சீ (Chi) (Drawing : The Dancing Figure by Pontormo, 16th cent)

Sep 12 2018

Views: 3831

சீ (Chi)
(Drawing : The Dancing Figure by Pontormo, 16th century)

இயக்கமிகு மனித உடலின் இயக்கத்தின் ஆதாரம் உயிர். உயிர் என்பது உடலில் எங்கே உள்ளதென்று நம்மால் குறிப்பிட்டு சொல்ல முடியாது, அது மூச்சுகாற்றோ, இரத்த ஓட்டமோ, நரம்புமண்டல செயல்பாடோ அல்ல, அவற்றிற்கெல்லாமும் ஆதாரமான விசையே இந்த உயிர். மேலும் உடலின் இயக்கத்தினால் மட்டுமே உயிருள்ளதென்பதை நம்மால் அறிந்துகொள்ளமுடியும்.

ஒருவர் மரணமடைந்துவிட்டால் பொதுவாக மூச்சு நின்றுவிட்டதென்றோ, இதயம் துடிக்கவில்லை என்றோ நாம் கூறுவதில்லை, உயிர் பிரிந்துவிட்டதென்றே கூறுகிறோம். உயிரற்ற நிலையே மரணம். அதற்கு எதிர்மறையான நிலை இயக்கம்.

ஒரு பூனையினை நாம் கவனித்தோமேயானால் அது ஒரு கணப்பொழுதில் பத்துவித உடலசைவுகளை கொண்டிருப்பதை காணலாம். நம் கண்கள் ஒரே கணத்தில் அத்தனை அசைவுகளையும் உள்வாங்கி ஒருமித்த பலவடிவங்களை உணர்கின்றது. ஒரு புகைப்படம் மிக அதிவேக ஷட்டர் ஸ்பீடில் படம் பிடித்தால் அந்த பூனை ஒருவித செயற்கைத்தன்மையுடன் இருப்பதுபோல நமக்கு தோன்றும். காரணம், நாம் பல அசைவுகளை ஒரே கணத்தில் கண்டு பழகி, அதன் கூட்டுக்காட்சியே பூனையின் அசைவு என்றும் பூனைத்தன்மையென்றும் அறிந்திருக்கின்றோம். அவ்வாறு இல்லாத நிலையில் அது பூனைத்தன்மயினையே இழந்துவிட்டதுபோல தோன்றுகிறது.

இதனை நாம் மிக எளிதாக சில ஜல்லிக்கட்டு புகைப்படங்களை காணும்பொழுது உணரலாம். மிக அதிவேக இயக்கத்திலிருக்கும் காளையினை 1/1000 என்பது போல மிகக்குறுகிய கணத்தில் காமெரா பதிவிட்டிருக்க அது உண்மையிலேயே உறைந்துவிட்டதொரு காளைபோன்று நமக்கு காட்சியளிக்கும். திறமையான புகைபடக்கலைஞரின் புகைப்படத்தில் அதுபோன்று உறைந்துவிடாமல் உயிர்ப்புடன் காணப்படும். அங்கே ப்ளர் ஒரு மிக முக்கிய சாதனம்.

அதுபோலவே ஓவியத்தினை தீட்டும்பொழுது தீட்டப்படும் உருவம் சிலைபோன்று விறைப்பாக தோன்றுவதற்கு காரணம் அந்த உருவத்தின் வடிவத்திலும், வடிவங்களின் அமைப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு அதன் அசைவு அங்கே மறைந்துவிடுவதேன்பதே.

ஓவியங்களை நுட்பங்கள் நிறைந்த ‘காங்க்பி’ (Gongbi) மற்றும் உயிர்ப்புமிக்க ‘சீயி’ (Xieyi) என இரண்டு வகையாக பிரித்த சீனர்கள், சீயி வகை ஓவியத்தில் முதன்மையாக நாம் வெளிப்படுத்தவேண்டியது ‘சீ’ யினையே என்றனர். சீ (Chi) என்பது உயிர் எனும் பொருள்கொண்டது. ஒரு உருவத்தின் வடிவங்களைகாட்டிலும் அதன் உயிர்ப்பும் இயக்கமுமே ஓவியத்தில் நாம் கொண்டுவரவேண்டிய அம்சம் என்பதில் நாட்டமாக இருந்தனர்.

இதுபோலவே மறுமலர்ச்சிகால ஓவியர்கள் இன்று வாழ்ந்துகொண்டிருந்தால் என்ன படைத்துகொண்டிருப்பார்கள் என்ற கேள்விக்கு, தற்கால மேதையான அமெரிக்க ஓவியர் க்ளென் வில்ப்பு (Glen Vilppu) கூறுவது வியப்பளிக்கின்றது. மறுமலர்ச்சிகால மேதைகளெல்லாம் இன்று இருந்தால் அவர்கள் அனிமேஷன் செய்துகொண்டிருப்பர்கள் என்று கூறுகிறார். அனிமேஷன் என்பது அசைவு அல்லது இயக்கம். அந்த இயக்கத்தினையே படைத்துகொண்டிருப்பார்கள் என்கிறார் வில்ப்பு. இன்றைய அனிமேஷன் மேதைகளுக்கெல்லாம் மனித உருவம் வரைவதை கற்றுகொடுத்தவர் வில்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 25ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே குகையில் தீட்டப்பட்ட ஓவியங்களில் இந்த இயக்கத்தினை நம்மால் காண முடிகின்றது. பல பரிமாணங்களை இருபரிமாணத்தில் செயற்கையாக கொண்டு தீட்டப்பட்ட க்யூபிஸ ஓவியங்கள்போலல்லாமல், டுஷான் போன்ற ஓவியர்களின் காலத்தினை காட்சிபடுத்தும் அணுகுமுறையிலுமில்லாமல் ஒரு ஓவியமே அந்த இயக்கத்தினை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன அந்த குகை ஓவியங்கள்.

ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலையில் இயக்கத்தில் இருக்கும் பொழுது அந்த வடிவத்திலேயே நாம் கவனம் செலுத்தி, உடற்கூறியல், விகிதங்கள் என்று நாம் கீற்றுகின்றோம், அந்த மனிதனின் உயிர்ப்பினையும் இயக்கத்தினையும் எவ்வாறு தீட்டுவது?

மேற்பரப்புகளிலேயே உழன்றுகொண்டிருக்கும் நம் மனதினை சற்று அதிலிருந்து விலக்கி, அந்த உருவத்தின் இயக்கத்தினை கவனிக்க செய்யவேண்டும். ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கைகளை கடந்து அதன் படபடப்புகளை மாத்திரமே கவனிக்க வேண்டும், ஒரு பூனைக்குட்டியின் முகம், கை, கால்கள் வால் என்று கவனிக்கும் மனதினை அப்பூனையின் அசைவுகளை மட்டுமே காணச்செய்யவேண்டும், அதனுடைய வால் மட்டும் சிலநேரம் ஒரு பழைய கடிகாரத்தின் பெண்டுலத்தினை போல அசைவதை கவனிக்க வேண்டும், அப்பூனை என்ன நிறம், அதன் பரப்பில் ரோமங்கள் அமைந்த விதம் அதன் முகத்திலுள்ள வரிவடிவங்கள் என்பதுபோன்ற விவரங்களை களைந்து அதன் இயக்கத்தில் இணையவேண்டும், இந்த நிலையில் நாம் காகிதத்தில் கீற்றும் கோடுகள் பூனையினை வடிவமைக்காமல் அதன் அசைவுகளை மட்டுமே பதிவிடவேண்டும்.

இந்த செயல்முறை சற்று எதிர்மறையாக தோன்றினாலும் காலபோக்கில் நாம் ஒரு உருவத்தினை கடந்து அதன் இயக்கத்தினை மட்டுமே கவனிக்கவும், அதனை கித்தானில் கொண்டுவரவும் மிக இயல்பாக அறிந்திருப்போம்.

ஒரு சமயம் நான் சென்னையின் கிண்டியிலுள்ள சிறுவர் பூங்காவிற்கு அங்கிருக்கும் சிறிய விலங்குகளையும் பறவைகளையும் வரைவதற்காக சென்றிருந்தேன். அங்குள்ள பெரிய பறவைகளின் கூடத்தினருகே சென்று அங்குள்ள பலவகை பறவைகளை காணத்தொடங்கினேன். குறிப்பாக அங்கே இருந்த நாரைகள் என்னை ஈர்த்தன.

மிக பெரிய அளவிலான நாரைகள் தரையிலும், அங்கிருந்த மரத்தின் கிளைகளிலும் அமர்ந்தவண்ணமிருந்தன, அவற்றை என்னுடைய காகிதத்தினில் பேனாவினை கொண்டு கீற்றினேன், அதன் நீண்ட அலகு, அதன் தலை கழுத்துடன் அமுங்கியவிதம், அதன் கால்களின் பாதங்கள் என்று அவற்றின் தனித்துவமிக்க தன்மைகளை கவனித்து வரைந்துகொண்டிருந்த சமயம், ஒரு குட்டி நாரை, திடீரென பறந்தும் ஓடியும் அருகே வந்தது, ஒரு கணப்பொழுது கூட அமைதியாக இல்லாமல் அது தொடர்ந்து பறக்க முயற்சிப்பதும், ஓடுவதுமாக, விளையாடிகொண்டிருந்தது, அதனை கவனித்த நான், அதனை வரைய முற்பட்டேன், உண்மையில் அதன் உடலையோ அங்கங்களையோ வரைய அவகாசமே இல்லாத நிலையில் வெறும் கீற்றுகளாக அதன் அசைவுகளை மட்டுமே பதிவிட்டுகொண்டிருந்தேன், ஒன்று, இரண்டு அல்லது மூன்றே கோடுகள் கீற்றுவதற்குள் அது வேறு ஒரு நிலைக்கு சென்றுவிடும், நானும் தொடர்ந்து இந்த மிக குறைந்த கோடுகளால் அதன் இயக்கத்தை கீற்றிகொண்டிருக்கையில், நான் உண்மையில் அந்த பறவையின் இயக்கத்துடனேயே இணைந்துவிட்டதை உணர்ந்தேன். அங்கே என் கண் முன்னர் அந்த சிறிய பறவை ஆனந்தமாக விளையாடி என்னுடன் அந்த கணங்களை பகிர்ந்து கொள்ள முயலுகையில், நான் ஒரு காகிதத்தில் ஏதோ கிறுக்கிகொண்டிருந்ததை பெரும்பிழயாக உணர்ந்து, காகிதத்தினை தள்ளிவைத்துவிட்டு அந்த பறவையினை கவனிக்க தொடங்கினேன்.

இங்கே நாம் காணும் செயல்கீற்று ஓவியம் (Gesture Drawing), பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய ஓவியர் பொன்டாரமோ (Pontormo) கீற்றிய நடனமாடும் உருவம் (The Dancing Figure) என்று அழைக்கபடுகிறது. ஒரு ஓவியத்திற்கான மாதிரியாகவோ, அல்லது ஒரு பயிற்சியாகவோ அவர் இதனை கீற்றியிருக்கலாம். மானரிசம்(Mannerism) எனும் பாணியில் பயணித்த பொன்டாரமோ, ஒரு உருவத்திலுள்ள இறுக்கமான விசை, பதற்றம், ச்திரமின்மை போன்ற தன்மைகளையே முதன்மையாக கண்டு ஓவியங்களை தீட்டினார், அவர் உண்மையில் தீட்டியது அந்த உடலை அல்ல, .அதனை இயக்கும் உயிராகிய ‘சீ’யையே (Chi) தீட்டினார்.

 

– ஓவியர் கணபதி சுப்ரமணியம்

x
^