Jun 19 2023
ரயிட்டர்ஸ் பெண்ட் (Writer’s Bend) பற்றி கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள் என்று கேட்டவர்களுக்காக இந்த பதிவு.
எழுத்தாளர் தனக்கு ஏற்ற வகையில் கதையை ஆங்காங்கே வளைத்துக்கொள்வதை தான் ரயிட்டர்ஸ் பெண்ட் என்கிறோம். கதையின் போக்கை எழுத்தாளர் தனக்கு ஏற்றவாறு தீர்மானிக்கிறார். அப்படி செய்யும்பொழுது கதாப்பாத்திரத்தின் தன்மை, அதற்கு முன் இருந்த கதை சூழல், களம் என்று எல்லாமே பாதிக்கப்படலாம். எழுத்தாளர் அதை வேண்டுமென்றே வளைப்பதில்லை. பல நேரங்களில் அந்த காட்சியின் சுவாரசியத்தை கூட்ட, நடிகரின் ரசிகர்களை திருப்திப்படுத்த என்று விதியை மீறலாம். கதையின் போக்கை தீர்மானிக்க முடியாத எழுத்தாளர்களும் இந்த சூத்திரத்தினை பயன்படுத்துவார்கள்.
சிறுவர்கள் திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடும்பொழுது நீ இப்படி செய் நான் அப்படி செய்கிறேன் என்று பேசி வைத்துக்கொண்டு விளையாடுவது வழக்கம். அந்த யுக்தியை திரைப்படத்தில் பயன்படுத்த முடியாது. திரைப்படத்தில் கதை கருவை குறைத்த பட்சம் எழுபது காட்சிகளாக உருவாக்க வேண்டும். அந்த நேரத்தில் கற்பனை வறட்சி வந்தாலோ, கதையின் போக்கை தீர்மானிக்க முடியாமல் போனாலோ ரயிட்டர்ஸ் பெண்ட் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
நல்ல காட்சி வடிவ திரைக்கதை மூலமாக இந்த வளைவை மறைக்க முடியும். பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் மக்கள் பெரிதாக இந்த பெண்டை கண்டுகொள்வதில்லை. அதுவே திரைக்கதை சுவாரசியமாக இல்லாமல் போனால் ரயிட்டர்ஸ் பெண்ட் பளிச்சிட்டு மக்களுக்கு தெரிந்துவிடும்.
எழுத்தாளர்களின் கற்பனை தடங்கலும், வெற்றி பெற்ற திரைப்படங்களின் பாதிப்பும் இவற்றை மேலும் அதிகரிக்கும். அந்த உலக திரைப்படத்தில் இது போன்ற காட்சியை எப்படி கையாண்டிருக்கிறார்கள் தெரியுமா என்று நல்ல காட்சியையும் சிலர் குழப்பி வளைவை உண்டாக்கி விடுவார்கள்.
டாடா திரைப்படத்தில் கிளைமாக்சில் கதாநாயகி கதாநாயகனிடம் ஏன் அவனை விட்டு சென்றாள் என்று சொல்கிற காட்சி வரும். அதில் தனக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக பெற்றோர் சொன்னதும் அதை நம்பி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியதாக சொல்வார். அந்த காட்சியை பார்த்த மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருப்பார்கள். நிஜத்தில் குழந்தை இறந்துவிட்டதென்று பெற்றோர்கள் சொன்னாலும், கணவன் மீது கோவம் இருந்தாலும் தான் பெற்ற பிள்ளையின் முகத்தை அந்த தாய் பார்க்காமல் இருப்பதில்லை. இறந்த அந்த குழந்தையை வாரி அணைத்து கதறிவிடுவது தான் இயற்கையான காட்சி அமைப்பு. திரைப்படத்தில் குழந்தை தந்தையிடம் வாழவேண்டும் என்பதற்காகவே கதையில் ரயிட்டர்ஸ் பெண்ட் கொடுத்து அம்மா இறந்த குழந்தையை பார்க்காமலேயே சென்றுவிடுவதாக எழுதியிருக்கிறார்கள். இறந்த குழந்தைக்கு யார் கடைசி காரியம் செய்வார்கள் என்று கூடவா அந்த பெண் நினைத்திருக்கமாட்டாள். பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு செல்கிறேன் அதனுடைய அப்பா வருவார் கொடுத்துவிடுங்கள் என்றால் எந்த மருத்துவமனை நிஜத்தில் அப்படி செய்வார்கள்?
விக்ரம் திரைப்படத்தில் கமல் குண்டு வெடித்து இறந்துவிட்டதாக போலீஸ் அதிகாரி சொல்வார். பிறகு ஒரு காட்சியில் கமல் அந்த குண்டு வெடிப்பிலிருந்து தப்பித்து போலியான கால் ஒன்றை அங்கே வைக்கும் காட்சி காண்பிக்கப்படும். அப்படியானால் குண்டு வெடிப்பை ஆய்வு செய்த போலீஸ் அங்கே உடல் சிதறிக்கிடக்காமல் ஏதோ ஒரு கட்டை கால் மட்டுமே இருக்கிறது என்று தெரியாதா? கமல் இறக்கவே இல்லை என்று அந்த ஆய்வின் மூலம் தெரியாதா?
எது காட்டப்படுகிறதோ அதையே மக்கள் நம்பிவிடுவார்கள் என்கிற எழுத்தாளரின் தன்னம்பிக்கை தான் ரயிட்டர்ஸ் பெண்டை உருவாக்குகிறது. இதையெல்லாம் மக்கள் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்து செய்த காரியங்கள் பல நேரங்களில் கை கொடுக்காமல் போயிருக்கிறது.
SPEC SCRIPT
ஸ்பெக் ஸ்கிரிப்ட் (Spec Script) பற்றி தெரிந்துகொள்ளுங்கள். திரைக்கதை எழுத்தாளராக நீங்கள் ஜெயிக்க விரும்பினால் முதலில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது ஸ்பெக் ஸ்கிரிப்ட் பற்றித்தான். தொண்ணூறு சதவிகிதம் இது எழுத்தாளர்களுக்கு பாதகமாத்தான் அமைகிறது.
ஸ்பெக் ஸ்கிரிப்ட் என்பது இரெண்டு அல்லது அதற்கு மேல் எழுத்தாளர்கள் ஒன்று கூடி கதை, திரைக்கதை அமைப்பதாகும். இதில் ஒருவருக்கோ அல்லது எல்லோருக்குமோ அந்த கதை சொந்தமாக கருதலாம். ஆனால் இங்கு யாருக்கும் சம்பளம் இல்லை. இப்படி உருவாகும் கதையை தயாரிப்பாளரிடமோ அல்லது ஓ டி டி யிடமோ அனுப்பி அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே பணம் கிடைக்கும்.
இது உடனடியாக நடக்கக்கூடிய காரியம் அல்ல. கதை முழுவதுமாக எழுத நான்கு மாதங்கள் ஆகிறது என்றால் இதில் பங்கு பெரும் எந்த எழுத்தாளர்களுக்கும் எந்த விதமான வருமானமும் இதிலிருந்து கிடைக்காது. பிறகு தயாரிப்பாளரையோ, ஓ டி டி யையோ தேடுவதற்கும், அனுமதி வாங்குவதற்கும் ஆகிற காலங்களிலும் யாருக்கும் வருமானம் இருக்காது.
இரண்டு இணைபிரியா நண்பர்கள், வேறொரு இடத்திட்டத்தில் வேலை பார்த்து வருமானம் ஈட்டும் நபர்கள் கூடி செய்தால் அவர்களுக்குள் பிரச்சனை வராது. தினம் தினம் கஷ்டப்படுபவர்களுக்கு இந்த வழி சரிப்படாது. ஆனால் இங்கு இருக்கும் அனைத்து எழுத்து வாய்ப்புகளும் ஸ்பெக் ஸ்கிரிப்ட் தான். ஆனால் இதை யாரும் வெளியில் சொல்ல மாட்டார்கள். தயாரிப்பாளர் இருப்பது போலவே பேசி வேலையை வாங்கிவிடுவார்கள். கடைசியில் பணம் தர முடியாத பொழுது இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்படும்.
இதற்கு முன் நான் எழுதிய கட்டுரையில் மூன்று விதமான எழுத்தாளர்களைப்பற்றி குறிப்பிட்டிருந்தேன். காட்சி வழி, ஒலி வழி மற்றும் உணர்வுகள் வழி. ஒலி திறன் அதிகமாக உள்ள எழுத்தாளர்களுக்கு யாருடைய துணையும் தேவை இல்லை.. தானே முழு திரைக்கதையும் எழுதிப்பிடுவார். ஆனால் காட்சி மற்றும் உணர்வுகள் திறன் கொண்ட எழுத்தாளர்களுக்கு தான் ஒலி திறன் கொண்ட எழுத்தாளரின் துணை தேவை.
– Sai Vijendhiran