Jun 29 2026

Views: 87

கே. பாக்யராஜ் (1953–2026) எளிய மக்களின் கதைசொல்லி

கே. பாக்யராஜ் (1953–2026) எளிய மக்களின் கதைசொல்லி

திரைத்துறையில் எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல பரிமாணங்களில் சாதித்திருந்தாலும், கே. பாக்யராஜின் மிகப்பெரிய அடையாளம் “திரைக்கதை மன்னன்” என்பதுதான்

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக 25 திரைப்படங்களை இயக்கி, 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். இந்திய சினிமாவின் திரைக்கதை மொழியையே மறுவரையறை செய்த அவரது திரைப்படங்கள் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட, ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து முக்கிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு அதே வெற்றியைப் பெற்றன. சிறந்த திரைக்கதைக்கு மொழி ஒரு தடையல்ல என்பதை தனது எழுத்தின் மூலம் நிரூபித்த படைப்பாளி அவர்.

*காரண–விளைவு திரைக்கதை அமைப்பின் வல்லுநர்*

பாக்யராஜின் மிகப்பெரிய பலம் அவரது Cause and Effect திரைக்கதை அமைப்பு. ஒரு காட்சி, ஒரு வசனம், ஒரு சிறிய நகைச்சுவை, ஒரு துணைக் கதாபாத்திரம், இவை எதுவுமே அவரது படங்களில் வீணாக வருவதில்லை.

ஒவ்வொரு காட்சியும் பின்னர் வரவிருக்கும் ஒரு உணர்ச்சி, திருப்பம் அல்லது கிளைமாக்ஸிற்கான விதையாகச் செயல்படும். இன்று திரைப்படக் கல்வி நிறுவனங்களில் கற்பிக்கப்படும் Planting and Payoff, Cause and Effect, Character Motivation போன்ற பல திரைக்கதை நுணுக்கங்களை (Screenplay Principle) பல தசாப்தங்களுக்கு முன்பே தமிழ் மண்ணின் வாழ்க்கையோடு இயல்பாக இணைத்துப் பயன்படுத்தியவர் பாக்யராஜ்.

நகைச்சுவையை கதையின் அச்சாணியாக மாற்றியவர்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்பது கதையிலிருந்து தனியே இயங்கும் ‘காமெடி டிராக்’ ஆக முன்பு இருந்த மரபை உடைத்தவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களில் நகைச்சுவை கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முக்கியமான Plot Device ஆகவும் இருக்கும்.

இன்று போய் நாளை வா (1981) திரைப்படம் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். ஒரே பெண்ணைக் காதலிக்கும் மூன்று நண்பர்களின் எளிய கதையை, துல்லியமான திரைக்கதை முடிச்சுகளாலும் இயல்பான நகைச்சுவையாலும் காலத்தை வென்ற படைப்பாக மாற்றினார்.

அவரது திரைக்கதைகளில் ஆரம்பத்தில் சாதாரணமாக அறிமுகமாகும் ஒரு கதாபாத்திரம், பின்னர் கதையின் முக்கியத் திருப்புமுனையாக மாறுவார். இவ்வகையான Character Planting அவரது எழுத்தின் அடையாளமாக மாறியது. அவரது படங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு நோக்கத்தோடு உருவாக்கப்பட்டிருக்கும்; அவர்களின் இருப்பு கதையின் ஓட்டத்தையும் உணர்ச்சியையும் மாற்றும்.

தமிழ் சினிமாவின் மல்டி-ஜானர் மாஸ்டர்

பாக்யராஜ் என்றாலே குடும்பப் படங்களும் நகைச்சுவையும் நினைவுக்கு வரும். ஆனால் உண்மையில் அவர் தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த Multi-Genre Screenwriter.

அந்த 7 நாட்கள் (1981)

காதல், குடும்பம், கலாச்சாரம், தியாகம் ஆகியவற்றை மிக எளிமையாகவும் ஆழமாகவும் இணைத்த திரைக்கதை. “காதல் வெல்வதா? கடமை வெல்வதா?” என்ற நிரந்தரமான கேள்வியை எந்தவித செயற்கை நாடகத்தனமும் இன்றி மனித உணர்வுகளின் வழியே சொல்லிய படம். இந்தப் படத்தில் வரும் பாலக்காட்டு மாதவன் என்ற கதாபாத்திரம் ஆரம்பத்தில் எளிமையாக அறிமுகமாகி, கதையின் உணர்ச்சிப் பயணத்தையும் இறுதி முடிவையும் தீர்மானிக்கும் முக்கியமான கதாபாத்திரமாக மாறுகிறார். Character Planting மற்றும் Emotional Payoff ஆகிய இரண்டிற்கும் இந்தக் கதாபாத்திரம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

விடியும் வரை காத்திரு (1981)

மிகக் குறைந்த கதாபாத்திரங்கள், கட்டுப்படுத்தப்பட்ட இடம், தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும் சஸ்பென்ஸ் ஆகியவற்றின் மூலம் விறுவிறுப்பான மிஸ்ட்ரி த்ரில்லரை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்பதை இந்தப் படம் நிரூபித்தது. குடும்பக் கதைகளிலும் நகைச்சுவையிலும் கோலோச்சியதோடு, த்ரில்லர் வகையிலும் தனது திரைக்கதை ஆளுமையை பாக்யராஜ் நிரூபித்தார்.

சுவரில்லாத சித்திரங்கள் (1979)

அவரது அறிமுக இயக்கமான இந்தப் படம், மனித உறவுச்சிக்கல்களையும் வறுமையையும் மிகைப்படுத்தப்பட்ட மெலோடிராமா இன்றி இயல்பாக பதிவு செய்தது. வாழ்க்கையின் கசப்பை நேர்மையாகச் சொல்லும் அவரது எழுத்தின் வலிமையை வெளிப்படுத்திய திரைப்படம் இது.

சிகப்பு ரோஜாக்கள் (1978)

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில், பாக்யராஜ் கதை–வசனம் எழுதிய இந்தத் திரைப்படம் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த சைகலாஜிகல் த்ரில்லர்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தொடர் கொலையாளியின் மனநிலையை மெதுவாக வெளிப்படுத்தும் திரைக்கதை, இறுதி வரை பதற்றத்தைத் தக்கவைக்கும் கட்டமைப்பு, ஆகியவை அவரது எழுத்தின் பரந்த எல்லையை நிரூபித்தன.

ஒரு கைதியின் டைரி முதல் ஆக்ரி ராஸ்தா வரை

நடிகராகவும் இயக்குநராகவும் வெற்றியின் உச்சியில் இருந்தபோதும், பிற இயக்குநர்களுக்காகக் எழுதுவதை அவர் ஒருபோதும் நிறுத்தவில்லை. பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி (1985) திரைப்படத்திற்கு அவர் எழுதிய ரிவெஞ்ச் டிராமா தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்தது. பின்னர் அதே கதையை ஹிந்தியில் அமிதாப் பச்சனை வைத்து ஆக்ரி ராஸ்தா (1986) என்ற பெயரில் பாக்யராஜே இயக்கினார்.

இது ஒரு சாதாரணமான ரீமேக் அல்ல. ஹிந்தி திரைப் பார்வையாளர்களின் ரசனைக்கும், அமிதாப் பச்சனின் மாஸ் அந்தஸ்திற்கும் ஏற்ப திரைமொழியிலும் கிளைமாக்ஸ் உள்ளிட்ட பல முக்கியத் திரைக்கதைப் பகுதிகளை மறுவடிவமைப்பு செய்தார். ஒரே கதையை வெவ்வேறு கலாச்சாரங்களுக்கும், வெவ்வேறு சூப்பர் ஸ்டார்களின் திரைபிம்பத்திற்கும் ஏற்ப மாற்றியமைக்கும் அவரது திறமை, உலகத் தரத்திலான அவரது திரைக்கதை ஆளுமையை வெளிப்படுத்தியது.

காட்சி மொழிக்கும் தொழில்நுட்பத்திற்கும் அளித்த முக்கியத்துவம்

திரைக்கதைக்கு அளித்த அதே மரியாதையை காட்சி மொழிக்கும் தொழில்நுட்பத்திற்கும் பாக்யராஜ் அளித்தார். ஒளிப்பதிவாளர் அசோக் குமார் மீது கொண்டிருந்த மரியாதையின் காரணமாகவே டார்லிங் டார்லிங் டார்லிங் (1982) திரைப்படத்தை உருவாக்கினார். ஊட்டியின் இயற்கை அழகையும் பனிமூட்டத்தையும் ஒளிப்பதிவின் மூலம் முழுமையாகப் பதிவு செய்யும் வகையில் காட்சிகளையும் திரைக்கதையையும் வடிவமைத்தார். கேமராவை படத்தைப் பதிவு செய்யும் வெறும் கருவியாக அல்லாமல் கதை சொல்லும் மொழியாகக் கருதிய இயக்குநர் அவர்.

பாரிஜாதம் (2006)

ஃபிலிம் நெகட்டிவ் காலகட்டத்திலேயே இத்திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சிக்காக 500 FPS-க்கும் அதிக வேகத்தில் ஹை ஸ்பீட் சினிமெடோகிராஃபியைப் பயன்படுத்தி, மழைத்துளிகளின் அசைவுகளை அல்ட்ரா ஸ்லோ மோஷனில் பதிவு செய்தார். புதிய தொழில்நுட்பங்களை ஆர்வத்துடன் ஏற்றுக்கொள்ளும் அவரது படைப்புத் தன்மையை இது வெளிப்படுத்தியது.

இந்திய சினிமாவின் திரைக்கதை பாடப்புத்தகம்

இயக்குநர் பாரதிராஜாவிடம் 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் வசனகர்த்தாவாகவும் தனது பயணத்தைத் தொடங்கிய பாக்யராஜ், பின்னாளில் இந்திய சினிமாவே அண்ணாந்து பார்க்கும் திரைக்கதைப் பேராசானாக உயர்ந்தார்.

பாக்யராஜின் திரைப்படங்கள் உலகெங்கிலும் உள்ள திரைக்கதை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் எனலாம். Cause and Effect, Character Planting, Comedy as Plot Device, Emotional Balance, Intermission Block, Climax Design என திரைக்கதையின் ஒவ்வொரு முக்கியக் கூறையும் அவரது படங்களிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை தரமான சினிமாவாக மாற்றிய கதைசொல்லல், பல்வேறு ஜானர்களில் சமமான வெற்றியைப் பெற்ற எழுத்து, தலைமுறைகளைத் தாண்டி நிலைத்திருக்கும் திரைக்கதை இலக்கணம்—இவை அனைத்தும் பாக்யராஜை தனித்துவமான படைப்பாளியாக மாற்றுகின்றன.

அவர் ஒரு வெற்றிகரமான நடிகர் மற்றும் இயக்குநர் என்பதோடு, இந்திய சினிமாவின் திரைக்கதை மொழியை மாற்றிய திரைக்கதை ஜீனியஸ். அவரது படைப்புகள் காலம் கடந்தும் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் வழிகாட்டியாக விளங்கும்.

சி.ஜெ. ராஜ்குமார்

 

 

 

*****

x
^