் அவர்களையும் கையில் போட்டுக் கொண்டு லவுட்டி விடுவதும் உண்டு.. பழம் தின்று கொட்டை போட்ட விநியோகஸ்தர்களுக்கே இந்த கதி என்றால், புதிதாய் களம் இறங்கும் தயாரிப்பாளர் எவ்வளவு அவஸ்தை படுவார் பாருங்கள். அந்த கடவுளுக்கே வெளிச்சம்.

இவ்வாறு சுயவெளியீடு செய்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அவர்கள் எதிர்பார்தத வசூலை விட அதிகம் செய்த கதை நிறைய.. உதாரணமாய். பிரபல் விநியோகஸ்தர் சிவசக்தி பாண்டியன் அவர்கள் தயாரிப்பில் வான்மதி படத்திற்கு பிறகு காதல் கோட்டை தயாரித்து வெளியிட இருந்த நேரத்தில் அதை வாங்க வந்த விநியோகஸ்தர்கள் விலை அதிகம் என்று பின்வாங்கிவிட, வழக்கமாய் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டுமே விநியோகம் செய்து வந்த பாண்டியன், தமிழகம் முழுவதும் தானே ரீலீஸ் செய்தார். பிறகு நடந்தது வரலாறு.. சரித்திரம்.

ஒரு காலத்தில் மிகப்பெரிய வெற்றி படமான ஒரு தலை ராகம் படம் கூட விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வராததால் தயாரிப்பாளரே சுயவெளியீடு செய்தார்கள். படம் பிக்கப் ஆகிய பிறகு அதே படத்தை அவர்கள் முன்னமே கேட்ட விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி விநியோகித்தார்கள் என்று சொல்வார்கள்.

திரைப்பட வெளியீடு..
சரி.. படத்தை தயாரித்தாகிவிட்டது, அதை முன் அத்யாயங்களில் சொன்ன ஏதோ ஒரு முறையில் விற்பனையும் செய்தாகிவிட்டது. அத்துடன் ஒரு தயாரிப்பாளரரின் வேலை முடியவில்லை. படத்தை சரியான நேரத்தில் வெளியிட வேண்டும். சரியான நேரம் என்றால். உதாரணமாய் என்னதான் தான் எடுத்த படம் நல்ல படமாய் இருந்தாலும் ரஜினி படமோ, கமல் படமோ  ரிலீஸாகும் நேரத்தில் புதுமுகங்கள் நடித்த படத்தையோ, அல்லது அவ்வளவாய் பிரபலமில்லாத நடிகர்கள் நடித்த படத்தையோ ரீலீஸ் செய்வது, சொந்த செலவில்  சூன்யம் வைத்து கொள்வதை போல..

நல்ல படம் ஓடும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், மிகப்பெரிய நடிகர்கள நடிக்கும் படத்தைதான் மக்கள் முதலில் பார்க்க விரும்புவார்கள். அப்படியிருக்கும் போது, சின்ன படங்களை பார்க்க ஆளில்லாமல காத்தாட, படம் ஒரு வாரம் கூட தாக்கு பிடிக்காமல் போய் தோல்வி படமாய் ஆகிவிட வாய்ப்பு உள்ளது.

அதே போல் பண்டிகை காலங்களுக்கு முன் வெளியாகும் சிறு படங்கள், மிக சிறப்பாய் இல்லாவிட்டால் சரியான வரவேற்பை பெறாது.. ஏனென்றால்.. அந்த சமயங்களில் மக்களின் கவனமெல்லாம், பண்டிகைக்கான செலவுகள், புத்தாடை, விழாவுக்கு ஊருக்கு போவது என்று ஏகப்பட்ட விஷயங்களில் அவர்களின் கவனம் இருக்கும், செலவுகளுக்கும் பஞ்சமில்லாத நேரம். பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு என்னதான் இருந்தாலும் அதற்குரிய கவனம் பெற்று விடும்.. மற்ற படஙக்ளுக்கு நிச்சயமாய் வரவேற்பு கிடைப்பது அரிதே..

அதற்காக எந்த படமுமே பெரிய நடிகர்கள் நடித்து வெளிவந்த நேரத்திலோ, அல்லது பண்டிகை காலங்களுக்கு முன் வெளியான படம் வெற்றி பெற்றதேயில்லையா என்று கேட்டீர்களானால்.. சில படங்கள் வெற்றி பெறத்தான் செய்திருக்கிறது. ஒரு பொங்கலுக்கு முன்னால் டிசம்பர் கடைசியில் வெளியான விஜயின் காதலுக்கு மரியாதை பல தியேட்டர்களில் பொங்கல் வரை என்கிற UPTO என்கிற முறையில் ஒப்பந்தம் போடப்பட்ட படம் படம் பொங்கல தாண்டியும் வெள்ளி விழா கொண்டாடியது.

UPTO என்றால் விழாக்காலங்களுக்கு நடுவே சில சமயம் தியேட்டர்களுக்கு புதிய படங்களின் வெளியீடு இல்லாத காரணத்தால் சின்ன படங்களை போட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் தியேட்டர் அதிபர்கள் பொங்கலுக்கு பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களை முன் கூட்டியே பேசி முடித்து அட்வான்ஸ் கொடுத்திருப்பார்கள் அப்படிபட்ட நேரத்தில் படம் எப்படி ஓடினாலும் டிசம்பரிலிருந்து பொங்கல் வரை மட்டுமே எக் காரணம் கொண்டும் ஒப்பந்தம் நீட்டிக்கபட மாட்டாது என்கிற வகையில் ஒப்பந்தம் செய்து படங்களை வெளியிடுவார்கள்.  சில சமயம் இப்படி வெளியான படம் திடீரென பிச்சிக்கிட்டு ஓடும். அதே சமயத்தில் இவர்கள் ஒப்பந்தம் போட்ட புதிய பெரிய நடிகர் படத்துக்காக ஓடும் படத்தை எடுத்துவிட்டு போடும் புதிய படம் ஊத்திக் கொண்டுமிருக்கிறது.

ஒரு தீபாவளிக்கு அஜித்தின் வரலாறு வந்த சமயம் அப்போது பெரிய நடிகராய் இல்லாது இருந்த ஜீவா நடித்த ஈ ப்டம்  பெரிய படங்களோடு வந்தது.. ஆனால் வந்த படங்களில் ஈ பெரிய வெற்றி பெற்றது.. என்பதை மறுக்க முடியாது.. மீண்டும் சொல்கிறேன். இம்மாதிரியான சிறப்பான படங்கள் மட்டுமே சில விஷயங்களை உடைத்து வெற்றி பெரும்..

படத்தை வாங்கிய விநியோகஸ்தர் எவ்வாறு திரையரங்குகளில் படத்தை வெளியிட ஒப்பந்தமிடுகிறார்?.. என்ன நடைமுறை விஷயங்கள் இருக்கிறது? போன்ற பல விஷயங்கள் எக்ஸிபிஷன் எனப்படும் திரையங்கு பற்றிய பல கேள்விகள் உங்களுக்குள்  இருக்கிறது. அதை வருகிற அத்யாயங்களில் பார்ப்போம்.

……………தொடரும்

 

கேபிள் சங்கர்

எழுத்தாளர்/விமர்சகர்/திரைப்பட இயக்குநர்

 

x
^