செலுலாயிட் கேமரா

Jan 26 2017

Views: 525

ஒரு சினிமா உருவாக்கத்தில், படைப்பாக்கத் திறன் என்பதைத் தாண்டி தொழில்நுட்பம் என்ற பேச்சை எடுத்தாலே போதும், சின்னக் குழந்தைகளுக்கும் கூட முதலில் நினைவுக்கு வரும் ஒரு கருவிதான் கேமரா (Camera). இந்த டிஜிடல் யுகத்தில் கேமராவைப் பற்றி தெரியாதவர்கள் நம்மில் யாருமே இருக்கமுடியாது.

நம் ஒவ்வொருவர் கையிலும், அலைபேசி என்ற பெயரில் இருக்கும் ஒரு டிஜிடல் கேமரா நம் அனைவரையுமே ஒரு புகைப்படக்காரனாகத்தான் ஆக்கிவைத்திருக்கிறது. சினிமாத்துறையில் பயன்படுத்தப்படுவதும் அதைப் போன்றதொரு கேமராதான். ஆனால் அவை, பெரிய திரைக்குத் தேவையான அதிகத் தரமுள்ள, துல்லியமான படங்களை எடுக்கும் வல்லமை வாய்ந்தவை.

இன்றைய தேதியில் டிஜிட்டல் கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. ஆயினும், அதன் அடிப்படையான செயல்பாடுகள், ஒரு செலுலாயிட் கேமராவை ஒத்துதான் இருக்கிறது. இன்றைய டிஜிட்டல் கேமராவை புரிந்துக்கொள்ளுவதற்கு, செலுலாயிட் கேமராவைப்பற்றி தெரிந்துக்கொள்ளுவது மிகுந்த பயன் தரும். மேலும் கடந்து வந்த பாதையை தெரிந்து வைத்திருப்பது, வருங்காலத்தை புரிந்துக்கொள்ள உதவும். அவ்வகையில், இக்கட்டுரையில் செலுலாயிட் கேமராவைப்பற்றி பார்ப்போம்.

சினிமாவுக்கான கதை, திரைக்கதை எனத் தொடங்கி படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இசைக்கோர்ப்பு, திரையிடல் எனப் பல நிலைகளில் தேவை சார்ந்து பல்வேறு கருவிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. எழுதப்பட்ட  திரைக்கதை,  சினிமாவாக உருமாற வேண்டுமானால், முதலில் நடிகர்களின் மூலமாக கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டி, அக்கதை நிகழ்த்தப்பட்டு அக்காட்சி, செல்லுலாயிட் படச்சுருளில் அல்லது டிஜிட்டல் ஊடகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்படிப் பதிவு செய்யப்படும் நிகழ்வே படப்பிடிப்பு எனப்படுகிறது. அதைப் பதிவு செய்யும் கருவியே கேமராவாகும்.

கேமரா என்னும் கருவியோடு இணைந்து பல தொழில்நுட்பங்களும், மேலும் பல கருவிகளும் கச்சிதமாக ஒரு காட்சியைப் படச்சுருளில் அல்லது டிஜிடல் ஊடகத்தில் பதிவு செய்ய நமக்கு உதவுகின்றன.

முதலில், பாரம்பரியமான ஃபிலிம் கேமராக்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைச் சற்றே தெரிந்துகொள்வோம்!

ஒரு புகைப்படக் கேமராவையும், அது செயல்படும் முறையையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். புகைப்படக்கேமராவின் மேம்பட்ட வடிவமே திரைப்படக் கேமரா.

புகைப்படக் கேமரா ஒரு படச்சுருளில் நிலையான ஒரு பிம்பத்தைப் பதிவு செய்கிறது.

திரைப்படக் கேமரா என்பது ஒரு படச்சுருளில் நிலையான பல பிம்பங்களை, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாகப் பதிவு செய்கிறது.

இதுவே இந்த இரண்டு கேமராக்களுக்குமிடையே இருக்கும் பிரதான வேறுபாடாகும். சினிமாக் கேமரா, விநாடிக்கு இத்தனை ஃபிரேம்கள் (Frames Per Second) என்ற கணக்கில் பிம்பங்களைப் பதிவு செய்யும். திரைப்படம் என்பது சராசரியாக விநாடிக்கு 24 ஃபிரேம்கள் என்ற கணக்கில் படம் பிடிக்கப்படுகின்றது என்பதை நாம் அறிவோம். ‘ஸ்லோ மோஷன்’ (Slow Motion – 48FPS முதலாக 72FPS), ‘ஃபாஸ்ட் மோஷன்’ (Fast Motion – 16FPS முதலாக 21FPS) என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பது இப்போது நினைவுக்கு வரலாம். அவ்வகை ஒளிப்பதிவில், விநாடிக்குப் பதிவு செய்யும் ஃப்ரேம்களின் எண்ணிக்கை வேறுபடுகின்றன. அப்படியான சிறப்பு வகை ஒளிப்பதிவையும் இக்கேமராக்கள் சாத்தியமாக்குகின்றன.

திரைப்படக் கேமராவின் முக்கியமான,பொதுவான பாகங்கள்

மேகசின்ஸ் – ஒளிபுகா படச்சுருள் பெட்டி:

பிம்பங்கள் பதிவு செய்யப்படாத படச்சுருளை கேமராவுக்கு வழங்கி பின்பு பிம்பங்கள் பதிவுசெய்யப்பட்ட அதே படச்சுருளை தன்னுள் வாங்கிப் பாதுகாக்கும் ஒரு ஒளிபுகாப் பெட்டியே மேகசின் எனப்படுகிறது.

மேலும், பிம்பம் பதிவு செய்யப்படுவதற்கு முன்போ அல்லது பின்போ அப்படச்சுருள் மீது தேவையற்ற வெளி வெளிச்சம் படக்கூடாது. அப்படி பட்டால் அப்படச்சுருள் வீணாகிப்போகும். ஆகையால் இப்பெட்டியானது ஒளி ஊடுருவாத தன்மையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த மேகசின் எனப்படும் பெட்டிகளில் பல வகைகள் உண்டு.

இரண்டு அறை மேகசின்:

இதில் இரண்டு தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட அறைகள் இருக்கும். ஒன்றில் பதிவு செய்யப்படாத படச்சுருளும் மற்றொன்றில் பதிவு செய்யப்பட்ட படச்சுருளும் இருக்கும். பதிவு செய்யப்படாத படச்சுருளை வெளிவிடும் உருளை ‘Take off Spool’ என்றும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை சேகரிக்கும் உருளை ‘Take Up Spool’ என்றும் அழைக்கப்படுகிறது. இப்பெட்டியின் ஒரு பக்க வெளிப்புறத்தில் பதிவு செய்யப்படாத படச்சுருளின் அளவையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளின் அளவையும் தெரிந்துகொள்ள, அடியிலும் (ft) மீட்டரிலும் (mt) அளவீடுகள் உண்டு.

(உ.ம்) Mitchell Cameras

ஒரு அறை மேகசின்:

பதிவுசெய்யப்படாத படச்சுருளை வழங்கும் உருளையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளைப் பெற்றுக்கொள்ளும் உருளையும் ஒரே அறையில் வெவ்வேறு அச்சில் இருக்கும்.

(உ.ம்) ARRI III, ARRI 435

கோ ஆக்சில் மேகசின்:
பதிவுசெய்யப்படாத படச்சுருளைக் கொண்ட உருளையும், பதிவுசெய்யப்பட்ட படச்சுருளை வாங்கிக்கொள்ளும் உருளையும் ஒரே அச்சில் அருகருகே அமைக்கப்பட்டிருக்கும்.

(உ.ம்) ARRI BL4,535

படச்சுருளை இயக்கும் அமைப்பு (Pull Down Movement):

மேகசினில் இருந்து பதிவு செய்யப்படாத படச்சுருளை இழுத்து, பிம்பம் பதிவாகும் இடத்தில் சரியாக நிலை நிறுத்தும் செயலை ‘புல் டவுன் மூவ்மெண்ட்’ (pull down movement) எனப்படுகிறது. படச்சுருளை கீழே இழுக்க ‘கிளா’ (claw) எனப்படும் கொக்கி போன்ற அமைப்பு இருக்கிறது. ‘ரிஜிஸ்ட்ரேஷன் பின்’ (Registration Pin) என்று அழைக்கப்படும் ஊசியானது படச்சுருளின் இருபுறமும் உள்ள துளைகளைப் (Perferations) பயன்படுத்தி பிம்பம் பதிவாகும் இடத்தில் படச்சுருளை நிலையாக நிறுத்துகிறது.

படச்சுருளில் பிம்பம் பதிவாகும் அளவை (Format) நிர்ணயிக்க ‘ஃபிலிம் கேட்’ (Film Gate) எனப்படும் அமைப்பும், படச்சுருளைப் பிம்பம் பதிவாகும் சரியான தளத்தில் (Plane) நிறுத்த, படச்சுருளின் பின்புறத்திலிருந்து அழுத்தி நிறுத்த ‘ஃப்ரஷர் பிளேட்’ (Pressure Plate) என்ற அமைப்பும் பயன்படுகிறது. இப்படி நிலையாக நிறுத்தப்பட்ட படச்சுருளில்தான் பிம்பமானது பதிவாகிறது. நிலையாக நிறுத்தப்படாமல் போனால், அதிர்வில் (Shake) பிம்பமானது தெளிவில்லாமல் போய்விடும்.

பிம்பம் பதிவுசெய்யப்பட்டவுடன் ‘புல் டவுன் மூவ்மெண்ட்’ (pull down movement) இயக்கத்தால் பதிவுசெய்யப்பட்ட படச்சுருள் கீழே நகர்வதால், பதிவுசெய்யப்படாத அடுத்த ஃபிரேமுக்கான படச்சுருள் பிம்பம் பதிவாகும் அந்த இடத்தில் ‘ரிஜிஸ்ட்ரேஷன்’ பின்களால் மீண்டும் நிலை நிறுத்தப்படுகிறது. இந்தச் செயல் தொடர்ந்து நடைபெறுகிறது. மேற்சொன்ன அமைப்பு ‘இண்டர்மிட்டண்ட் மெக்கானிசம் (Intermittent mechanism) எனப்படுகிறது. இதுவே கேமராவின் ஆதார செயல்பாடாகும்.

ஃபிலிம் கேட்‘ (Film Gate):

படச்சுருளில் பிம்பம் பதிவாகும் பரப்பளவை நிர்ணயிப்பது ‘ஃபிலிம் கேட்’ ஆகும். இப்பரப்பளவு என்பது உயரத்தையும் அகலத்தையும் குறிப்பது. இதுவே ‘ஆஸ்பெக்ட் ரேஷியோ’ (Aspect Ratio) என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக 1:1.66 எனப்படும் ஆஸ்பெக்ட் ரேஷியோ என்றால் ஃபிலிமில் பதியப்படும் பிம்பத்தின் உயரம் 1 பங்காகவும், அகலம் 1.66 பங்காகவும் இருக்கும் என்று பொருள். படமாக்கலில் பல விதமான ‘ஆஸ்பெக்ட் ரேஷியோ’க்கள் உள்ளன.

(உ.ம்) 1:1.33, 1:1.66, 1:1.85, 1:2.35

கேமராவை இயக்கும் சக்தி (Drive System):

கேமராவை இயக்க அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் மின்மோட்டார் பயன்படுகிறது. இந்த மோட்டாருக்குத் தேவையான மின்சாரம் பேட்டரி மூலம் வழங்கப்படுகிறது. நொடிக்கு 24 பிம்பங்களைப் பதிவு செய்யும் ஒரே வேகத்தைத் தரும் மோட்டார்கள், மாறுபட்ட வேகங்களைத் தரும் மோட்டார்கள், சூரியன் தோன்றுவது, பூ பூப்பது போன்ற காட்சிகளைப் பதிவு செய்ய உதவும், அதிவேக மற்றும் மிக மெதுவான வேகம் கொண்ட மோட்டார்கள் என பலவகையான மோட்டார்கள் இருக்கின்றன.

கேமரா ஷட்டர் (Camera Shutter):

ஷட்டர் என்பது லென்சிலிருந்து வரும் ஒளியைப் படச்சுருளின் மீது விழ அனுமதிப்பதும், தடுப்பதுமான,  அச்சில் சுழலக்கூடிய அமைப்பாகும்.

லென்சுக்கு பின்புறம் பிலிம் தளத்துக்கு (Film Plane) முன்பாக அமைக்கப்பட்டிருக்கும் வட்டவடிவத்தட்டு போன்ற இவ்வமைப்பு, லென்சின் வழியாக ஊடுருவி வரும் வெளிச்சத்தை, படச்சுருளில் விழாமல் தடுக்கவும் அனுமதிக்கவும் ஏற்றவாறு அமைந்துள்ளது. இது தொடர்ந்து சுழலக்கூடியது. இப்படிச் சுழல்வதன் மூலமாக ஒரு சமயத்தில் வெளிச்சம் படச்சுருளின் மீது விழச்செய்து பிம்பம் பதியப்பட்ட ஒரு ஃபிரேமை (Frame) உருவாக்குகிறது. அடுத்த சமயம் வெளிச்சத்தை தடுப்பதின் மூலம், தொடரும் படச்சுருளில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது. அதாவது இந்த ஷட்டர் ஒளியை தடுக்கும்போதுதான், பிம்பம் பதிவுசெய்யப்பட்ட படச்சுருளானது முன்பு கண்ட ‘புல் டவுன்’ செயல்பாடு மூலமாக நகர்த்தப்பட்டு, அடுத்த பிம்பம் பதிவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்படி நகர்த்தும் போது, இரண்டு பிரேம்களுக்கும் இடையில் குறிப்பிட்ட அளவு இடைவெளி உருவாக்கப்பட்டு தனித்தனி பிரேம்களாக பிம்பம் பதிவுசெய்யப்படுகிறது.  ஷட்டர்களில் இரண்டு வகை உள்ளன.

டிஸ்க் ஷட்டர் (Disc Shutter) – அரைவட்ட அமைப்புக் கொண்டது.  இதில் 180 டிகிரி அரைவட்டம் மறைக்கப்பட்டும், மற்றொரு 180 டிகிரி வெறுமையாகவும் இருப்பதனால் அது சுழலும் போது ஒரு பாதியால் ஒளி மறைக்கப்படுவதும் மறுபாதியால் அனுமதிக்கப்படுவதுமான செயல் நடைபெறுகிறது. (உ.ம்) Mitchell Cameras

பட்டர்பிளை ஷட்டர் (Butterfly Shutter) – பட்டாம்பூச்சியின் இறக்கை போன்ற அமைப்புக்கொண்டது. பட்டர்பிளை ஷட்டரில் இரண்டு 90 டிகிரி கால்வட்டம் மறைக்கப்பட்டும், இரண்டு 90 டிகிரி கால்வட்டம் வெறுமையாகவும் அடுத்தடுத்திருப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஒரு கால் பகுதியில் ஒளி மறைக்கப்பட்டு, பின்பு அடுத்த கால் பகுதியில் அனுமதிக்கப்படுவதாக மீண்டும், மீண்டும் இது நடக்கிறது.

இப்பட்டர்பிளை ஷட்டரின் முன்பகுதியானது கண்ணாடி போன்ற பிரதிபலிக்கும் பொருளால் செய்யப்பட்டதனால் ஒளி மறைக்கப்படும் போது பிரதிப்பலிக்கப்பட்டு அவை ‘வியூ ஃபைண்டர்’ வழியாக பிம்பத்தைப் பார்க்கப் பயன்படுகிறது. இவ்வகை ஷட்டர்கள் 45 டிகிரி கோணத்தில் ஃபிலிம் கேட்டின் (Film Gate) முன்பாக சுழலும் அச்சில் பொருத்தப்பட்டுள்ளது.

வியூ ஃபைண்டர் (View Finder):

பதிவு செய்யவிருக்கும் பிம்பங்களைக் கேமராவில் பார்ப்பதற்குப் பயன்படும் அமைப்பு ‘வியூ ஃபைண்டர்’ என்று அழைக்கப்படுகிறது. இது இரண்டு வகைப்படுகிறது.

1.ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் (Reflex Viewfinder):

பட்டர்பிளை ஷட்டரில் (Butterfly Shutter) பதிக்கப்பட்டுள்ள கண்ணாடியால் லென்ஸின் வழியாக ஊடுருவி வரும் பிம்பத்தைப் பிரதிபலிப்பதினால் (மாற்றுக் கோணத்தில்) நாம் வியூ ஃபைண்டரில் அப்பிம்பத்தைப் பார்க்கமுடிகிறது. எனவே பிம்பம் பதிவாகும் அதே நேரத்தில் நம்மால் அப்பிம்பத்தைப் பார்க்க முடிகிறது.

2. நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர் ( Non Reflex Viewfinder):

டிஸ்க் ஷட்டரில் (Disc Shutter) பிம்பத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இல்லாததனால், பிம்பம் பதிவாகும் போது நம்மால் அப்பிம்பத்தைப் பார்க்க முடியாது. பிரதிபலிக்கும் கண்ணாடி டிஸ்க் ஷட்டரில் இல்லாததனால் இது ‘நான் ரிஃப்ளக்ஸ் வியூ ஃபைண்டர்’ என அழைக்கப்படுகிறது.

டிரைப்பாட் (Tripod):

கேமராவை நமக்குத் தேவையானபடி நிலைநிறுத்தப் பயன்படும் முக்காலி அமைப்பே ட்ரைபாட் எனப்படுகிறது. முன்னதாக, ட்ரைபாட் எனப்படும் இக்கருவி, கேமராவைத் தாங்கிப்பிடிக்கக்கூடிய, தேவையானபடி கேமராவை இடம்மாற்றம் செய்யக்கூடிய, கேமராவின் பார்வைக்கோணத்தை தேவையானபடி மாற்றக்கூடிய உபகருவிகளான Rigs-ளில் ஒன்றுதான் என புரிந்துகொள்ளலாம். ஆயினும், அவற்றுள் கேமராவின் ஒரு பகுதி என்று சொல்லத்தக்க அளவில், ட்ரைபாட் கேமராவைக் கையாள்வதில் ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருக்கிறது. உயரத்தை மாற்றியமைக்கக்கூடிய வசதியையும், இடவலமாகவும், மேல்கீழாகவும் கேமராவை ஒரே அச்சில் அதிர்வின்றித் திருப்பும் வசதியையும் இது நமக்குத் தருகிறது.

x
^