கனவு பசியும், நிஜ உணவும்.

Oct 17 2018

Views: 3728

கனவு பசியும், நிஜ உணவும்
(Installation : One and Three Chairs by Joseph Kosuth, 1965)

இரவு ஒரு சமயம் நாம் உறங்கசெல்லும் பொழுது, படுக்கைக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சில பழங்களையும், நீரும் வைத்துகொள்கிறோம். ஏற்கனவே நன்கு பசியாறிவிட்டிருந்தாலும் இதனை ஒரு தேவைக்காக வைத்துகொண்டு, நாம் படுக்கையில் சாய்ந்து, ஒரு புத்தகத்தினை வாசித்தவண்ணம் விரைவில் உறங்கிவிடுகின்றோம்.

மிக அசதியான நாட்களில் நாம் விரைவிலேயே கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கத்தினுள் பயணித்துவிட்டிருப்போம், அவ்வாறு இல்லாத சில நாட்களில் நம்முடைய மனம் முற்றிலும் அசதியுராமல் தொடர்ந்து ஒரு விழிப்புடன் தானே உருவாக்கிய பிரத்தியேக கனவுலகில் சஞ்சரித்துகொண்டிருக்கும். கனவினை நாம் கண்டுகொண்டிருக்கும் பொழுது அது முற்றிலும் நிஜமான தோற்றத்தையே கொண்டிருக்கும், விழித்தபின்னரே அது கனவென்று நாம் உணரமுடியும்.

கனவுகளில் நாம் அடையும் அனுபவங்கள் பலவகையானவை, சிலவற்றை நாம் விரும்புகின்றோம், சிலவற்றை விரும்புவதில்லை. சுகமான மென்மையான கனவுகள், நிம்மதியற்ற அலைகழிக்கும் கனவுகள், உடலை அசைக்கமுடியாததுபோல அசௌகரியமான கனவு, வெறும் கால்களை கொண்டு பறப்பது போன்ற விசித்திர கனவு, மூச்சு திணறுவது போன்ற கனவு, பயமுறுத்தும் உருவங்கள் நம்மை துரத்தும் கனவு, பிரபலங்களுடன் நாம் உரையாடுவது போன்ற கனவு என நாம் வாழ்நாளில் எண்ணற்ற கனவுகளில் உலவிவருகின்றோம். எவ்விதமான கனவானாலும் ஆழ்ந்த உறக்கமோ அல்லது விழிப்போ ஏற்பட்டு அது முற்றுபெற்றுவிடுகின்றது.

கனவெனும் இந்த அனுபவம் யாருக்கு ஏற்படுகின்றதென்று ஆராய்ந்து பார்த்தால், பல விசித்திர உண்மைகள் நமக்கு புலப்படும். கனவு காணும் ‘நான்’ இங்கே படுக்கையில் உறங்கிகொண்டிருப்பதால் அது எனக்கு ஏற்படுவதில்லை என்பது உறுதியாகின்றது, கனவுக்குள்ளே வரும் ‘நான்’ என்பதோ ஒரு கற்பனை கதாபாத்திரம் என்பதால் அந்த அனுபவம் அந்த கதாபாத்திரதிற்கும் ஏற்படுவதில்லை. கனவெனும் அனுபவம் ஏற்பட்டுள்ளது, ஆனால் யாருக்கேற்பட்டது என்ற விடையற்ற முரணாக அமைகின்றது கனவு.

‘நான்’ எனும் அந்த ஒன்றை தீவிரமாக தேடியபின்னர் நாம் அறியும் ஒரு பேருண்மை என்னவென்றால், நம் உணர்வுகளின், எண்ணங்களின், அடித்தளமான அந்த உண்மையான ‘நான்’ இந்த உலகில் இல்லை என்பதே, காரணம் நம்முடைய உடலின் எந்த ஒரு புள்ளியையும் குறிப்பிட்டு இதுவே அந்த ‘நான்’ என்று நம்மால் சொல்லிவிடமுடியாது..

உண்மையில் நிஜமென நாம் எண்ணும் இந்த உலகமும் கனவு போன்றதே, அது ஒரு ஒப்பீட்டளவிலான நிஜம் (Relative Reality).
கனவு காண்பவனும் கனவுக்குள் சஞ்சரிக்கின்றவனும் வெவேறு நிஜங்களில் இருப்பது போலவே, உண்மையான நான் என்பது ஒரு நிஜத்திலும், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகம் வேறொரு நிஜமாகவும் இருக்கின்றது என்பதே இந்த புரிதல்.

மெய்சாரா ஓவியங்கள் இந்த உலகிற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத ஓவியங்கள். அவற்றில் ஓவிய தனிமங்களான கீற்று, வடிவம், உருவம், வண்ணம், ஒளித்திண்மை, இழைணயம், வெளி போன்றவைகளின் கட்டமைப்பே படைப்பாக வெளிபடுகின்றது.

மெயசார்ந்த ஓவியங்கள் நாம் நன்கு அறிந்த இந்த உலகமெனும் ஒரு நிஜத்தினை சார்ந்தது, அதிலுள்ள வடிவங்கள் அதன் செயல்பாடுகள் போன்றவற்றை அடித்தளமாக கொண்டது. மெய்சாரா ஓவியங்கள் இந்த உலகைமட்டுமே சாராத வேறு நிஜங்களின் வெளிப்பாடு. நாம் ஒரு மெய்சாரா ஓவியத்தினை காணும்பொழுது நமக்கு ஏற்படும் அனுபவம் இந்த உலகை சாராத ஒரு அனுபவம், ஆனால் அந்த அனுபவம் ஏற்படுவது இந்த உலகில் தான்.

மெய்சார்ந்த ஓவியங்கள் கித்தானை ஒரு ஜன்னலாக நம்மை அணுகச்செய்கின்றன, அங்கே உண்மையில் இருப்பதென்னவோ வண்ண களிம்புகளும், மையும், கரியும் தான் ஆனால் அவை நம்மை காணச்செய்வதோ ஒரு நீர்வீழ்ச்சியையும், மனித உடல்களையும் பூனைக்குட்டிகளையுமே. சற்று சிந்தித்து பார்த்தால் மருட்சிகளான அவை ஒரு மெய்சார்ந்த பொய். அவற்றிடம் நாம் அடையும் அனுபவமும் ஒரு பொய்யான அனுபவம். ஒரு நிஜத்திலிருந்து மற்றொரு நிஜத்திற்கான செயற்கை பாலமே மெய்சார்ந்த ஓவியம். அது ஒரு காட்சிப்பிழை போன்றது.

மெய்சாரா ஒவியங்களோ நம்மை நம் கண்முன்னே இருக்கும் கித்தானையும், அதன் மீது தீட்டப்பட்டிருக்கும் வண்ணக்களிம்புகளையும் அதிலிருக்கும் கீற்றுகளையும் வடிவங்களையுமே காணச்செய்கின்றன, மெய்சாராமல். மெய்யுணர்த்தும் ஓவியங்கள் அவை. அவை தரும் அனுபவங்கள் நிஜமான அனுபவங்கள். அங்கே பொய்யேதுமில்லை, மருட்சிகளும் இல்லை, பிழையற்ற காட்சி மெய்சாரா படைப்பு.

கனவுக்குள் நமக்கு திடீரென பசியெடுத்துவிடுமேயானால், நாம் தூங்கிக்கொண்டிருக்கும் படுக்கைக்கருகில் இரவு நாம் வைத்த பழங்கள் நமக்கு உதவாது. கனவுக்குள்ளேயே நம்முடைய உணவினை நாம் தேடி உண்ணவேண்டும். அதுபோலவே உறங்கிகொண்டிருக்கும் நமக்கு உண்மையில் பசியெடுத்தால் கனவினில் பசியாறமுடியாது, விழித்து, உண்மையில் உண்டபின்னரே பசியடங்கும். ஒரு நிஜத்திலுள்ள பொருள் மற்றொரு நிஜத்தில் நம்முடைய அனுபவத்திற்கும் உபயோகத்திற்கும் கிட்டுவதில்லை.

இங்கே நாம் காண்பது 1965ஆம் ஆண்டு அமெரிக்க கருத்துருவ கலைஞர் ஜோசப் காசத் (Joseph Kosuth) உருவாக்கிய ‘ஒன்று மற்றும் மூன்று நாற்காலிகள்’ (One and Three Chairs) எனும் கருத்துருவ படைப்பு (Conceptual Art). மூன்று பாகங்கள் கொண்ட அந்த படைப்பில் அவர் நிறுவியது ஒரு நிஜமான நாற்காலி, அதன் அருகில் அந்த நாற்காலியின் அதே அளவிலான புகைப்படம், இன்னொருபக்கம் ‘நாற்காலி’ எனும் சொல்லின் அகராதி விளக்கம். இந்த மூன்று பாகங்களில் எது நிஜமானது எனும் கேள்வியினை எழுப்பினால் , புகைப்படம் உண்மையான நாற்காலியல்ல என்பதால் அது நிஜமாகாது, நாற்காலியும் கூட அது என்ன என்று புரியாதவர்களுக்கு அர்த்தமில்லாததாகிவிடும், ஆகவே அகராதி விளக்கம் மட்டுமே இங்கே நிஜமானது என்று இந்த கேள்விக்கு ஒரு பதில் கூறப்படலாம்.

நிஜம்-பொய் எனும் கருத்தும், எது நிஜம், எது நிஜமல்ல எனும் கேள்விகளும் படைப்பாளிகளை தொடர்ந்து சிந்திக்கவைத்துகொண்டே இருக்கின்றது, அவற்றிலிருந்து பல வினோத படைப்புகளும் தொடர்ந்து நம்மை வந்தடைந்துகொண்டே இருக்கின்றன.

– ஓவியர் கணபதி சுப்ரமணியம் 

x
^