கேபிள் சங்கர் தொடர் கட்டுரை :சினிமா வியாபாரம் 1

May 20 2018

Views: 2778

வாரா வாரம்  குறைந்த பட்சம் மூன்று தமிழ் படங்களும், ஒன்றிரண்டு தமிழ் டப்பிங் படங்களும், வேற்று மொழி படங்களூம் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. சில சமயங்களில் ஒரே மாதத்தில் 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் புற்றீசல் போல வெளியாகி மக்கள் மனதில் நிற்பதற்குள் தியேட்டர்களிலிருந்து வெளியேறி, டிவிக்கு வந்து விடுகிறது. இப்படி வெளியாகி பெட்டிக்குள் போகும் படங்கள் பெறும்பாலும் சின்ன பட்ஜெட் திரைப்படங்கள். ஒரு விதத்தில் சின்ன பட்ஜெட் படங்களால், தான் தமிழ் சினிமாவுக்கு அவ்வப்போது ஆக்ஸிசனை கொடுத்து கொண்டிருக்கிறது.  நிறைய புது தயாரிப்பளர்களின் வருகையால், சில வருடங்களுக்கு முன் கார்பரேட் நிறுவனங்களின் தடால் புடால் போக்கினால் சீரழிந்து போக இருந்த  தமிழ் சினிமாவை காப்பாற்றியதே இந்த சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள்தான் என்றால் தவறில்லை.

சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களால் பல புதிய  இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், டெக்னீஷியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. என்றாலும், பெரும்பாலான   நல்ல படஙக்ள் கூட மக்களிடையே சென்றடைய முடியாமல், வந்த சுவடு தெரியாமல் போய்விடுகிறது. அதற்கான காரணம் என்ன?

ஒரு திரைபடத்துக்கு என்ன தேவை? என்ற கேள்வியை வைத்தால் யாராக இருந்தாலும் உடனடியான ஒரு பதிலை வைத்திருப்பார்கள். அது தான் கதை. நல்ல கதை இருந்தால் போதும் நிச்சயமாய் வெற்றி என்று அடித்து கூறுபவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எவ்வளவோ நல்ல படஙக்ள் நல்ல கதை இருந்தும் ஓடாமல், பிற்காலத்தில் டிவியில் போடும் போது பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கு பிறகு ஏன் ஓடலைன்னு யோசிக்க வைக்கிற படங்கள் நிறைய.  நிச்சயமாய் நலல் கதை, திரைக்கதை இருந்தால் மட்டும்  போதாது. அதையும் மீறி திரைபடத்தை சந்தை படுத்துதல் மிக முக்கியம். இதை தமிழ் சினிமாவில் கண்டு கொண்டவர்களில் மிகச் சிலரே..  அதை இம்ப்ளிமெண்ட் செய்து வெற்றியடைந்தவர்கள்.

ஒரு படம் தயாரிக்கப்பட்ட உடன் அதற்கான விலையை யார் நிர்ணையம் செய்கிறார்கள்?. தயாரிப்பாளரா? விநியோகஸ்தர்களா..? அல்லது நடிகர்களை வைத்தா? இயக்குனரை வைத்தா? எதை வைத்து செய்கிறார்கள்?. வியாபாரம் எவ்வாறு செய்யப்படுகிறது? அப்படி வியாபாரம் செய்யப்பட்ட படத்தின் வசூல் எப்படி கணக்கிடப்படுகிறது? தியேட்டர் வருமானம் தவிர வேறு எந்த, எந்த முறையில் ஒரு படத்துக்கு வருமானம் வருகிறது? தியேட்டர்கள் எப்படி, எந்த முறையில் படங்களை வெளியிடுகிறது?. சாடிலைட் சேனல்களினால் சினிமாவுக்கான ப்ளஸ் பாயிண்ட், மைனஸ் பாயிண்ட் என்ன? படம் பெரிய ஹிட், ஆனால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் அது எப்படி? படம் படு தோல்வி ஆனால் தயாரிப்பாளருக்கு லாபம் அது எப்படி? தமிழ்நாட்டின் விநியோக ஏரியாக்கள் எத்தனை? எந்தந்த விதத்தில் விநியோகம் நடக்கிறது.? என்பது போன்ற பல விஷயங்களை பற்றி பேசலாம் வாங்க……

தமிழ் சினிமாவின் வியாபாரம்

ஒரு படத்தை தயாரித்தால் மட்டும் போதுமா..? அதை எப்படி வியாபாரம் செய்வது..? திரைப்படம் தயாரிப்பதில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறதோ.. அதே அளவு கஷ்டம் அதை வியாபாரம் செய்வதிலும் இருக்கிறது. அதே போல் தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகிறதோ.. அதே போன்ற செலவு அதை வெளியிடும் விநியோகஸ்தர்களுக்கும் ஆகும்..

சரி.. ஒரு வழியா படத்தை தயாரிச்சு முடிச்சாச்சு, அப்புறம் என்ன..? எப்படி வியாபாரத்தை ஆரம்பிக்கிறார்கள்? பெரிய தலைகள் நடித்த படமென்றால் வியாபாரத்துக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், போன்ற பெரும் நடிகர்கள் நடித்த படங்களுக்கு நான், நீ என்று போட்டி போட்டு கொண்டு வாங்கி விடுவார்கள். அதுவே சிறு முதலீட்டு படங்கள் என்றால் அந்த திரைபடத்துக்கான வியாபாரம் செய்வதற்குள் தலையால் தண்ணி குடிக்க வேண்டிக் கூட இருக்கும். ஒவ்வொரு ஏரியா விற்று முடிவதற்குள் போதும்டா சாமி என்றாகிவிடும். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் இல்லையா.. தமிழ் சினிமா வியாபாரம் ஏழு ஏரியாக்களில் அடங்கிவிடும் என்று
1.சிட்டி (அதாவது சென்னை நகரம்)

2.N.S.C எனப்படும் பழைய வட ஆற்காடு, தென ஆற்காடு, செங்கல்பட்டு     மாவட்டங்கள்.

3.கோவை

4.சேலம்

5.M.R பழைய மதுரை ராமநாதபுரம் மாவட்டம்

6.T.T  திருச்சி, தஞ்சாவூர்

7.T.K திருநெல்வேலி, கன்யாகுமரி

 

என்று இந்த ஏழு ஏரியாக்கள் பிரித்தோ, அல்லது ஒரே ஒருவரோ, ஒரே கம்பெனியோ, அவுட்ரைட்டாகவோ, வாங்கி கூட பிரித்து விற்பார்கள். அதென்ன பிரித்து விற்பது, அவுட்ரைட் என்பதை பற்றி பின்னர் பார்போம்.

 

தமிழ்படங்களில் விற்பனை இத்துடன் நின்றுவிடுவதில்லை, தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்று அண்டை மாநில ஏரியாக்களுக்கும் விற்பனை செய்யபடுகிறது.  இதை தவிர F.M.S எனப்படும் Foreign, Malaysia, Singapore எனப்படும் வெளிநாட்டு உரிமையும் விற்கப்படுகிறது. ஒரு காலத்தில் தமிழ் திரைப்படங்கள், ஸ்ரீலங்காவில் FMS ஆக இல்லாமல் தனியாகவே விற்கப்பட்டு வந்தது. தமிழ் நாட்டில் வெற்றி பெற்ற பல படஙக்ள் ஸ்ரீலங்காவிலும் மிக சிறப்பான வெற்றியை பெற்று வந்தது. இலங்கை பிரச்சனை வந்த பிறகு தான் ஸ்ரீலங்காவுக்கென்ற தனி வியாபாரம் இல்லாமலே போய்விட்டது. இது தவிர அந்த காலத்தில் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலும் மிக குறைந்த பிரிண்டுகளுடன்  வெளியிடப்பட்டு வந்தன.

ஆனால் இப்போதோ உலகம் பூராவும் உலகமயமாக்கலினால், பொருளாதார தேடல் காரணமாய் தமிழ் மக்களும், இலங்கை தமிழ்ர்களும் உலகம் முழுவதும் பரவி இருப்பதால் தமிழ் படங்களுக்கு உலகமெங்கும் மவுசும், வியாபார சாத்தியமும் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அதற்கான உதாரணம் சமீபத்தில் கமல் நடித்த தசாவதாரமும், ரஜினியின் சிவாஜியும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில்  தமிழ்நாட்டில் வெளியிட்டபட்ட அதே நாளில் வெளியிடப்பட்டு, மிகப்பெரிய வசூலை கோடிக்கணக்கில் அள்ளியதுதான்.

இப்படி படத்தை விற்பனை மூலம் மட்டுமில்லாமல் மேலும் பல வழிகளில் ஒரு திரைப்படத்துக்கு வருமானம் வருகிறது.

 

1 . டிவிடி/விசிடி உரிமை
2 . ஆடியோகேசட்/ சீடி உரிமை

3 . சாட்டிலைட் மற்றும் கேபிள் டிவி ஒளிபரப்பு உரிமை

4 . இண்டர்நெட் ஒளிபரப்பு உரிமை

5 . பிறமொழி மொழிமாற்று உரிமை அல்லது ரீமேக் உரிமை.

6 . பேருந்து/ ரயில்/ விமான ஒளிபரப்பு உரிமை

7 . மெர்சென்டைஸிங் உரிமை.

 ……………தொடரும்

 

கேபிள் சங்கர்

எழுத்தாளர்/விமர்சகர்/திரைப்பட இயக்குநர்

x
^