Aug 13 2026
HONOR மற்றும் ARRI நிறுவனங்களின் கூட்டாண்மை, ஸ்மார்ட்போன் கேமரா தொழில்நுட்பத்தை திரைப்படக் கேமரா பணிச்சூழலுக்கு (Cinema Workflow) நெருக்கமாகக் கொண்டு செல்லும் முக்கிய முயற்சியாகும்.
Robot Phone-ல் உயர் திறன் கொண்ட 200MP பட உணரிகள் (Image Sensors), HONOR-ன் தனிப்பட்ட H1 படச்செயலாக்கச் சிப் (Image Processing Chip) மற்றும் இயந்திர நிலைப்படுத்தல் கொண்ட Gimbal Camera ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனால் கேமரா அசைவுகள், அதிர்வுகள் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் ஏற்படும் இரைச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, தெளிவான மற்றும் நிலையான காட்சிகளைப் பதிவு செய்ய முடிகிறது.

இதில் ARRI-ன் முக்கிய பங்களிப்பு வெறும் “சினிமா நிறம்” வழங்குவதில் மட்டும் இல்லை. ARRI LogC3, ARRI Wide Gamut 3 மற்றும் ARRI Image Science போன்ற தொழில்முறை படக்கருவியல் அணுகுமுறைகள் ஸ்மார்ட்போன் பதிவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதன் மூலம் ஒளி அதிகமாக உள்ள பகுதிகளில் மென்மையான Highlight Roll-off, நிழல் பகுதிகளில் கூடுதல் விவரங்கள் மற்றும் இயற்கையான Skin Tone ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
மேலும், Log வடிவில் பதிவு செய்வது காட்சியின் ஒளி மற்றும் நிறத் தகவல்களை அதிக அளவில் பாதுகாக்க உதவுகிறது. இதனால் பின்னணி நிறச்சீரமைப்பு, வெளிச்சச் சரிசெய்தல் மற்றும் பிற காட்சிகளுடன் நிறப் பொருத்தம் செய்வது போன்ற பணிகளில் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அதிக கட்டுப்பாடு கிடைக்கிறது.
இதன் உண்மையான சிறப்பு 200MP என்ற எண்ணிக்கையில் மட்டும் இல்லை.
பட உணரி + படச்செயலாக்கச் சிப் + இயந்திர நிலைப்படுத்தல் + கணக்கீட்டு படக்கருவியல் + ARRI நிற அறிவியல் + Log பணிச்சூழல் ஆகிய அனைத்தும் ஒரே அமைப்பில் இணைக்கப்படுவதுதான் இந்தக் கூட்டாண்மையின் முக்கியத்துவம்.

இதன் மூலம் எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது வெறும் புகைப்படம் மற்றும் காணொளி பதிவு செய்யும் கருவியாக இல்லாமல், திரைப்பட உருவாக்கத்திற்கான ஒரு சிறிய தொழில்முறை படக்கருவியாகவும் வளரக்கூடிய வாய்ப்பை HONOR × ARRI கூட்டாண்மை வெளிப்படுத்துகிறது.
— கட்டுரை: CJ Rajkumar