சிதைத்தல் என்பது.. (Lithograph: Male Nude by Egon Schiele, 1917 )

Jun 30 2018

Views: 3777

ஒரு நேர்த்தியான மனித உருவம் உள்ளது, அதெற்கென அங்க லட்சணங்கள் என்று வரையறுக்கபடுகின்றது, ஒரு மனித உடல், அதன் தலையின் உயரத்தினை போல எட்டு மடங்கு இருக்கும், அல்லது ஏழரை மடங்கு இருக்கும், இதற்கு அதிகமாக உயரம் என்பது ஒரு மனிதன் நெட்டையானவன் என்றும் அதற்கு குறைவாக இருக்கும் பொழுது அது குட்டையான மனிதன் என்றும் கருதப்படுகின்றது.

இது போலவே முகத்திலுள்ள அங்கங்கள், கண்கள் அவற்றின் அளவுகள், ஒன்றிடமிருந்து மற்றொன்றின் தூரம், அதுபோலவே மூக்கின் நுனியிலிருந்து தாடையின் எல்லைக்கு இடையே உதடுகளின் பொருத்தமான இடம், என்று பல இலக்கணங்களை நாம் கண்டறிய முடியும். இதனை ஒரு மாதிரியாக கொண்டு அதிலிருந்து ஒரு சில வேறுபாடுகளை உண்டாக்கி பலவிதமான உடலமைப்புகளை இந்த இயற்கை படைத்துவருகின்றது.

இந்த அளவுகளையும் விகிதங்களையும் நன்கு கற்றறிந்து பயிற்சிபெற்று, மிகச்சரியாக ஒரு ஓவியன் கையாளும் பொழுது அங்கே ஒரு ஒழுங்கு இருப்பதை நாம் உணருகின்றோம். இவ்வாறு தீட்டப்படும் ஓவியங்கள் மரபு ஓவியங்களாகவும், இதிலிருந்து மாறுபட்டு ஓவியனின் விருப்பபடி விகிதங்களையும் இடங்களையும் அமைத்துக்கொள்வதென்பது சிதைத்தல் என்றும் ஒரு கூற்று உண்டு. உள்ளதை உள்ளவாறே கீற்றுவது நேர்த்தி, அதிலிருந்து மாறுபட்டு தீட்டுவது சிதைத்தல் என்பதே இந்த சிந்தனை.

அண்மையில் மிகவும் தேர்ச்சிபெற்ற ஓவிய சரித்திரவியலாளர் ஒருவர் ஒரு விவாதத்தில், இது போன்ற சிதைத்தல் சில வேளைகளில் விரும்பத்தக்கதல்ல என்று கடுமையாக விமரிசனம் செய்தார். ஒரு புராதன கலைபடைப்பினை ஒரு ஓவியன் அது உள்ளது உள்ளது போலவே தீட்டாமல், தான் விரும்பிய கீற்றுகளையும் வடிவங்களையும் பயன்படுத்தி தீட்டியதையே இவ்வாறு விமரிசனமாக பேசினார்.

ஒரு அழகிய உருவத்தினை சிதைத்தல் எனும் ஒரு செயல்முறை இங்கே முன்வைக்கபடுகின்றது. இது எனக்கு சற்று அந்நியமாகவே தோன்றுகிறது. உண்மையில் ஒரு படைப்பாளியின் செயல் படைப்பதே, சிதைப்பதல்ல. எதற்காக ஒரு ஓவியன் ஒருவித ஒழுங்குடன் இருக்கும் வடிவத்தினை சிதைக்கவிரும்புவான்?

இதற்கு நாம் சற்று ஓவிய சரித்திரத்தில் பயணித்தால், இதன் பின்னணி விளங்கிவிடும். பிக்காஸோ, டு ஷான் போன்ற மேற்கத்திய ஓவியர்கள் உருவங்களை சிதைத்து கீற்றியதாக ஒரு கருத்து உள்ளது, அதுவே இந்த விவாதங்களுக்கெல்லாம் வித்து. உண்மையில் பிக்காஸோ டு ஷான் போன்றவர்கள், இந்த உலகின் மூன்று பரிமாணங்களை தாண்டிய ஒரு நிஜத்தில் நம்முடைய உருவங்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று கற்பனை செய்ததின் விளைவே அவர்களின் சிதைந்துவிட்ட தோற்றத்தினை அளிக்கும் ஓவியங்கள்.

டிஸ்டார்ஷன், பிராக்மெண்டேஷன் போன்ற கருத்துருவங்கள் ஓவிய விமர்சகர்கள் வாயிலாக ஓவியர்களையும் ஓவிய ரசிகர்களையும் வந்தடைகின்றது. உண்மையில் சிதைப்பதற்காக சிதைக்கபடுபவையல்ல இவை, வேறு ஒரு பயணத்தின் தற்செயலான வெளிப்பாடே இவை.

நாம் சற்று சிந்தித்து பார்த்தால் சிதைத்தல் என்பது ஒருவித இயற்கையான இயல்பு தன்மையிலிருந்து ஒன்றை மாற்றியமைப்பதென்பதே. அந்த சிந்தனையின்படி பார்த்தோமேயானால், ஒரு குழந்தை இயல்பாக உச்சரிக்கும் ஒலிகள் மிக இனிமையாகவே இருக்கின்றன. ஆனால் ஒரு மொழி என்றும் அதன் வார்தைகளென்றும் நாம் செயற்கையாக அந்த குழந்தையினிடம் திணித்துவிட்டு அதன் இயல்பான ஒலிக்கோர்வையினை சிதைத்துதான் விடுகின்றோம். ஒருவர் பின்னாளில் சொற்களை குழைவாக உச்சரித்தால் வார்த்தைகளை சிதைகின்றார் என்றும் கூறுகின்றோம்.

குழந்தையின் மழலை போன்ற ஒலிகள், ஒழுங்குபடுத்தப்பட மொழியின் உச்சரிப்புகளின் சிதைத்தலா? அல்லது இயல்பான மழலை ஒலிகளின் சிதைத்தல்தான் ஒழுங்குபடுத்தப்பட்ட மொழியா?

ஓவிய பயிற்சிகாலத்தில் உருவங்களை உள்ளது உள்ளது போல மிகத்துல்லியமாக தீட்டுதல் என்பது பயிற்றுவிக்கபடுகின்றது. அதுவே சில காலம் சென்றபின் ஒரு சாதாரண தன்மையினை பெற்றுவிடுகின்றது, இந்த நிலையிலிருந்து தம்மை வேறுபடுத்திகொள்ள ஓவியர்கள் அந்த ஒழுங்கினை உடைப்பது அல்லது சிதைப்பது எனும் செயல்முறையில் ஈடுபடுகின்றார்கள். உண்மையில் இது ஒரு செயற்கையான செயல்முறை, மேலும் இதிலுமேகூட ஒரு ஒழுங்கு வந்தடைகின்றது. இந்த முயற்சியில் வெற்றியடைபவர்களைவிட தோல்வியடைபவர்களே பெரும்பான்மையானவர்கள்.

உண்மையில் நாம் இங்கே உணரவேண்டியது, இந்த பயிற்சிமுறை தலைகீழாக இருப்பதென்பதையே. ஒருவர் தன்னுடைய இயல்பு நிலையிலேயே முதலில் இருக்கின்றார், அந்த இயல்புதன்மையினை சிதைத்துவிட்டு இதுவே ஒழுங்கு என்று அவரை கட்டமைக்கின்றோம். பின்னர் அந்த ஒழுங்கு, மற்ற அனைவரையும் போலவே உள்ளது என்பதால், அவருடைய தனித்தன்மையினை தேடி அலையசெய்கின்றோம். இந்த ஒழங்கு-சிதைப்பு என்ற கருத்துருவங்களை களைந்து ‘இயல்பு’ எனும் ஒரு தன்மையினை தொடக்கத்திலிருந்து ஒரு ஓவிய மாணவன் கடைபிடித்தால், தன்னுடைய தனித்துவமான தன்மை மிக எளிதாகவும் இயல்பாகவும் தன்னுடைய படைப்புகளில் வெளிப்பட்டுவிடும்.

இதனை முற்றிலும் உணர்ந்த பிக்காஸோவின்

‘ரஃபயல் போல அருமையாக ஓவியம் தீட்ட கற்றுக்கொள்ள எனக்கு நான்கு ஆண்டுகள் ஆனது, ஆனால் ஒரு குழந்தையை போல தீட்ட கற்றுக்கொள்ள என் வாழ்நாள் முழுதும் தேவைப்பட்டது ‘

என்ற கூற்று எத்தனை உண்மை என்பதை நாம் அறியமுடிகின்றது.

மிகுந்த மனசோர்விற்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளானவர்களிடம் உளவியலாளர்கள் கூறும் ஒரு உபாயம், ‘நீங்கள் உங்களுடைய சிறுவயதிற்க்கு மனதினை இட்டுசெல்லுங்கள், உங்கள் மகிழ்ச்சிக்கான திரவுகோல் அங்கே தான் இருக்கின்றது, அதனை கண்டெடுத்து நிகழ்காலத்திற்கு கொண்டுவந்துவிடுங்கள்’. தம்முடைய இயல்புதன்மையினை அறியும் ஒரு செயல்முறையில், சிறுபிள்ளைகள் போல ஓடிவிளையாடுவது, கடற்கரை மணலில் கூடிநின்று சிரிப்பது போன்ற செயல்கள் ஒரு நேர்த்தியான ஒழுங்கிலிருந்து ஏற்பட்ட சிதைப்புகள் அல்ல, அதுவே நம்மை நம்மிடமே இட்டுசெல்லும் ரகசிய பாதைகள்.

இங்கே நாம் காண்பது ஆஸ்திரிய (Austria)ஓவிய மேதை ஈகான் ஷீல (Egon Schiele)1917ஆம் ஆண்டு கீற்றிய ‘நிர்வாண ஆண்’ எனும் அச்சுபிரதி. ஒழுங்கு என கருதப்படும் உடற்கூறியலின் இலக்கணத்திலிருந்து சிதைக்கப்பட்டதல்ல இது, மாறாக இது இயல்பானதொரு வெளிப்பாடு. உடைகூறியலில் நன்கு தேர்ச்சிபெற்ற ஷீல, உண்மையில் தன் மனம் விரும்பியபடி கீற்றவேண்டும் என்று உணர்ந்து வியென்னாவின் புகழ்பெற்ற அகடெமி ஆப் பைன் ஆர்ட்சிலிருந்து விலகி மிக இயல்பாக கீற்றி தனக்கேயான ஒரு தனித்துவ தன்மையினை பல ஆயிரம் ஓவியங்கள்மூலம் வெளிபடுத்தினார்.

– – ஒவியர் கணபதி சுப்ரமணியம்

x
^