கோவா திரைப்பட விழா 2018 திரைப்படங்கள்

Nov 24 2018

Views: 2880

கோவா திரைப்பட விழா 2018 திரைப்படங்கள் 

மை மாஸ்டர்பீஸ் அர்ஜென்டினா படம் – சர்ச்சைக்குரிய ஒவியர் ரென்சோ நெர்வி-க்கும் அவரது சேல்ஸ் ஏஜென்ட்டுக்கும் இடையேயுள்ள நட்பும் வியாபாரமும் தான் இந்தப் படம். ஆனால் ஆர்ட்டை நையாண்டி செய்யும் விதத்தில் படம் அமைந்துள்ளது. சாலை விபத்தில் சிக்கிய ஒவியர் ஒரு கட்டத்தில் இறந்து விட்டதாக கூறி அவரது ஏஜென்ட் செய்யும் வியாபாரம் படத்தின் ராசியத்தை கூட்டுகிறது. உண்மையில் ஒவியரை ஒரிடத்தில் மறைத்து வைத்து ஒவியங்கள் வரைந்து அதற்கு பழைய தேதியை போட்டு மார்கெட் செய்து நல்ல பணம் பார்க்கிறார்கள் ஒவியரும் ஏஜென்ட்டும். இறுதியில் உண்மை தெரிந்தாலும் படத்தின் சுவாரசியம் குறையவில்லை. படத்தில் ஆர்ட் ஒரு ஏமாற்று வேலை என்று ஒவியரே கூறுவது ஒரு சிறப்பு.

ஆகா – பல்கேரிய படம் – பனிப் பிரதேசத்தில் வாழும் ஒரு வேட்டைக்காரனின் கதை. புராதனமாக அங்கு வாழும் குழுவினரின் கடைசி ஆளாக நானூக் அவன் மனைவி – பனிப் புயல் சமயங்களில் அவர்கள் வாழ்வு சவாலாக இருக்கிறது. சிறு வயதிலேயே அவர்களுடைய ஒரே மகள் ஆகா பிரிந்து செல்கிறாள் நகரத்தை நோக்கி. பனியை குடைந்து உள்ளே உள்ள நீரில் கிடைக்கும் மீன்கள் தான் பிரதான உணவு. எப்போதாவது கிடைக்கும் மான்கள். நானூக்கின் மனைவி ஃபர் தொப்பி ஒன்றை செய்கிறாள் – பிரிந்து போன மகளை தேடி அவளுக்கு கொடுப்பதற்காக . அவர்கள் கனவுகள் அனைத்தும் சுவாரசியம். பனிப்புயலை சமாளிக்கும் விதம் பதட்டமான காட்சிகள் .. திடீரென ஏற்பட்ட வயிற்று வலியால் மனைவி இறந்து விடுகிறார். அவள் மகளுக்காக செய்த தொப்பியை மனைவியின் ஆசைப்படி மகளிடம் சேர்ப்பதற்காக மகளை தேடி பயணிக்கிறார் நானூக்… – படம் முழுவதும் ரஷிய பனிப் பகுதியில் எடுக்கப்பட்டது.

நிக்கோ 1988- Susanna Nicchiarelli என்ற பெண் இயக்குநரின் படம். ஜெர்மன் படம். ஒரு பாடகியின் வரலாறு – 60-களில் அவள் தனது கேரியரை ஆரம்பிக்கிறாள். 20 ஆண்டுகளுக்கு பின் அவளை மீண்டும் ஒரு இசைப் பயணத்துக்கு அழைத்து வருகிறார் ரிச்சர்டு – அவரின் புதிய மேனேஜர். அந்த பயண்த்தில் அவளுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வரவேற்பு, சிறு வயதில் பிரிந்த மகனை சந்திக்கும் வாய்ப்பு – ஐரோப்பிய நாடுகளின் எல்லையை கடக்கும் போது ஏற்படும் பதட்டம் எல்லாமே படத்தின் சுவாரசியத்தை கூட்டுகின்றன. பார்வையாளர்களை கரைக் களத்துக்கே கொண்டு செல்கிறார் இயக்குநர். நிகோவின் நடிப்பு அபாரம்.

சேவன் எமோசன்ஸ்  (போலந்து)
பொதுவாக குழந்தைகளை நாம் எப்படி புரிந்து கொள்வது , அவர்களது எமோஷன்களை எப்படி சமாளிப்பது என்பது பற்றி கொஞ்சம் வித்தியாசமாக கூறியிருக்கிறார் இயக்குநர்.
இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் குழந்தைகளாகவும், பெற்றோர்களாவும் பெரியவர்களே நடிக்கின்றனர். ஆனால் எந்த வித்தியாசமுமின்றி கதை வெகு தெளிவாக செல்கிறது. படம் ஆரம்பத்தில் பார்வையாளர்களை கொஞ்சம் குழப்பினாலும் சிறிது நேரத்திலேயே படம் சீரியஸாக செல்ல ஆரம்பிக்கிறது. நாம் படத்தோடு ஒன்றிவிடுகிறோம். குழந்தைகளின் பதிலுக்கு மதிப்புக் கொடுக்காதவர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமையே இல்லை என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கிறது. குழந்தைகளின் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார்கள். பெரியவர்களே குழந்தையாக நடிப்பதால் படத்தின் சீரியஸ் தன்மை வெகுவாக உள்ளது. பிரச்சினைகளும் நமக்கு எளிதாக புரிகின்றது. மிகவும் வித்தியாசமாக எடுக்கப்பட்ட இந்த படத்தை ரசிக்கலாம்.

தி அசபர்ன்ஸ் பேப்பர்ஸ் – துவக்க விழா படம் இயக்குநர் julian landais இயக்கிய முதல் திரைப்படம் உலகத்தின் முதல் திரையிடல் தான் என்பது சிறப்பு – படம் 19ம் நூற்றாண்டு துவக்கம் வெனிஸ் நகரில் துவங்குகிறது. நாவலை தழுவி எடுக்கப்பட்டதால் பிரீயட் படம் போல் உள்ளது. கவிஞர் ஜெஃப்ரி ஆஸ்பர் எழுதிய பர்சனல் கடிதங்களை தேடி ஒருவன் பல முயற்சிகள் செய்கிறான். இறுதி வரை அவனுக்கு அது கிடைக்காமல் எரிந்து போகின்றன.

தி வைல்ட் ப்யர் ட்ரி – துருக்கி நாட்டுப் படம் – இந்த படம் 188 நிமிடங்கள் நேரம் ஒடுகிறது. இந்தப் படம் முழுவதும் பார்த்த பிறகு மனதில் ஒரு பாரம் ஏற்படுகிறது. சாதாரண படம் போல இருந்தாலும் நாம் வாழ்க்கையை புரிந்து கொள்ள எல்லா விஷயங்களும் உள்ளன. பட்டப் படிப்பு முடித்து தன் சொந்த கிராமத்துக்கு வருகிறான். அவனுக்கு இலக்கியத்தில் ஆர்வம். தான் ஒரு எழுத்தாளாராகவே ஆசைப்படுகிறான். தான் எழுதிய நாவலை பிரசுரிக்க பிரயத்தனம் செய்கிறான். தாயின் மீது அன்பு செலுத்துகிறான். அவன் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் . தந்தையை புரிந்து கொள்ள தவறுகிறான். நண்பர்கள் உள்ளிட்ட எல்லோரிடமும் எப்போதும் விவாதம் செய்கிறான். தந்தை வளர்க்கும் நாயிடம் கூட வெறுப்பு காட்டுகிறான். ஒரு வழியாக தான் எழுதிய நாவலை பப்ளிஷ் செய்கிறான். முதல் பிரதியுடன் தந்தையை பார்க்க பள்ளிக்கு செல்கிறான். புத்தக்ததை கொடுக்க மனமில்லாமல் வீட்டுக்கு செல்கிறான். முதல் பிரதியை தாயிடம் தருகிறான். புத்தகம் வெளியாகி பல மாதங்கள் ஆகியும் ஒரு பிரதி கூட விற்கவில்லை. தாய் உட்பட யாருமே புத்தகத்தை படிக்கவில்லை. ஆனால் தந்தை படித்து விட்டு ஆராதிக்கிறார். இறுதியில் சமுகத்தை புரிந்து கொள்கிறான் மகன். அவன் நாவலின் பெயர் The wild pear tree இந்த தலைப்பும் அவன் தந்தை சிறு வயதில் அவனுக்கு போதித்தது தான். இந்தப் படத்தை தந்தைகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஏனென்றால் – தந்தையின் அன்பு வெளியே தெரிவதில்லை..

கோவாவிலிருந்து…

– ராஜேந்திரன் மோகனன் (பத்திரிக்கையாளர் ஆனந்த விகடன்)

x
^