கலை இயக்குனர்கள்: ஜீவா

Dec 03 2020

Views: 3908

 திரையில் பிரம்மாண்டமான கருப்பு வெள்ளை  மும்மூர்த்திகளின் தலைகள் ஒவ்வொரு திசையை பார்த்திருக்க , பின்னணியில் ஓம் நமசிவாய என்ற கோரஸ் ஒலிக்க ராஜ்கபூர் தரையிலிருந்து எழ முயற்சிக்கிறார்.தூரத்தில் வரிசை  கட்டி பெண்கள் ஆடிக்கொண்டிருக்க கீழிறங்கும் அகலப்  படிவரிசையில் நர்கீஸ் ஓடி வந்து பனி மூட்டத்திலிருந்து அவரை தூக்கிவிடுகிறார்…..கர் ஆயா மேரே பரதேசி என்று பாடல் ஒலிக்க தொடங்க, பிரம்மாண்ட பதுமைகளின் பின்னணியில் அந்த கனவுக்காட்சி தொடர்கிறது. டிலைட்  தியேட்டரில் காலைக்காட்சி குறைந்த கட்டணத்தில் பார்த்த ஆவாரா  படத்தின் கனவுக்காட்சி என்னுள் உறைந்து நின்றுவிட்டது. என்னவொரு காட்சியமைப்புகள் என்று வியந்த இந்த இளைய கலைஞனின் கைகளில் ஒரு புத்தகத்தை திணிக்கிறார் என் தந்தை. நீண்ட நாட்களாக அலமாரியில் இருந்த  நூல்தான் . ‘ரூபதர்சினி’ என்ற தலைப்பில்  அஜந்தா எல்லோரா செல்வங்களை பென்சில் ஸ்கெட்ச்களாக பதிவு செய்த  நூல். ஆசிரியர் பெயர் ஓவியர் ஆச்ரேக்கர் என்றிருந்தது. இவர்தான் ஆவாராவின் கலை இயக்குனர். அந்த பிரம்மாண்ட செட்டுகளை அமைத்தவர்  இவர்தான் என்று அறிமுகம் செய்தார்  தந்தை. அன்றிலிருந்து திரைப்படங்களில் நான் ஆர்வமுடன் பார்க்கத்தொடங்கியது  அரங்க அமைப்புக்களையும்!!!

ஒரு திரைப்படம் பலரது உழைப்பில் உருவாகிறது . இயக்குனர் தலைவர் என்றால் அவருக்கு உதவியாக ஒரு பெரும் படையே அந்த திரைப்படத்தை சிறப்பாக்க கடுமையாக உழைக்கிறது.  வெறும் கலை  ஆர்வம் மட்டுமல்ல, தொழில்நுட்ப அறிவும் சேர்ந்துதான்  அவர்களை இயக்கும். திரையில் நாம் காணும் அந்த நீள்சதுர சட்டத்தின் பின்னால் உழைப்பவர்களில் பிரதானமானவர்கள் இயக்குனர் தவிர ஒளிப்பதிவாளர்கள் , ஒலிப்பதிவாளர்கள், எடிட்டர்கள், இசைஅமைப்பாளர்கள் மற்றும் இந்த கலை இயக்குனர்களும். கலை இயக்குனர்கள், படத்தின் வடிவத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்றனர். இந்த வடிவத்தில் பார்வையாளர்களை ஒன்றிவிட செய்கின்றனர். கால வேறுபாடுகளும் உணர்வு வேறுபாடுகளும் மறக்க வைக்கப்படுகின்றன. திரையில் நாம் காணும் உலகத்துக்கு உயிர் தருபவர்கள் இவர்கள்தான்.

ஆரம்பகால ஒளிப்பதிவாளர்களின்  ஒளியமைப்பு பயிற்சிகளுக்கும் செய்முறைகளுக்கும் ரெம்பிராண்ட் போன்ற ஐரோப்பிய ஓவியர்களின் படைப்புகள் உறுதுணையாய் இருந்தன என்று சொல்வார்கள். செயற்கை ஒளி இல்லாத காலத்தில் ஜன்னல்களும் விளக்குகளும் மட்டுமே ஒளி ஆதாரங்களாக இருந்திருக்கின்றன. அவற்றை கருத்தில் கொண்டே ஓவியங்களில் ஒளியும் நிழலும் வடிவமைந்தன. பாலு மகேந்திராவின் உட்புற காட்சிகள் பெரும்பாலும் இந்த   கோட்பாட்டின்படியே அமைந்திருந்தன. கலை இயக்குனர்களுக்கும் மத்திய கால ஓவியங்களே மாதிரிகளாக அமைந்தன. ரோமானிய மற்றும் ஐரோப்பிய சரித்திர உடைகளுக்கும், கட்டிட அமைப்புகளுக்கும் இத்தகைய ஓவியங்கள் ஆதாரமாக இருந்தன.  டென் கமாண்ட்மெண்ட்ஸின் அரண்மனை  உட்புறங்களும் வெளிப்புறங்களும், பென் ஹர் படத்தின் பந்தய அரங்கமும், கப்பலின் அடிப்புரமும் பழைய ஓவியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை .

இந்திய திரைப்படங்கள் ஆரம்பத்தில் பெரும்பாலும் புராணப்படங்களே. தாதா சாகிப் பால்கே யின் ராஜா ஹரிச்சந்திரா தொடங்கி அப்போதைய பெரும்பாலான திரைப்படங்களுக்கு ரெடி ரெபெரென்ஸ் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள்! ரவி வர்மாவின் காலத்துக்கு முன் இந்திய புராணங்கள் பெரும்பாலும் சுவடிகளிலும் , அச்சிலும், கோவில் சிற்பங்களிலும், சுவரோவியங்களிலும்  மட்டுமே காணப்பட்டன. ஐரோப்பிய வண்ண தைல ஓவியங்களில் பயிற்சி பெற்ற இளவரசர், அதே பாணியை நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார். ரியலிச பாணியில் கடவுளர்கள் படைக்கப்பட்டனர். சரஸ்வதியும் லட்சுமியும் புடவை ஜாக்கெட்டில் தாமரை மீது அமர்ந்தனர். மீசை, ஜடாமுடியுடன் சிவன் எழுந்தருளினார். தசைகள் திமிர்ந்தெழ, ராவணன் விண்ணில் ஜடாயுவுடன் போரிட்டான். எமன் பாசக்கயிறுடன் மார்க்கண்டேயனை கவர முற்பட்டான். பெரிய விலாசமான தர்பாரில் அரிச்சந்திரன் கவலையுடன் நின்றிருந்தான். பர்ணசாலைகள், அரண்மனைகள் உட்புறங்கள், தடாகக்  கரைகள்  அனைத்தும் ஆயில் பெயிண்டிங்குகளாக பளபளத்து நின்றன. லித்தோகிராபி  அச்சுமுறையை  அறிமுகம் செய்து ஆயிரக்கணக்கில் கடவுளர்களை ரவி வர்மா மக்களிடையே பரப்பினார். வீட்டு பூஜை இடங்களில் ரவிவர்மாவின் ஓவியங்கள் கடவுளாக வணங்கப்பட்டன.  1913ல் தாதா சாகிப் பால்கே முதன் முதலில் இந்தியத் திரைப்படம் ஒன்று ஆரம்பிக்கையில், புராணக்கதைகளையே தேர்ந்தெடுத்தார். புராணங்கள் மட்டுமே நாடக மேடைகளில் அரங்கேறிய காலம் அது.  முதல் திரைப்படமாக ராஜா ஹரிச்சந்திரா உருவானது.

நாடக மேடைகளில் அரங்க அமைப்பு என்பது பின்னணியில் ஒரு படுதாவை கட்டுவது , அதில் காட்சிக்கேற்ப பூங்காவோ, வெளிப்புறக்காட்சியோ, அரணமனை உட்புறமோ , தர்பார் மண்டபமோ வரைந்து இருப்பார்கள். படுதா வரைவது என்பது ஒரு பெரும் கலை. தரையில் துணிகளை இணைத்து தைத்து படுக்க வைத்து, அதன் மீது ஸ்கெட்ச் செய்து வரைவார்கள். பரிமாணங்களை படுக்கை வசமாக கொண்டு வருவது பெரும் சிரமமான வேலை. இதிலும் நிபுணர்கள் இருந்தனர். என்னெஸ்க்கே நாடக சபாவில் புணி புரிந்த   கே .மாதவன் போன்ற ஓவியர்கள் இதில் மேதைகளாக திகழ்ந்தனர். ஒளி பாய்ச்சப் படும்போது, பிரதிபலிக்காத வண்ணம், ஆயில் பெயிண்டுகளை தவிர்த்து நீர்வண்ணங்களில் இந்த படுதாக்கள் வரையப்பட்டன. பால்கே  திரைப்படங்களை உருவாக்கும்போது பின்னணியில் இதே நாடக மேடை படுதாக்கள் உருவாக்கப்பட்டன. நுணுக்கமான டீடைலிங்குகளுக்காக ரவி வர்மாவின் ஓவியங்கள் உதாரணமாக எடுக்கப்பட்டன. நடிகர்களின் ஆடை அலங்காரங்கள், முழுக்க முழுக்க இந்த ஓவியங்களின் அடிப்படையிலேயே உருவாகின. பின்னணியில் படுதாக்கள் இருக்க, முன்னணியில் props பொருட்களாக சிம்மாசனம், நாற்காலிகள், சிறிய மேஜைகள், பூச்சாடிகள் , தூண் போன்ற சிறிய அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன. இயற்கையாகவே, ஓவியர்கள் கலை இயக்குனர்களாக அவதாரம் எடுத்தனர்.

ஹாலிவுட் திரைப்படங்கள், நமது படைப்பாளிகளுக்கு எப்போதுமே மகத்தான ஒரு அமுத சுரபியாக திகழ்ந்து வந்திருக்கின்றன. நமது திரைப்படங்கள் சமூக சித்திரங்களாக மாறிக்கொண்டிருந்த காலத்தில், ஆங்கிலப்படங்களின் அரங்க அமைப்புகள் நம் திரைப்படங்களில் வடிவம் மாறி வந்தன. ஹாலிவுட் திரைப்படங்கள் மட்டுமல்ல, பிற நாட்டு திரைப்படங்களும் திரைப்படக்கலையின் அனைத்து துறைகளிலும் புத்துப்புது பரிசோதனைகள் செய்து வெற்றி  கண்டன. மெட்ரோபோலிஸ் என்ற ஜெர்மானிய திரைப்படம் 1927ல் வெளியானது. Fritz Lang என்ற மகத்தான இயக்குனரின் படம். ஒரு எதிர்கால நகரத்தின் நிர்மாணமும் அதன் அமைப்பும்  காட்டிய அழகிய தோற்றத்திற்கு முற்றிலும் எதிரான அழுக்கும் அவலமும் கொடுமையும் நிகழ்ந்த பூமிக்கடியிலிருந்த இன்னொரு வாழ்க்கையையும் சித்தரித்த படம். நூறாண்டுகளை நெருங்கியும் மாயத்தன்மை மிக்க  இதன் செட்டுகள் இன்றும் பேசப்படுகின்றன.

ஹாலிவுட்டில் அரேபிய பின்னணி கொண்ட திரைப்படங்களும் மௌனப்பட காலத்திலேயே உருவாகின. அலாவுதீனும் அற்புத விளக்கும் , அலிபாபா போன்ற கதைகள். இவற்றுக்காக இஸ்லாமிய கட்டிடக்கலை அமைப்புக்களை பிரதியெடுத்து காட்சியமைப்புகள் உருவாயின. உடைகளும் அரேபிய வாசனையுடன் அமைக்கப்பட்டன. நம் நாட்டிலும் புராணங்கள் சலித்த காலத்தில் அரேபிய கதைகள் நுழைந்தன. அரங்க அமைப்புகளும் நுழைந்தன. வாள்சண்டை கதைகள், முகமூடியணிந்த Zorro போன்ற பாத்திரங்கள் இருபாலரிலும் ஹாலிவுட்டில் உருவானபோது இங்கும் பிரதியெடுக்கப்பட்டன. டூபான் குவீன் போன்ற தலைப்புக்களில் ‘பயமற்ற நாடியா’ போன்ற நடிகைகளும் களத்தில் குதித்து , ஓடும் ரயில் பெட்டிகளின் மீதும், குதிரைகளின் மீதும் பயணித்து வாள்சண்டை இட்டனர். மாளிகைகளுக்குள் சுழல் படிக்கட்டுகளும் , உருண்டு சண்டை போடுவதற்கும் வாகான அகலமான படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டன. ரோமியோ ஜூலியட்டின் மாளிகை உப்பரிகைகளும் தமிழாக்கம் பெற்றன. அப்போது இந்திய திரையுலகில் வெளிநாட்டு திரைப்பட நிபுணர்களின் ஆதிக்கம் நிலவி வந்த காலம். அவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை இங்கு கொண்டு வந்தனர். திரைப்பட ஆக்கத்தில் நவீனம் படர்ந்து வந்தது. தமிழிலும் அப்படி ஒரு இயக்குனர் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். அமெரிக்கரான எல்லிஸ் ஆர். டங்கன் தமிழ்ப்படங்களுக்கு  ஹாலிவுட்டின் தோற்றத்தை தர முயற்சி எடுத்தார். அவரது அம்பிகாபதி, ஷேக்ஸ்பியரின்  ரோமியோ ஜூலியட்டின் தாக்கத்தில் உருவானது. அழகுணர்வு மிக்க மென்மையான காதல் காட்சிகள் , அரங்க அமைப்புகள், ஒளிப்பதிவு , நடிப்பு என்று அனைத்து துறைகளிலும் அருமையாக அமைந்த திரைப்படம். மீரா, மந்திரிகுமாரி போன்ற திரைப்படங்களிலும் அரங்க அமைப்புகளுக்கு மிக முக்கியத்துவம் தந்தார்.

இந்திமொழி திரைப்படங்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே   செட்டுகளுக்கு மிக முக்கியத்துவம் தந்து வந்தன. சாந்தாராம், ராஜ்கபூர், கே.ஆசிப் , மெஹபூப் கான் , கமல் அம்ரோஹி போன்ற இயக்குனர்களின் திரைப்படங்களை பார்த்திருந்தால் புரியும். சாந்தாராமின் திரைப்படங்கள் மனிதனின் மென் உணர்வுகளோடு தொடர்பிலிருந்தாலும் திரைப்படங்கள் ஒரு காட்சி ஊடகம் என்பதை நன்கு புரிந்திருந்தார். அவரது தோ ஆங்கேன் பாரா ஹாத் திரைப்படத்தில் திறந்த வெளியில் ஒரு வீடு செட் போட்டிருப்பார். அதன் ஜன்னல், ஜன்னலோரத்தில் இருந்த சிறு கிண்டி போன்றவை கூட நடிக்கும். செட்களுக்கு முக்கியம் தந்து அவர் எடுத்த திரைப்படங்களில் சில … ஜனக்  ஜனக்  பாயல் பாஜே , நவ்ரங், ஸ்த்ரீ , கீத் காயா பத்தரோன் னே, ஜல்  பின் மச்லி  நிருத்ய பின் பிஜ்லி போன்ற திரைப்படங்களில் அரங்க அமைப்புகள் இன்றும் பேசப்படுபவை. குறிப்பாக நவரங்  திரைப்படத்தின் ஆடல் காட்சிகளின் அரங்கங்கள் புகழ் பெற்றவை .

ராஜ்கபூர் அச்ரேக்கர் இணைந்து வந்த திரைப்படங்கள், குறிப்பாக கருப்பு வெள்ளையில், மிக புகழ் பெற்றவை . ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மெய்ன் கங்கா பெஹத்தி ஹை , ஒரு  அபார்ட்மெண்ட் குடியிருப்பை மையமாக கொண்ட ஜாக்தே  ரஹோ . குறிப்பாக பாடல் காட்சிகளில் விவரிக்க முடியாத அழகு. ஸ்ரீ 420 திரைப்படத்தில் ஒரு இரவு நேர சாலைக்காட்சி.’பியார் ஹுவா இக்ரார் ஹுவா’ என்ற பாடல் காட்சி. ராஜ்கபூரும் நர்கீஸும் ஒரு பிளாட்பார ஓரமாக நடக்கிறார்கள்.  முன்னணியில் அரங்க செ ட்டும் பின்னணியில் வரையப்பட்ட  படுதாவும் கலந்த ஒரு நேர்த்தி. தூரத்தில் ஒரு இரவு நேர புகைவண்ட யும் ஓடிக்கொண்டிருக்கும். குளுமையும் காதலும் கலந்த ஒரு மழை நேரக்காட்சி!!! இதே திரைப்படத்தில் ‘ராமையா வஸ்தாவய்யா’ என்ற பாடலுக்கு  ஒரு உட்புற  அரங்கு அமைத்து வெளிப்புறமாக காட்டி அழகுற அமைத்திருப்பார். குருதத் என்ற ஒப்பற்ற இயக்குனரின் திரைப்படங்களிலும் கலை இயக்குனருக்கு வேலை அதிகம். ‘காகஸ் கே பூல்’ திரைப்படத்தில் அரங்கம் அமைக்க வேண்டிய ஸ்டுடியோவையே ஒரு அரங்கமாக காட்டியிருப்பார்.

மொகலே ஆஜம் , பாகீஜா போன்ற திரைப்படங்கள் இஸ்லாமிய கட்டிடக்கலை மரபுகளை திரைப்படங்களுக்கு ஏற்ப மாற்றி வெற்றிகரமாக தந்த திரைப்படங்கள் .

தமிழ்த்திரையுலகை பொறுத்தவரை அரங்க நிர்மாணத்திற்கு பெரும் புகழ் பெற்றது அந்த காலத்தில் ஜெமினி ஸ்டுடியோஸ். சந்திரலேகா,  அவ்வையார் போன்ற திரைப்படங்களின் அரங்கங்கள், அவை உருவாக்கப்பட்ட காலத்தின் ஒப்பீட்டின்படி  பார்த்தால் பிரமிக்க வைக்கக்கூடியவை. சந்திரலேகாவின் முரசு நடனம் இன்றும் பிரமிக்கவைக்கக்கூடியது. கலை இயக்குனர் ஏ.கே.சேகர், கொட்டாங்குச்சிகளை வரிசையாக அடுக்கி அதை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் புகைப்படமெடுத்து, பின்னர் பிரம்மாண்டமான முரசுகளை அமைத்தாராம். பிற்காலத்தில் பிரம்மாண்டமான மாளிகை செட்கள் நிறைய தமிழ் படங்களில் வந்து போயின. எங்க வீட்டுப்பிள்ளை, வசந்த மாளிகை போன்ற திரைப்படங்களில் வீட்டுக்குள் பிரம்மாண்டமான படிக்கட்டுகளை பார்க்கலாம். எம்ஜியாரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக ஒரு புத்த விகாரத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக ஆர்ட் டைரக்டர் அங்கமுத்து உருவாக்கினார். நீண்ட கோரைப்பற்களுடன் நம்பியார் எம்ஜியாருடன் இங்கே மோதுவார்.

தமிழ் படங்களில் வணிக நோக்கு கொண்ட இயக்குனர்கள் பலர் தங்கள் திரைப்படங்களில் கனவு மற்றும் கற்பனை  பாடல் காட்சிகளுக்கான   அரங்கங்களை அழகாக அமைத்துள்ளனர்.  அன்னையின் ஆணை படத்தில் ‘ கனவின் மாயா லோகத்திலே ‘ பாடல் , குலேபகாவலியில் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ‘ பாடல், ராஜபார்ட் ரங்கதுரையில் சோவியத் யூனியன் பத்திரிகை காலண்டரை காப்பியடித்த ‘மதன மாளிகையில்’ பாடல்’, ஏ.பி.நாகராஜன் திரைப்பட பாடல்கள் யாவும் ஒரு அழகுணர்ச்சியோடு இருக்கும் .  இதற்கு மாறாக டீ.ராஜேந்தர் போன்ற இயக்குனர்களின் பாடல் காட்சி அரங்கங்கள் திரைப்பட ரசனைக்கே சவாலாக திகழ்ந்தன.அபத்தமான அரங்க அமைப்புக்களும் கண்ணைக்கிழிக்கும் வண்ணங்களும் பெரும் கொடுமையாக இருந்தாலும் இதையும் ரசிக்க ஆட்கள் இருந்தனர்.

ஸ்டுடியோக்களில் அரங்கங்கள் அமைப்பது போல வெளிப்புறங்களில் அரங்கங்கள் அமைப்பதுண்டு. ஹாலிவுட்டின் வெஸ்டர்ன் திரைப்படங்களை இதற்க்கு உதாரணமாக சொல்லலாம். பாலைவனம் போன்ற வெற்று இடங்களில், கவ் பாய் படங்களில் வரும் காட்சிகளை நினைத்துப் பாருங்கள். நடுவில் ஒரு நீள  வீதி. இருபுறம், மரத்தால் அமையப்பெற்ற கட்டிடங்கள், குதிரைகள் கட்டக்கூடிய, பூமியில் அறையப்பட்ட குச்சிகள், தண்ணீர் தொட்டிகள், சில சமயங்களில் ஒரு காற்றாலை …. எத்தனை படங்களில் பார்த்திருப்போம். ஷோலே இந்திப்படத்தில் ராம்நகர் என்ற ஊரின் வெளிப்பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமமே உருவாக்கப்பட்டது. வீதிகள், வீடுகள், பட்டறைகள், கடைகள்,  கோவில்கள், மசூதி, ஒரு மேல்நிலை தண்ணீர் தொட்டி  என்று அமைத்திருந்தனர். நாயகன் திரைப்படத்திற்காக ஒரு தாராவி சேரிப்பகுதியே தோட்டா தரணியால் உருவாக்கப்பட்டது. அஞ்சலி படத்துக்காக ஒரு அபார்ட்மெண்டின்  வெளிப்புறப்பகுதி…. சிவாஜி திரைப்படத்திற்காக தோட்டா தரணி உருவாக்கிய கண்ணாடி மாளிகை மற்றும் ஒரு தெலுங்கு படத்திற்காக அவர் உருவாக்கிய மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்புறம் பெரிதும் பேசப்பட்டவை.  தில், தூள் போன்ற படங்களுக்காக மணிராஜ் உருவாக்கிய வீதிகள் ,  சிங்கம் படவரிசையில் வெளிப்புறத்தில் உருவாக்கப்பட்ட கதிரின் காவல் நிலையம் , என்று சொல்லிக்கொண்டே போகலாம். கதிருடைய  இன்னொரு குறிப்பிடத்தக்க பணி  ‘தீரன் அதிகாரம்’ படத்திற்காக. இளம் கலை இயக்குனர் செல்வகுமாரின் மதராசப்பட்டணம் போன்ற திரைப்படங்கள், பீரியட் பிலிம் வரிசையில் பெரிதும் பேசப்பட்டவை. இதே போலத்தான் கிரணின் இரண்டாம் உலகம், அனேகன் போன்ற திரைப்படங்களும். ராஜீவன் இளைய தலைமுறை கலை இயக்குனர்களில் பிஸியானவர். கவுதம் மேனனின் திரைப்படங்களில் இவரது பெயர் இருக்கும். நவீன பாணி செட்கள் இவரது சிறப்பம்சங்கள். இவரது மாணவர்களில் ராம்பிரசாத் இப்போது திறமையானவராக காணப்படுகிறார். ராஜீவன் புரொடக்ஷன் டிசைனராக பணி  புரிந்த தெலுங்கு படமான சாய்ரா நரசிம்ம ரெட்டி திரைப்படத்தின் கலை இயக்குனர்களில் ராம்பிரசாத்தும் ஒருவர்.

ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் எளிமையான ஆனால் வலிமையான கலை இயக்கம் கலாரசிகர்களின் கவனத்தை எப்போதுமே ஈர்க்கும். பெருந்தச்சன் படத்தின் கோவில் கட்டுமானம், ஒரு வடக்கன் வீர கதாவின் கேரள வீடுகள், ஆத்மா படத்தில் அருவியின் அருகில் கட்டப்பட்ட கோவில், வண்ண வண்ண பூக்கள் படத்தில் இடிந்து போன கற்கோவில் என ஏராளமான படைப்புகள்.

சாபு சிறில் தமிழகத்தின் இன்னொரு புகழ் பெற்ற கலை இயக்குனர். மினியேச்சர் கலைஞராக தொடங்கிய இவரது கலை வாழ்வு இப்போது உச்சத்தில் இருக்கிறது. ஏராளமான தேசிய விருதுகளைப்பெற்றவர். இந்தித்திரைப்படங்களிலும் பெயர் பெற்றவர். காலாபாணி , ஹே ராம், மை  ஹூன் நா , குரு, ஓம் சாந்தி ஓம், ரா ஒன் , பாய்ஸ் , அந்நியன், எந்திரன், பாகுபலி என்று இவருடைய நீண்ட லிஸ்டில் இருந்து மிக சொற்பமே இங்கு எழுதப்பட்டிருக்கிறது! சாபுவின் மாணவர்களில் ஒருவரான முத்துராஜ் இப்போது பரபரப்பாக இருக்கிறார். ‘குரு’ என்ற தன்   மலையாளப்படத்திற்கு மாநில விருது பெற்றவர் . பழசி  ராஜா, அவன் இவன், நண்பன், 2.0 போன்ற திரைப்படங்கள் இவரது திறமையை சொல்லும்.

இப்போது நிறைய படங்களின் டைட்டில்களில் கலை இயக்குனர்கள் சிலர் புரொடக்ஷன் டிசைனர் என்று அழைக்கப்படுகிறார்கள். இது கலை இயக்குனர் பணியை விட மேலும் பொறுப்பு மிகுந்த பணி . ஒரு திரைப்படத்தின் தோற்றத்தை திட்டமிடும் பணி  இவருடையது. கதாபாத்திரங்களின் ஆடை அலங்காரம், தலை அலங்காரம், ஒப்பனை  முதல் பல்வேறு விஷயங்களை இவர் தீர்மானிக்கிறார். திரைப்படம் பார்ப்பவருக்கு வடிவத்தை தருவது இவரது பணி . கலை இயக்குனர் அரங்க அமைப்புகளை தீர்மானிக்கிறார். அதற்கான அடிப்படை கோட்டோவியங்களை கையினாலும் கணினி மூலமாகவும் வரைகிறார். அதன் பட்ஜெட்டை கணித்து தயாரிப்பாளரிடம் ஒப்புதல் பெறுகிறார். சில காட்சியமைப்புகளுக்கு கிராபிக்ஸ் VFX  நிபுணரிடம் விவாதித்து பரஸ்பரம் ஆலோசனைகளை பகிர்கிறார். கலை இயக்குனர்கள் கனவுக்காட்சிகளுக்கும் தந்திர காட்சிகளுக்கும் மினியேச்சர் செட் அமைத்து அதை ஒளிப்பதிவாளர் படமாக்கி இன்னொரு சட்டகத்துடன் இணைத்தது எல்லாம் பழைய காலம். இப்போது VFX  மூலம் எதையும் உருவாக்கலாம் என்ற அளவில் வந்திருக்கிறது. எதிர்காலத்தில் கணினியிலேயே முழு அரங்கம் கூட நிர்மாணிக்கப்படலாம்!! டென்  கமாண்ட்மெண்ட்ஸில் கடல் பிளக்கும் காட்சி மினியேச்சர் முறையில்தான் படமாக்கப்பட்டது. இப்போது என்றால் கிராபிக்சில் சுலபமாக முடித்துவிடுவார்கள். பென் ஹர் பழைய திரைப்படத்தையும் சமீபத்தில் வந்த இன்னொரு பென்ஹர் பதிப்பையும் பார்த்தால் வித்தியாசம் சுலபமாக விளங்கிவிடும்.

கலை இயக்குனர் பொதுவாக அரங்கம் அமைக்கும் பணியை அதில் அனுபவம் வாய்ந்த மேஸ்திரியிடம் ஒப்படைப்பதுண்டு . அவரிடம் தச்சர், மோல்டர் , பெயிண்டர், பின்னணி ஓவியர் என்று பணியாளர்கள் இருப்பார்கள்.அவர்கள் குறித்த நேரத்தில் அரங்க நிர்மாணத்தை முடித்து கொடுத்துவிடுவார்கள்.

முன்பெல்லாம் matte painting ஓவியர் என்று ஒரு பிரிவினர் கலை இயக்குனருக்கு உறுதுணையாக இருப்பார்கள். சில பின்னணி காட்சிகளை தத்ரூபமாக வரை வார்கள். Star Wars போன்ற திரைப்படங்களில் காணப்படும் விண்வெளிக்காட்சிகள் , இன்னும் பல படங்களில் காணப்பட்ட இயற்கை காட்சிகள் போன்றவை கையால் வரையப்பட்டு இணைக்கப்பட்டவைதான். இப்போது கான்செப்ட் ஓவியர்கள் உருவாகியிருக்கின்றன. இவர்கள் ஓவியத்திலும் கணினி நுட்பங்களிலும் சிறந்தவர்கள். கணினியில் ஓவியங்கள் வரையக்கூடியவர்கள்.  இவர்கள் பல கோணங்களில் வரைந்து தரும் காட்சியை கலை இயக்குனர், VFX நிபுணர், ஒளிப்பதிவாளர் மற்றும் திரைப்படத்தின் இயக்குனர் அனைவரும் கலந்தாலோசித்து காட்சிகளை படமாக்குவார்கள். சில சமயங்களில் கான்செப்ட் ஓவியர் VFX நிபுணராகவும் இருப்பார். அப்படி ஒருவர் தமிழ் திரையுலகில் பணியாற்றும் ரமேஷ் ஆச்சார்யா.

இன்று கான்செப்ட் ஓவியர்களின் பிரபலமாக இருப்பவர் கோவையை சேர்ந்த இளைஞர் விஸ்வநாத் சுந்தரம் . பாகுபலி போன்ற பிரம்மாண்டமான திரைப்படங்களிலும்  திரைக்கு வரப்போகும் இந்தியன் 2 படத்திலும் இவர்தான் கான்செப்ட் ஓவியர். இவருடைய ஓவியங்கள் நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைப்பவை என்று சொன்னால் மிகையாகாது.  கோபி ஓவியன் போன்ற திறமைமிக்க இளைஞர்களும் இந்த துறையில் இறங்கியிருக்கின்றனர்.

ஓவியர்களும் கலை இயக்குனர்களும்  திரைப்பட இயக்குனர்கள் ஆகும்போது அவர்களுடைய திரைப்படங்கள் தனி அழகுடன் திகழ்கின்றன. ஓவியர்கள் என்று எடுத்துக்கொண்டால் அருமையான இயக்குனர்கள் ஆனவர்கள் பிரிட்ஸ் லாங், ஜான் ஹஸ்டன் , ஆல்பிரட்  ஹிட்ச்காக் , அகிரா குரோசவா ,  சத்யஜித் ராய், பாபு (தெலுங்கு), அரவிந்தன் (மலையாளம்) , அமோல் பாலேக்கர் , பொன்வண்ணன், கதிர்,  ரஞ்சித்  இன்னும் பலர்.
கலை இயக்குனர்களாக இருந்தவர்கள், பி .என்.மேனன் , ஐ.வி.சசி , பரதன் !

முத்தாய்ப்பாக, என்னதான் கலை இயக்குனர்கள் பிரமாதமாக வேலை செய்தாலும் படம் வெற்றி பெற்றால்தான் அந்த பணிகள் பேசப்படும். இல்லாவிட்டால் யாருமே கண்டுகொள்ளமாட்டார்கள். சென்னை வானகரத்தில் ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரிய  ஒரு பிரம்மாண்ட அரண்மனை செட்டை கண்டு வியந்து நின்றேன்.  மிகவும் புகழப்படவேண்டிய அரங்கம் என்று நான் நினைத்தது காஷ்மோரா சரியாக ஓடாததால் , மறக்கப்பட்டது

ஓவியர்  ஜீவா JEEVA

தேசிய விருது பெற்ற கலைஞர்

Article courtesy: Aavanaazhi magazine.

x
^