Jun 22 2020
திரைப்படத்துறையில் இயங்கும் ஒளிப்பதிவாளர்கள், கேஃபர்கள் மற்றும் நிறத்திருத்தம் செய்யும் கலைஞர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தையான காண்ட்ராஸ்ட் தொழில்நுட்பரீதியாக வேறுபாடுகளைக் குறிக்கும்.
லைட்டிங், நிறம், கம்போஷிஷன் என்று பல வேறுபாடுகள் இருந்தாலும் காண்ட்ராஸ்ட் முதன்மையாக அறியப்படுவது தொனி (tone) என்ற விஷுவல் அமைப்பில்தான்.
பொதுவாக, அதிக வேறுபாடுகள் ஃப்ரேமில் இருந்தால் அடர்த்தியான விஷுவல்கள் அமைக்கலாம். ஒளிப்படப்பதிவில் நிறங்களைத் தேர்வு செய்வது ஒரு கலை என்றால் அந்நிறங்களைக் கொண்டு ஒருங்கிணைப்பதும் வேறுபாடுகளை உருவாக்குவதும் மிக முக்கியமானதாகும்.
கலர் காண்ட்ராஸ்ட் ஏழு வகைகளில் அறியப்படுகின்றன:
நிறச்சாயல் வேறுபாடுகள்
விஷுவலில் நிறச்சாயல் மூலமாக வேறுபாடுகளைக் கட்டமைப்பது. அதாவது, முதன்மை வண்ணங்களையும் அதன் ஒத்திசைவு நிறச்சாயல்களையும் பயன்படுத்துவது.
உதாரணம்:
சிவப்பு / மயில்நீல நிறம்
பச்சை / கருஞ்சிவப்பு
நீலம் / மஞ்சள்
ஒளி வேறுபாடுகள்
வெளிச்ச வேறுபாடுகளை அடிப்படையாக வைத்து இரவு பகலை அறிகிறோம். ஃப்ரேமில் இருள், ஒளி மற்றும் குறைந்த ஒளியை வைத்து உருவாக்கும் நிற வேறுபாடுகளே லைட்டிங் காண்ட்ராஸ்ட் ஆகும்.
குளிர் / வெப்ப வேறுபாடுகள்
நிற வேறுபாடுகள், பல்வேறு உணர்வுகளை பார்வையாளர்களின் மனதில் உருவாக்கும் தன்மை கொண்டவை.
சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு ஆகியவை வெப்பம் சார்ந்த நிறங்கள். இவை மகிழ்ச்சி, ஆபத்து போன்ற உணர்வுகளையும் பசியையும் கூடத் தூண்டக்கூடிய நிறங்கள்.
ஐ திரைப்படத்தில் விக்ரம் ஆணழகன் போட்டிக்குத் தயாராகும் காட்சிகளில் ஒரு அருகாமை உணர்வுக்காக வெப்ப நிற ஒளியைப் பயன்படுத்தினார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
குளிர் நிறங்களான நீலம், சாம்பல் ஆகியவை அமைதியான உணர்வையும், தூரத்தன்மையையும் உருவாக்கும்.
ஒத்திசைவு நிற வேறுபாடுகள்
ஒத்திசைவு நிறங்களின் கூறுகளைக் கொண்டு உருவாக்கும் வண்ண வேறுபாடுகள் தீவிரத்தன்மை கொண்டதாகும். ஒத்திசைவு வண்ணங்கள் ஒன்றிணைந்தால் வெண்மை நிறம் உருவாகிறது. நிறச்சக்கரத்தில் ஒத்திசைவு நிறங்கள் பக்கவாட்டில் இருப்பதால் அதன் துணை கொண்டு உருவாக்கப்படும் வேறுபாடுகள் மிகவும் உயிர்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஒருமித்த நிற வேறுபாடுகள்
ஃப்ரேமில் பெரும்பகுதி முதன்மை வண்ணங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு சிறிய பகுதியில் ஒத்திசைவு நிறங்களைப் பயன்படுத்தி வேறுபாட்டை உருவாக்குவது. இதன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஏதோ ஒரு நிறத்தின் மீதே திருப்பும் உத்தியாகும். இரண்டாம் நிலை வண்ணங்களோ அல்லது ஒத்திசைவு நிறத்தைக் குறைவாகப் பயன்படுத்தி முதன்மை நிறத்திற்கு பலத்தை உருவாக்குவது.
வண்ணச்செறிவு வேறுபாடுகள்
வண்ணத்தின் செறிவை பல்வேறு விகிதத்தில் ஃப்ரேமில் பயன்படுத்தி வேறுபாடுகளை உருவாக்குவது. அதாவது ஃப்ரேமின் ஒரு பகுதியில் அடர்த்தியான வண்ணங்களும் மற்றொரு பகுதியில் குறைந்த வண்ணச்செறிவு கொண்ட நிறங்களையும் பயன்படுத்தும் உத்தி. இதன்மூலம் பார்வையாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியின் மீது எளிதாக கவன ஈர்ப்பை உருவாக்க முடியும்.
நிற நீட்டிப்பின் வேறுபாடுகள்
நிறக்கலவையின் தன்மையை மாறுபட்ட இரண்டு பகுதிகளுக்கிடையே உருவாக்குவது. அறிஞரான கோக்தே கவன ஈர்ப்பின் அடிப்படையில் நிறங்களுக்கு எண் குறியீடுகளை உருவாக்கினார்.
உதாரணம்
மஞ்சள் – 9
ஆரஞ்சு – 8
சிவப்பு – 6
ஊதா – 3
நீலம் – 4
பச்சை – 6
மஞ்சள் நிறத்தின் தன்மை திடமாக உள்ளதால், ஃப்ரேமில் சமநிலையை உருவாக்குவதற்காக மற்ற நிறங்களைக் காட்டிலும் மஞ்சள் நிறத்தை 1/3 பகுதி பயன்படுத்த வேண்டும். ஆகவே நிற நீட்டிப்பின் மூலம் வேறுபாடுகளை உருவாக்க ப்ரேமில் நிறத்தின் பங்கை தீர்மானிப்பதாகும்.
விஷுவலில் டெப்த், துல்லியம் ஆகிய கூறுகள் நிற வேறுபாட்டின் மூலம் மாறுபடுகிறது. அதனால் காண்ட்ராஸ்ட் அமைப்பு மேற்குறிப்பிட்ட ஏழு விதமான அணுகுமுறைகள் மூலமாக அறியப்படுவது முக்கியமானதாகும்.
*****