திரு.ராபர்ட் ஆசிர்வாதம் :புகழஞ்சலி

Nov 30 2018

Views: 2971

திரு. ராபர்ட் ஆசிர்வாதம்: நவீன ஒளிப்பதிவின் முன்னோடி!!!

அடையாறு திரைப்படக்கல்லூரியில் பயின்று பின்னர் அதே கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர் திரு. ராபர்ட் (ராஜசேகர்). இவர்கள் இரட்டையர்களாகத் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநராக பணியாற்றினர்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான மாற்று சினிமா, இயக்குநர் ஜெயபாரதி இயக்கிய குடிசை திரைப்படம். அதில் மிகக் குறைந்த ஒளிக்கருவிகள் மற்றும் காமிரா நகர்வுகளை சைக்கிள் போன்றவற்றின் மூலம் உருவாக்கினார் ராபர்ட்.

எண்பதுகளில் நவீன கால தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவின் தொடக்கம்  ராபர்ட் அவர்கள் உருவாக்கிய  நுட்பங்கள், ஒரு தலை ராகம், பாலைவனச்சோலை ஆகிய திரைப்படங்களில் ஆம்பியண்ட் லைட்டிங் (ambient lighting) முறையை மிகச் சிறப்பாகக் கையாண்டார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.

‘கல்யாணக்காலம்’ என்ற படத்தை உருவாக்கும் போதே அதன் படங்களுடன் திரைக்கதையை வாரந்தோறும் குமுதம் வார இதழில் வெளியிட்டார்கள். ‘காலையில் தொடங்கி மாலையில் முடியும் கதை’ என்ற அறிமுகத்தோடு வந்த திரைப்படம் அது.

ஒளிப்பதிவு, இயக்கம் இரண்டையும் மேற்கொண்டு சாதித்துக் காட்டினர் ராபர்ட்-ராஜசேகர் இரட்டையர். அவர்களது ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’, ’மனசுக்குள் மத்தாப்பூ’ ஆகிய திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

ராபர்ட் அவர்கள் தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகளும் ஆலோசனைகளும் பல ஆண்டுகளாக வழங்கியதை SICA பெருமையுடன் நினைவு கூறுகிறது. SICAவின் துணைத்தலைவராகவும் கடந்த காலத்தில் பணியாற்றியுள்ளார்.

தேர்ந்தெடுத்த திரைப்படங்களின் பட்டியல்

  • ஒரு தலை ராகம்
  • குடிசை
  • கல்யாண காலம்
  • தூரம் அதிகமில்லை
  • சின்னப்பூவே மெல்லப்பேசு
  • மனசுக்குள் மத்தாப்பு
  • மாயாபஜார் 1995

ராபர்ட் அவர்கள் இன்று(30/11/2018) காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

இயக்குநர்/ ஒளிப்பதிவாளர்  ராபர்ட் அவர்களுக்கு வயது 68.

SICAவின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள் அளப்பரியன. அவை என்றும் எங்களால் நினைவில் கொள்ளப்படும்.

– சி.ஜெ.ராஜ்குமார்

x
^